
பல்கலைக் கழக மாணவிகளைத் தேர்வு மதிப்பெண் பயம் காட்டியும் வேலை ஆசை காட்டியும் உயரதிகாரிகளுக்கு சப்ளை செய்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயர் வரை அடிபட்ட நிலையில், தற்போது பொள்ளாச்சியில் 200 க்கு மேற்பட்ட அப்பாவி பெண்களைக் காதல் போர்வையிலும் ஃபேஸ்புக் முதலான சமூக ஊடகங்கள் வழியிலும் ஏமாற்றி, மிரட்டி ஆபாச படம் பிடித்து சீரழித்ததோடு அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்து கோடிகணக்கில் பணம் சம்பாதித்த கயவர்கள் குறித்த செய்தி நாட்டையே அதிர்ச்சி அலையில் ஆழ்த்தியுள்ளது.
இக்கொடூர கும்பலால் மிரட்டப்பட்ட ஒரு இளம்பெண் துணிச்சலாக கொடுத்த புகாருக்குப் பின்னரே, சுமார் ஏழாண்டுகளுக்கு மேல் படுஜோராக நடந்துள்ள நடுக்கும் இக்கொடூரம் வெளி உலகுக்குத் தெரிந்துள்ளது.
ஆனால், அதன் பின்னர் இப்பிரச்சனை தொடர்பாக காவல்துறையும் அரசும் நடந்து கொள்ளும் விதம் அதனைவிட பேரதிர்ச்சியைத் தருவதாக அமைந்திருக்கிறது. இவ்விவகாரத்தில் ஆளும் அதிமுகவின் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களின் மகன்களும் தொடர்புள்ளதாகவும் எனவே விசாரணையினை முழுவதுமாக திசைதிருப்பி, குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான வேலைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
– இதுபோன்ற சம்பவங்களில் தொட்ர்புடைய பெண்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலிருக்கும் நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது புகாரளித்த பெண்ணின் பெயர் உட்பட முழு விவரங்களைக் காவல்துறை வெளியிட்டுள்ளது.
– புகாரளித்த பெண்ணின் அண்ணன் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நாளிலேயே இவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவுகிறது. அந்த நால்வரில் ஒருவர் அதிமுக நிர்வாகி. மணிகண்டன் என்றொருவன் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளான். அத்தாக்குதல் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
– இதில் தொடர்புடைய திருநாவுக்கரசு உட்பட அறுவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் இதுவரை காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தவில்லை.
– சுமார் 1200 க்கு மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் சிக்கியுள்ள நிலையில், இதுவரை காவல்துறை கஸ்டடி எடுத்து இவர்களை விசாரிக்க காவல்துறை தயாராகவில்லை.
– இக்கும்பலின் முக்கிய புள்ளியான திருநாவுக்கரசு காவல்துறையில் சரணடையும் முன்னர், “இதில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கிறது. பலரின் விவரங்களை வெளிப்படுத்துவேன்” எனக்கூறியுள்ளான். ஆனால், சரணடைந்த பின்னர் மேற்கொண்டு எந்த விசாரணையும் அவனிடம் நடத்தவில்லை.
– ஆனால், அரசியல் வாரிசுகள் எவருக்கும் 100 சதவீதம் இவ்வழக்கில் தொடர்பில்லை என கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.
– கடந்த ஐந்தாண்டுகளில் பொள்ளாச்சி பகுதியில் மட்டும் சுமார் 7 இளம்பெண்கள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். ஆனால் அவை அனைத்தும் தற்கொலை அல்லது விபத்து என வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை வெளியான தகவல்கள் அடிப்படையில், இது பெரியதொரு நெட்வொர்க்காக இயங்கியுள்ளது. மிரட்டி ஆபாசப்படம் எடுக்கப்பட்ட பெண்களின் வீடியோக்களைப் போட்டுகாட்டி, விரும்பும் பெண்களை மிரட்டி அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்துள்ளனர். அது, அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானா அல்லது காவல்துறை, நீதித்துறை என எல்லா மட்டங்களிலுமா என்ற சந்தேகம் காவல்துறை, நீதித்துறையின் அணுகுமுறைகளால் எழுந்துள்ளது.
எனவே,
1. இந்த வழக்கின் விசாரணையினை உடனடியாக சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும். தேவையெனில், சி பி ஐக்கு மாற்றவேண்டும்.
2. இவ்வழக்குடன் துணையாக, வழக்கைச் சரியாக கையாளாதது மற்றும் குற்றவாளிகளுக்குத் துணை போனது முதலான பிரிவுகளில் மற்றொரு வழக்கினைப் புகாரளித்த பெண்ணின் விவரங்களை வெளியிட்ட காவல்துறை அதிகாரி, அவரின் அண்ணனைத் தாக்கியவர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியதாகக் கூறப்படும் நீதிபதி, குற்றவாளிகளை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க தயாராகாத விசாரணை அதிகாரிகள் ஆகியோர் மீது பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
3. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே 100 சதவீதம் அரசியல் வாரிசுகள் எவருக்கும் தொடர்பில்லை என ஊடகங்களில் கூறி வழக்கைத் திசை திருப்பும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்வதோடு, அவர் மீது வழக்கு விசாரணையினைப் பாதிக்கும் வகையில் சதிதிட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்.
4. இதற்கு முன்னர் பொள்ளாச்சியில் தற்கொலை அல்லது விபத்து என ஃபைல் க்ளோஸ் செய்யப்பட்ட அத்தனை வழக்குகளையும் மறுவிசாரணைக்கு உட்படுத்துவதோடு, அவ்வழக்குகளை மூடிய விசாரணை அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.
நிர்மலாதேவி விவகாரத்தில் அத்தனையையும் நிர்மலாதேவி மீது சுமத்தி, முக்கிய நபர்கள் அனைவரும் சுகமாக தப்பி வலம் வருவதைப் பார்த்துகொண்டு வெறுமனே இருப்பதுபோல், இச்சம்பவத்தையும் சாதாரணமாக பத்தோடு பதினொன்றாக எடுத்து கடந்து செல்வோமானால், நாளை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டில் இதுபோன்று ஒரு பெண்ணின் இழப்புக்குத் தயாராக வேண்டிவரும் என்பதை நினைவில் வைப்போம்.
இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொடூரத்தில் ஈடுபட்ட கயவர்கள் அத்தனை பேரையும் கடுமையாக தண்டிக்கும்வரை மக்கள் ஓயக்கூடாது. குறிப்பாக, பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இறங்கியது போல் இவ்விசயத்துக்கு எதிராக களத்தில் இறங்க வேண்டும். மாணவர்கள்தாம் இந்நாட்டின் எதிர்காலம். அவர்களையே சீரழிக்க முனையும் எந்தச் சக்தியையும் வைத்து நீட்டிப்பது மக்களும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல!
கூடுதலாக,
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் முதலான சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, வேலை ஆகியவற்றுக்காக வீடுகளிலிருந்து வெளியே செல்லும் அவரவர் வீட்டு பெண்கள் மீது கண்டிப்புடனான பாதுகாப்புக்கு அவரவரே ஏற்பாடு செய்வது நல்லது. சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதிலுள்ள பிரச்சனைகள், பொதுவெளியில் புழங்கும்போது ஏற்படும் ஆண் பழக்க, வழக்கங்களில் வரும் நெருக்கங்கள் முதலானவை குறித்து தெளிவான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்குப் பெற்றோர் கவனம் செலுத்தவேண்டும்.
ஒரு குழந்தை நன்றாக ஆகவேண்டும்; அதன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்; அது எங்கும், எதிலும் ஏமாந்துவிடக்கூடாது என்பதில் இந்த உலகிலேயே பெற்றோர் மட்டும்தான் நிஜமான, ஆத்மார்த்தமான அக்கறையுடையவர்கள் என்பது குழந்தைகளுக்குப் புரியவைப்பதோடு, அக்கடமை தமக்குத்தான் உள்ளது என்பதையும் பெற்றோர் புரியவேண்டும்.
எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மதகுருமார்கள்கூட பெண்கள் விஷயத்தில் நாலாந்தர காமக்கொடூரர்கள்தாம் என்பதைச் சமீபத்தில் கேரள மாநிலத்தில் மாணவியைச் சீரழித்த முஸ்லிம் ஆலிம் குறித்தச் செய்தியிலிருந்து புரிந்திருப்போம். கல்வி கற்பிக்கும் ஆசிரியர், ஆசிரியையாக இருந்தாலும்கூட, அவரவர் குழந்தைகள் விசயத்தில் அவர்களெல்லாம் மூன்றாம் மனிதர்கள்தாம் என்ற எண்ணம் பெற்றோரின் மனத்தினுள் ஆழமாக குடிகொண்டுவிட்டால், இத்தகைய கொடூரங்களில் சிக்கிவிடாமல் பெண் குழந்தைகளை ஓரளவு பாதுகாத்து கொள்ள முடியும்!
-அபூசுமையா