நோன்பு தரும் பயிற்சி (வீடியோ)

“நோன்பு தரும் பயிற்சி” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ.

மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள விரும்பும் ஓர் மனிதர், இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை (Spiritual  Training) நோன்பு நோற்பதின் மூலம் அவர் பெற்றுக் கொள்கிறார். உதாரணமாக ஒரு நோன்பாளி, ஹலாலான முறையில் உழைத்துச் சம்பாதித்த பொருட்களிலிருந்து உண்பது அவருக்கு அனுமதியளிக்கப்பட்டதாக இருந்தாலும், அந்த உணவை ரமளானின் பகல் நேரத்தில் உண்ணாமல் தவிர்த்துக் கொள்கிறார். காரணம் அது அல்லாஹ்வின் கட்டளை!

நோன்பாளியின் வீட்டில், தனிமையில் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை என்ற நிலையில் அவரைத் தவிர யாருமில்லாமல் தனித்து இருந்தாலும், அங்கு அறுசுவை உணவுகளும் கண் முன்னால் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்தாலும், அந்த நேரத்தில் பசியோ, தாகமோ, அவற்றை உண்ணவேண்டும் என்ற ஆவலோ ஏற்பட்டாலும் ‘சாப்பிடக் கூடாது’ என்ற அல்லாஹ்வின் கட்டளையினால் அவர் அவற்றைச் சாப்பிடுவதில்லை.  யாருமே பார்க்காவிட்டாலும் நோன்பாளி சாப்பிடுவது ஒரு கவளம் உணவாக‌ இருந்தாலும், ஒரு மிடறு தண்ணீராக இருந்தாலும் அல்லாஹ் அறிபவனாக இருக்கிறான். படைத்தவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளச்ச‌ம் ஒரு நோன்பாளியின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலும், அல்லாஹுதஆலா இட்ட கட்டளையை மீறினால் மறுமையில் தண்டனைக்குரியவர்களாக ஆகிவிடுவோம் என்ற இறையச்சமும் அவர் தம் உணவையே சாப்பிடுவதை விட்டும் தடுக்கிறது.

ஆக, நோன்பாளி சாப்பிடுவதை யாருமே பார்க்க முடியாத சூழலிலும் இறைவன் பார்க்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்குச் சொந்தமான, ஹலாலான உணவை ரமளானின் பகல் நேரங்களில் ஒதுக்கி வைக்கும் அதே மனப் பயிற்சியை, கட்டுப்பாட்டை, உறுதியை, ரமளான் அல்லாத மாதங்களிலும் அதே இறையச்சத்துடன் விலக்கப்பட்ட காரியங்களிலிருந்து முழுமையாக விலகி வாழத் தொடங்கிவிட்டால், அதுதான் ரமளான் மாதத்தில் பெற்ற அந்த ஆன்மீகப் பயிற்சி!

அதை ஒருவர் தனது வாழ்நாள் முழுதும் கடைபிடிக்கும்போது நோன்பின் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவராக ஆகிவிடுகிறார். (இன்ஷா அல்லாஹ்!)

இதை வாசித்தீர்களா? :   முஸ்லிம்களிடையே பகைமைத் தீ!