பணியாளை விடச் சிறந்தது எது?

Share this:

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் மருமகன், அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :  

 

திரிகைச் சுற்றி (தானியங்களை அரைப்பதனால்) தாம் அடையும் வேதனை குறித்து (நபி(ஸல்) அவர்கள் அன்பு மகளும், எனதருமை மனைவியுமான) ஃபாத்திமா (ரலி) அவர்கள் முறையிட்டார்கள்.

 

இந்நிலையில் போர்க்கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர்.

உடனே ஃபாத்திமா(ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வீட்டு வேலைக்காக கைதி எவரையாவது கேட்டு வாங்கி வரச்) சென்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை;  (அவர்கள் அன்பு மனைவி) ஆயிஷா(ரலி) அவர்களைத்தான் கண்டார்கள். ஆகவே தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா(ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

 

நபி(ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்த போது ஆயிஷா(ரலி)அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்கள் வந்ததைத்(பற்றிய விபரங்களை) தெரிவித்தார்கள். உடனேநபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபி(ஸல்) அவர்களை கண்டவுடன் நான் எழுந்து நிற்க முனைந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் நீங்கள் (இருவரும்)உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்தார்கள். எந்த அளவு எனில் அவர்கள் கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன்.

 

பிறகு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் , "நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய(உதவி)தனை விடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத் தரட்டுமா? (என்று கேட்டு), நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்கு செல்கையில் முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லுங்கள் , முப்பத்து மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லுங்கள் , முப்பத்து மூன்று முறை அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.

 

ஆதார ஹதீஸ் நூல்: புகாரி, ஹதீஸ் எண்: 3705.  

 

ஒருவர் உறங்கச் செல்கையில் தொடர்ந்து இந்த திக்ருகளை ஓதிவந்தால் அவருக்கு வேலைப்பளுவினால் ஏற்படும் களைப்பை அல்லாஹ் போக்கிவிடுவான். உடலுக்கும் உள்ளத்திற்கும் இதனால் புத்துணர்வு ஏற்படும் (இர்ஷாதுஸ் ஷாரீ ).

 

நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை அடியொற்றி வாழவேண்டும் என்ற ஆவலுடைய முஸ்லிம்களுக்கு இச்செய்தியில் மிகப்பெரிய படிப்பினையும் வழிகாட்டியும் உள்ளது.

 

ஆதாரப்பூர்வமான செய்திகளிலிருந்து நபி(ஸல்) அவர்களின் அருமைப் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்கள் மிகவும் பலவீனமானர்களாகவும், உடல் மெலிந்தவர்களாகவும் இருந்ததாக அறிய முடிகிறது.

 

தான் மிகவும் நேசித்த தனது மகள், அவர்களது இயலாமையையும் கஷ்டத்தையும் கூறி ஒரு சிறிய உதவிய கோரிய பொழுது கூட, "தனது அனைத்து தேவைகளையும் வேறு யாருடைய உதவியும் இன்றி தானே செய்வதை அதிகம் விரும்பி, ஆட்டிலிருந்து பால் கறப்பது முதல் தனது கிழிந்த ஆடையை தைப்பது வரை அனைத்து பணிகளையும் தானே செய்து வாழ்ந்த" நபி(ஸல்) அவர்கள் தனது மகளுக்கும் அதனையே விரும்பி அத்தனை கஷ்டம் வந்து வாய் திறந்து கேட்ட பின்பு கூட அதனை வழங்காமல் மன அமைதிக்கும், உடல் களைப்பிற்கும் இறைவனிடம் துஆ செய்ய கற்றுத் தருகின்றார்கள்.

 

இங்கு நபி(ஸல்) அவர்களுக்கு தனது மகள் இம்மையில் சற்று கஷ்டங்களை அனுபவித்தாலும் பரவாயில்லை; நாளை மறுமையில் இறைவனிடம் கிடைக்கும் பாக்கியங்களில் எதுவும் தனது மகளுக்குக் குறைந்து விடக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததை அறிய முடிகிறது.

 

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மிகப்பெரிய அரபுத் தீபகற்பத்தின் பேரரசராக இருந்த நேரத்தில் சாதாரண கயிற்றுக் கட்டிலில் உறங்கி அவர்களின் முதுகில் கயிற்றின் அடையாளங்கள் விழுந்திருந்ததை கண்டுப் பொறுக்க இயலாமல், "முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட தாங்கள் சற்று சௌகரியமாக இருக்கலாமே?" எனக் கேட்ட உமர்(ரலி) அவர்களுக்கு எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய மறுமொழி இவ்விடம் நினைவு கூரத்தக்கது.

 

"தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை ஒருவன் உண்மையான முஃமின் ஆக முடியாது" என்று கூறி அதனை செயல்வடிவில் தனது மகளிடம் காட்டி முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக நபி(ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்.

 

இவ்வுலகில் தான் விரும்புபவர்களுக்கு பொன்னும், பொருளும், பணமும் கொடுப்பதையே அதிகம் விரும்பும் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும், "என் மகள் ஃபாத்திமா(ரலி) தனது இதயத்திற்கு ஒப்பானவர்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறும் அளவிற்கு ஃபாத்திமா(ரலி) அவர்களின் மீது அன்பு வைத்திருந்த நபி(ஸல்) அவர்கள், தனது பாசத்திற்குரிய மகள் கேட்ட உதவிக்கு என்ன வழங்கியிருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தால் இவ்வுலக சுகங்கள் அனைத்தும் அற்பமானது; நிலையற்றது என்பதை கூறாமல் கூறுவது விளங்கும்.

 

ஆக்கம்: இப்னு ஹனீஃப்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.