கோபத்தால் ஆகாதெனினும்…!

மது அன்றாட வாழ்வில் வாதங்கள், சர்ச்சைகள் என்பதை ஒவ்வொரு கணத்திலும் சந்தித்து வருகிறோம். சாதாரணமாகவே எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் நம் மனதில் தோன்றிய எண்ணத்திற்குத் தடையாகவோ அல்லது நம் எண்ண ஓட்டத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துகளோ ஆலோசனைகளோ முன்வைக்கப்படும்போது மனதில் விசாலமின்றி அவற்றை எதிர் கொள்வதால் நமது குறுகிய சிந்தனைகள்/முன் முடிவுகள் சர்ச்சைகளுக்குத் தூபமாக அமைகின்றன. மனநலவியல் ரீதியில் Phase of Denial என்றழைக்கப்படும் இத்தகைய குணம், எதிர்பார்ப்புக்கும் யதார்த்த நிலைக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டமே!

தினசரி அலுவலில், வியாபாரத்தில், வீட்டில், கடைத்தெருவில், பொதுவிடங்களில் என்று எங்குப் பார்த்தாலும் இந்த வாத-பிரதிவாதங்கள் தொடர்கதையாகி வருகின்றன. குடும்பப் பிணைப்பிற்குள் மனைவி அல்லது கணவனோடு, பெற்றோர்களோடு, சகோதர சகோதரிகளோடு கருத்துப் பரிமாற்றங்கள் வாதங்களாகி, விவாதங்கள் விதாண்டாவாதங்களாகி, சர்ச்சைகள் முற்றி, இறுதியில் மனக்கசப்பும் விரக்தியும் ஏற்படுவது மனித வாழ்வில் ஒரு வாடிக்கையாகவே மாறிப்போய் இருக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிபரப்படி பெரும்பாலானோருக்குக் கட்டுக்கடங்காத கோபம் வெளிப்படுவது தன் வீட்டில்தானாம்.

உதாரணத்திற்கு ஒரு சுழற்சியான நிகழ்ச்சியைப் பார்க்கலாம். தன் மகன் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று வந்துள்ளான் என்பதனால் அவனைத் திட்டித் தீர்த்த ஒரு தாய்,  தனது இயலாமையைக் காட்ட வழியின்றி வீட்டிற்கு வரும் தன் கணவன் மீது எரிந்து விழுகிறாள். மனைவியைக் கண்டிக்க முடியாமல் தவிக்கும் கணவன், தன் மனஅழுத்தத்தை, மறுநாள் தனது அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணிபுரியும் அலுவலர் மீது கொட்டுகிறார். மேலதிகாரி தன்னை இவ்வாறு பேசிவிட்டார் என்ற அழுத்தத்தில் வீட்டிற்கு வரும் அந்த அலுவலர், தன்னை எதிர்கொள்ளும் மனைவி மீது எரிந்து விழுகிறார்!. ஒன்றும் புரியாமல், எதிர்த்து பதிலும் பேச முடியாமல், கோபத்தை அடக்க முடியாமல் அவள் தன் பிள்ளைகள் மீது கொட்டித் தீர்க்கிறாள்.

ஏதேது? இது என்னைக் குறிவைத்து சொல்கின்ற மாதிரி உள்ளதே என்ற எண்ணம் இதை வாசிக்கும் உங்களுக்கு மேலிடுகிறதா? ஆமாம். ஆனால் இது உங்களுக்கு மட்டும் உள்ள பிரச்னை இல்லை. முழு மனித சமுதாயமும் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியப் பிரச்னைதான். ஆனால் இதற்கான தீர்வு என்ன? ஏதாவது வழிமுறைகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. அதற்கு முன் நீங்கள் யார்? இதனை ஒரு சிறு வித்தியாசத்தின் மூலம் பார்ப்போம்!

இறை நம்பிக்கையாளருக்கும் நம்பிக்கையற்றவருக்கும் உள்ள வித்தியாசம்!

பீதியோ அவநம்பிக்கையோ குற்ற உணர்ச்சியோ ஏற்படும் சமயங்களில் இறைநம்பிக்கை கொண்டவரின் செய்கைகளுக்கும் நம்பிக்கையற்றவரின் செய்கைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன் (அல்குர்ஆன் 71:10)

என்று இறைவனே வாக்களித்துள்ளதால் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவேண்டியோ, தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியோ அல்லது தான் தவறுதலாகச் செய்து விட்ட ஒரு பாவத்தை, குற்றத்தை மன்னிக்க வேண்டியோ தன் சிரமத்தைக் குறைக்க இயலும் என்று நம்பும் ஒருவரிடம் மனமுருகிக் கேட்டுவிடுகையில் நம்பிக்கை கொண்ட ஒருவரின் மனதில் உள்ள பாரம் இறங்கி மனம் லேசாகி விடுகிறது. தனது தற்போதைய செய்கைகளுக்கான எதிர்வினைகளைத் தான் பின்னாளில் சந்திக்க வேண்டி வரும் என்ற எண்ணம் இறைநம்பிக்கையாளருக்கு இருப்பதனால் தவறுகளைத் தொடர்ந்து செய்வதில் இருந்து தப்பிக்க, இறைநம்பிக்கையும் இறைச் சார்பும் அவருக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

இறைநம்பிக்கை அற்றவருக்கு இந்த வாய்ப்பு இல்லை! அதனால் தன் தவறுகளை ஒருவர் கண்காணிக்கிறார் என்ற எண்ணமோ, ஒருநாள் பதில் சொல்ல வேண்டி வரும் என்ற அச்சமோ இல்லாத காரணத்தால் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து பெரும் குற்றவாளியாக மாறும் வாய்ப்பே அதிகமாக உள்ளது!

ஒருவருக்குக்  கோபத்தை உண்டாக்கும் காரணிகள் பற்றியும் ஒரு தனிமனிதனைத் தாண்டி முழு சமுதாயத்திற்கும் அது ஏற்படுத்தும் தீய விளைவுகள் பற்றியும் வாழ்வியல் நெறிகளைக் கற்றுத் தரும் இறைமறையிலிருந்தும் இறைத்தூதர் கூற்றிலிருந்தும் சிலவற்றைப் பார்ப்போம்.

இறைவன் மனிதனை முதன்முதலாகப் படைக்கும்போதே பல்வேறு உணர்வுகளையும் தேவைகளையும் உள்ளடக்கிய ஓர் உயிரினமாகப் படைத்துள்ளான். ஆங்கிலத்தில் Human Instincts என்று அழைக்கப்படும் மனித உள்ளுணர்வானது, தீயவற்றிலிருந்து சரியானதைத் பிரித்தறிதல், அன்பு காட்டுதல், இரக்க உணர்வு, மற்றும் உடற்கூறு சம்பந்தமான தேவைகளான தாகம், பசி போன்ற பாஸிட்டிவ் குணங்களை உள்ளடக்கியது. வெறுப்பு, கோபம், அதன் விளைவாகத் தோன்றும் வன்முறைகள் போன்ற எதிர்மறையான மனித குணங்களையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இதை வாசித்தீர்களா? :   வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)

Stress Management என்ற பெயரில் நவீன மருத்துவம், கோபத்தைத் தணிக்கும் வழிகளை ஆய்வு செய்து, ஆழ்நிலை தியானம் (Meditation), நல்ல உறக்கம் (Sleep), மெல்லிய உடற்பயிற்சிகள் (exercise), சமுதாயத்துடனான பிணைப்பு (Socialization), பிணிநீக்கும் சிகிச்சை (physiotherapy), அமைதிப்படுத்தும் மருந்துகள் (tranquilizer) என்று பல்வேறு யுத்திகள் கையாளப்படுகின்றன.

வியப்பூட்டும் வகையில் இவையனைத்தும் ஒன்றிணைந்த தீர்வுகள் ஒரு சாமான்யன் தன் தினசரி வாழ்வில் கடைபிடிக்கும் வகையில் நேர்த்தியாக இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன.

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள் அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான். (அல்குர்ஆன் 2:30)

மனித வாழ்வில் பொங்கி எழும் மேற்கூறிய தீய குணங்களை எதிர்த்துப் போராடும் நுட்பத்தையும் மனிதனைப் படைத்தவனே அறிவித்துத் தந்திருக்கிறான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் எத்தனை பேர் இதனை ஆழமாக உணர்கின்றோம்?

நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது (அல்குர்ஆன் 8:66)

எதிரில், பின்னில், இடப்புறத்தில், வலப்புறத்தில் என அனைத்துத் திசைகளிலிருந்தும் மனிதனை இறைச் சிந்தனையிலிருந்து பிறழச் செய்து, வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாகி விடுபவர்களுக்கு, அவன் முதலில் போடும் தூபம்தான் கோபம்.  ஒருவருக்கு கோபத்தை ஏற்படுத்தி அதனை மருந்துக்குக் கட்டுப்படா நோயாக மாற்றிவிட்டால், பின்பு கோபமுற்றவன் தன்னிச்சையாய் ஏற்படுத்தும் விபரீதங்களால் கிடைப்பதெல்லாம் ஷைத்தானுக்கு லாபம்தான்.

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்குர்ஆன் 10:57)

கோபம் கொள்ளும் ஒரு சிங்கமோ, நாயோ சிந்திப்பதில்லை. சினம் கொள்ளும் ஒரு மனிதன் கோபம் கட்டுக்கடங்காமல் போகையில் அவனுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன.

1. இறைவேதமும் நபிவழியும் போதித்திருக்கும் வழிமுறைகளை மனக் கண்ணில் கொண்டு வந்து, கோபத்தை அடக்கிக் கொள்வது.

2. அனைத்தையும் மறந்து மிருகங்களுடன் வித்தியாசம் இன்றி ஐக்கியமாகிப்போவது

கோபம் உச்சத்தை அடையும்போது “கட்டுக்கடங்காமல் போகிறோம்” என்பதும் உண்மையன்று. நாம் “ஷைத்தானின் கட்டுப்பாட்டிற்குள் முடங்கிப் போகிறோம்” என்பதே உண்மை. கோபம் என்ற குணம் மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல இயற்கைக் குணங்களில் ஒன்றுதான். அதைக் கட்டுப் படுத்துவதில்தான் மனிதனின் வெற்றி அடங்கி இருக்கிறது.

மனிதனும் மிருகமும் வேறுபடுவதே தன்னிச்சை எனும் இந்த மெல்லிய இழையில்தான்.

கோபத்தின் விளைவுகளைப் பட்டியலில் அடக்கவியலாது. சாதாரண கருத்துப் பரிமாற்றம் என்ற ரீதியில் ஆரம்பமாகும் ஒரு சம்பவம், தன்முனைப்பு (ego) எனும் இறுமாப்பின் காரணமாக நொடிப்பொழுதில் மூளையின் செல்களில் பல்கிப் பெருகுகிறது. உயிருக்குயிரான உறவுகளையும் துண்டு துண்டாகச் சிதைக்கிறது.

கோபத்தின் உச்சகட்டத்தில் உள்ள ஒருவர், தான் அநீதியான வழிகளில் முடிவெடுக்கத் தயங்குவதில்லை. மன உளைச்சலின் மிகுதியில் தவறான செய்கைகளை நோக்கி பிரயாணம் செய்யும் ஒருவர், தன் கூற்றுக்கு ஒவ்வாத நபரை இவ்வுலகில் இருந்து தீர்த்துக் கட்டவும் தயங்குவதில்லை.

தோல்வியைத் தாங்கிக் கொள்ளாத மனமே பெரும்பாலும் கோபம் கொள்கின்றது. இயலாமைகளே கோப வடிவில் வெளிவருகின்றன.

“உங்களில் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொள்ளுங்கள் கோபம் மறைந்துவிடும். ஒருவருக்கொருவர் அன்போடு பரிசளித்துக் கொள்ளுங்கள் – அது பகைமையை மறக்கடிக்கச் செய்யும்” என்று மிக யதார்த்தமாக நபி(ஸல்) அவர்கள் இத்தகைய நிலைக்கு மருந்தளிக்கிறார்கள்.

ஒருவர் கோபத்தின் உச்சியில் உள்ளபோது கடும் சொற்களாலேயோ உடல் ரீதியாகவோ மற்றவரைத் தாக்கி விடுகின்றார். மனித குணம் வெளியேறி ஒருவர் மிருகக் குணத்தை அடைவது இத்தகைய கணங்களில்தான். கோபத்தின் உச்சிக்குச் சென்று விடும் சிலர், வெறுப்படைந்து தற்கொலைக்குக் கூட சென்று விடுவதைப் பார்க்கிறோம். அக்கணங்களில் பொறுமையை மேற்கொண்டு இறைவனிடத்தில் முறையீடு செய்துவிட்டால் தகுந்த உதவி கிடைக்கும் என்பதே இறைவாக்கு.

இதை வாசித்தீர்களா? :   சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)

உடற்பயிற்சிகளால் கோபத்தைக் குறைத்துவிட முடியாது. கோபத்தை மனிதனுக்குள் கொழுந்து விட்டெரிய வைக்கும் ஹார்மோன்களான hypoglycemia & hyperthyroidism ஆகிய இரண்டையும் கட்டுக்குள் வைப்பதற்கு மனப் பயிற்சிகள் தேவைப்படும். முன்கோபியான ஒருவர் தன் மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டு அதனை நோக்கிய பயணத்தை முன்னெடுக்காவிட்டால் எத்தகைய நல்ல மாற்றமும் அவரிடம் நிகழாது என்பதே உண்மை.

…எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை… (அல்குர்ஆன் 13:11)

மன உளைச்சல் (Depression) அதிகரிப்பதனால் பாதிக்கப்படுவதாக எண்ணும் ஒருவர் இஸ்லாம் கூறும் இத்தகைய நிலைகளில் சிந்தனை ஓட்டங்களை நிலை நிறுத்துவதன் மூலம் வெற்றியடையலாம். எனவே இத்தகைய மனப் பயிற்சிகளோடு, இறைச் சிந்தனையை இரண்டறக் கலக்கச்செய்வதன் மூலம் கீழ்க்கண்ட இறை வசனங்களையும், நபிமொழிகளையும் தினசரி மனதில் தீர்க்கமாக நிலை நிறுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நிவாரணம் அடையலாம், இன்ஷா அல்லாஹ்:

சோதனைகள் எதிர் கொள்ளும்போது, “நாங்கள் அல்லாஹ்வுக்காகவே வாழ்வோம்; அவனிடமே மீள்வோம்” என்று கூறுவர். (அல்குர்ஆன் 2:156)

…அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்குர்ஆன் 13:28)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன். மாறாக, கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா – புகாரி)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் அணையும். எனவே, உங்களில் ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளுச் செய்து கொள்ளட்டும்” (அத்தியா அஸ் ஸஅதி – அபூதாவூத்)

அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்.” (அபூதர் – மிஷ்காத்)

பி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்?” இறைவன் கூறினான் “எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” (அபூஹுரைரா – மிஷ்காத்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான்.” (அனஸ் – மிஷ்காத்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்கள் இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்: ஒருவனுக்குக் கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது. அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது.” (அனஸ் – மிஷ்காத்)

சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! “என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்!” என்றே பதில் தந்தார்கள். (அபூஹுரைரா, புகாரி)

வாருங்கள்! கோபம் வெல்வோம்..! இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெறுவோம்..!

ஆக்கம்: அபூ ஸாலிஹா