என் ஓட்டு இவருக்கு தான்! வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு அணிகளைத் தாண்டி, கூடுதலாக…

  • தினகரன் தலைமையில் அமமுக கூட்டணி
  • சீமானின் நாம் தமிழர் கட்சி 
  • கமலஹாஸனின் மக்கள் நீதி மய்யம்

ஆகிய கட்சிகள் நேரடி களத்தில் உள்ளன.

நடைபெறவிருப்பது மத்தியில் ஆட்சியைத் தேர்வு செய்வதற்கானது என்பதால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளும் அங்கம் வகிக்கும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கிடையிலேயே நேரடிப் போட்டி நடக்கிறது. இருப்பினும் தினகரன், கமல் மற்றும் சீமான் ஆகிய மூவரும் அவரவருக்கான தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் கொள்கைகள் மீதான புது வாக்காளர்களின் ஈர்ப்பு ஆகியவை யாருக்கு ஓட்டளிப்பது என்ற சிறு குழப்பத்தையும் வாக்களிப்பவர்களிடையே உருவாக்கியுள்ளது.

குழப்பம் தீர, விருப்பு வெறுப்பின்றி ஒரு சுய பரிசோதனையை மேற்கொள்வோம்!

சீமானின் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் சீமானின் அரசியல் பிரவேசம் என்பது திராவிட-பெரியாரிய சிந்தனையிலிருந்தே ஆரம்பமாகிறது. அவர் தம் தொடக்கக் காலத்தில் கடவுள் எதிர்ப்புக் கொள்கையில் முழு வீச்சில் செயல்பட்டிருந்தாலும் கட்சி ஆரம்பித்ததன் பின்னர் அதிலிருந்து விலகியுள்ளார். மோடி ஆதரவு, காங்கிரஸ் ஆதரவு, ஜெயலலிதா ஆதரவு என பல நிலைகளில் மாறி, தடுமாறி வலம் வந்தவர், இவற்றுக்கு நேர் மாறாக இப்போது பாஜக எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு என வலம் வருகிறார். அரசியல்வாதிகளுக்கேயுரிய இத்தகைய முரண்பாடான சந்தர்ப்பவாதங்களை விட்டுவிட்டு, கொள்கை ரீதியாக கவனிக்கும்போது நாட்டின் சூழலுக்கேற்ப சில நல்ல விஷயங்களையும் பேசி வருகிறார். கூடுதலாக அவரின் முறுக்கேறிய மேடை பேச்சு, இளைஞர்களைச் சற்று ஈர்த்தும் உள்ளது.

தேசிய அரசியலில் முக்கிய இரு கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையுமே ஒரே நேரத்தில் சீமான் எதிர்ப்பதால், மத்தியில் ஆட்சிக்காக நடக்கும் இத்தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளையும் சீமான் கைப்பற்றினால்கூட, மத்தியில் இந்த இரு கட்சியில் ஏதாவது ஒன்றின் மீதேறியே அவர் பயணித்தாக வேண்டும்.

அதே சமயம், ஈழப்பிரச்சனையை முன்வைத்து காங்கிரஸை அழிப்பதே தன் லட்சியம் என்று அவர் முன்னெடுக்கும் சமீபத்திய அரசியல் மிக நிச்சயமாக பாஜகவுக்கே சாதகமானதாக அமையும். கடந்த தேர்தல்களில் சீமானின் கட்சி வாங்கியுள்ள ஓட்டுகளின் எண்ணிக்கையினைக் கணக்கிட்டால், ஒரு தொகுதியில்கூட அவர் வெல்லப் போவதில்லை என்பதே கணிப்பாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 5,000 ஓட்டுகளைச் சிதறடித்து, தன் பக்கம் இழுக்க இவருக்கு வாய்ப்புண்டு.

இவ்வாறாக பிரிந்து சீமானிடம் சேரும் ஓட்டுகள் காங்கிரஸுக்கு எதிராக, அதிமுக கூட்டணியிலுள்ள பாஜகவுக்கே நன்மையைக் கொடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. சீமானின் அரசியல் தமிழகத்துக்கானது. எனவே, உணர்ச்சியுடனான புதிய அரசியல்வாதியான அவரின் கட்சிக்குச் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுப்பதே சரியான தொடக்கமாக அமையும். இப்போதைய தேர்தலில் அவருக்கு விழும் ஓட்டுகள் ஒவ்வொன்றும் உபயோகமற்றதாகவே அமையும். தம் ஓட்டுரிமையை உபயோகமானதாக பயன்படுத்த விரும்பும் எவரும், சீமானுக்கான வாய்ப்பை அடுத்தச் சட்டமன்றத் தேர்தலுக்குத் தள்ளி வைப்பதே அறிவுடைமை!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்!

கமலஹாஸனின் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பொறுத்தவரை இதுவரை உப்பு சப்பில்லாத ஒன்றாகவே அது இருந்து வருகிறது. நடிப்பில் கிடைத்த பெயர் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, அரசியல் பிரவேசம் செய்துள்ள அவரின் வருகை மிக நிச்சயமாக மக்கள் நலனுக்கானது இல்லை. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகளின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நோக்கிய அவா மட்டுமே அவரின் வருகை பின்னணி. குறிப்பாக ஜெ. ஆட்சியில் சீர்கேடுகளை கண்டிக்காத கமல்ஹாசன் தனிப்பட்டமுறையில் துன்புறுத்தப்பட்ட போது கோபமுற்று சீறாமல், நாட்டை விட்டே போகிறேன் என்று கண்ணீர் விட்டு அழுதது மக்கள் நினைவில் இன்னும் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ரசிகர் செல்வாக்குள்ள நடிகர்களுக்கு எப்போதுமே மவுசு கூடுதல். எம் ஜி ஆர், ஜெயலலிதா வரிசையில் தம்மையும் மக்கள் முதல்வர் நாற்காலியில் அமர வைப்பர் என்ற கனவு கமலுக்கு ஏற்பட்டிருக்கும். இந்த எண்ணத்தின் பின்னணியில் பாஜக உண்டு என்றொரு வதந்தியும் புறம்தள்ளுவதற்கில்லை. ஏனெனில், சதா கடுமையாக அதிமுகவை எதிர்க்கும் கமல், பாஜகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ததில்லை.

இதை வாசித்தீர்களா? :   எஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு?

“கழகமில்லா தமிழகம்!” என்ற பாஜகவின் இலக்கினை அடைய ரஜினி, கமல் போன்ற திரைத்துறை பிரபலங்களைக் களத்தில் இழுத்துவிட பாஜக திரைமறைவு காய்கள் நகர்த்தியது வெள்ளிடை மலை. குறிப்பாக, ரஜினியின் தயக்கத்தைக் கடந்து, மிகத் தெளிவாக முன்னரே ஸ்க்ரிப்ட் எழுதி இயக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் செல்வாக்கை அதிகரித்து முதல்வர் கனவுடன் இறங்கியுள்ளவர்தாம் கமல். இந்த ஒரு விஷயம் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தைப் புறம்தள்ளுவதற்குப் போதுமானது. கமலைவிட மாபெரும் கலைஞனாக இருந்த, ஏராளமான ரசிகர்கள் இருந்த சிவாஜி கணேசனையே “வைத்து செய்தவர்கள்” தாம் தமிழக மக்கள். மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் கட்சிகளின் மக்கள் விரோத கொள்கைகளை விமர்சிக்க வேண்டிய பொறுப்பைக்கூட சரியாக செய்யாமல், புரியாத தோரணையில் ட்வீட் செய்வதும், மேடையில் நான்கு வார்த்தை பேசிவிட்டு மக்கள் கைதட்ட காத்திருக்கும் அவரின் நடிப்பும் பலவேளைகளில் அருவருப்பையே உருவாக்குகிறது.

இந்நிலையில், இவரின் கட்சிக்கு “உலக நாயகன்” என்ற போதையில் ரசிகர்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மிக நிச்சயமாக குப்பைக்குச் சமமானதாகவே இருக்கும். அதையும் தாண்டி, மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் வேண்டுமெனில் சட்டமன்றத் தேர்தலில் முதல்வராக இவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்க்கலாம். இத்தேர்தலில் இவரின் பிரவேசம், மிக நிச்சயமாக மத்தியில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தப்போவதில்லை. மாறாக, பணத்திலிருந்து வியாபாரம் வரை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாக சீரழித்துள்ள பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலையினை இவருக்கு விழும் ஒவ்வொரு ஓட்டுகளும் பாதிக்கும். பாஜகவினை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற எண்ணம் கொண்ட எவரும் அறியாமல்கூட இவருக்குத் தம் வாக்குகளை அளித்து ஓட்டுக்களை வீணடித்து விடக்கூடாது!

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்!

தினகரனின் “அம்மா மக்கள் முன்னேற்ற கழக”த்தைப் பொறுத்தவரை, அது கட்சியாகவே இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பது அடிப்படையே ஆட்டம் காணும் பலவீனம். இவரின் கட்சியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் சுயேட்சைகளாகவே கருதப்படுவர். இந்திய அரசியலில் குதிரை பேரம் குறித்து அறியாதவர் எவருமிலர். பெரிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டிலிருந்துகூட எம்.பி கள் விலைபோயுள்ளனர். கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர்களே பணத்துக்காக நாயாய் பேயாய் அலையும்போது, கட்சி தாவல் சட்டம் எதுவுமே பாதிக்காத சுயேட்சைகளின் நிலைமை எப்படியிருக்கும் என்பதை மக்களின் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவைக் கைப்பற்றுவதற்கான சசிகலா மற்றும் பாஜகவிற்கிடையில் ஏற்பட்ட போட்டியின் விளைவாக உருவானதே தினகரனின் பதிவு செய்யப்படாத அமமுக என்பது அனைவரும் அறிந்ததே. உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலைக்கான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இப்போதும் தினகரன், அதிமுக தன் கைக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதால்தான் அமமுகவை கட்சியாகப் பதிவு செய்யவில்லை. அதே சமயம், பாஜகவுடனான பேரம் சரியாக திருப்தியாகாததால்தான் இப்போதும் அவர் தனித்து நிற்கிறார். இத்தேர்தலில் ஓரளவு அவர் தம் செல்வாக்கை நிரூபித்துவிட்டால், அநேகமாக அதிமுக அவர் கைக்கு வந்து தமிழகத்தில் ஆட்சி மாறலாம். அவ்வாறு ஆகும் நிலையில், மத்தியில் அவர் பாஜகவைத்தான் ஆதரிக்கப் போகிறார் என்பது நிச்சயம்.

இதை வாசித்தீர்களா? :   இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவை அறிவோம்!

எதிர்கட்சிகளை ஒவ்வொன்றாக குறிவைத்தும் எடப்பாடி, ஓ பி எஸ்ஸைத் தம் வழிக்குக் கொண்டுவரவும் பாஜக இதுவரை நடத்தியுள்ள சிபிஐ மற்றும் வருமானவரித்துறை சோதனைகளின் கண்கள் இதுவரை பெரிய அளவில் தினகரன் பக்கமோ சசிகலா வீட்டுப் பக்கமோ எட்டிப் பார்க்காததும் கொடநாடு எஸ்டேட் விசயத்தில் பாஜக காட்டும் மவுனவுமெல்லாம் இன்னமும் தினகரன் பக்கம் பாஜகவின் கரிசனை பார்வையுள்ளது என்பதற்கான அடையாளங்கள். அதிமுக தினகரன் கைக்கு வரும் நிலை வந்தால், அவர்களின் சொத்துகளைத் தக்க வைக்கவாவது பாஜக பக்கம் சாய்ந்து நிற்க வேண்டிய பரிதாப நிலையில் தான் இப்போதும் தினகரன் உள்ளார்.

இதுவன்றி, ஆர்.கே. நகரில் அவருக்குக் கிடைத்த வரவேற்பு போன்று அதிமுகவின் மொத்த ஓட்டுகளும் அவருக்கே விழும்பட்சத்தில் அவரின் சில சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற வாய்ப்புண்டு. அவ்வாறு வெற்றிபெறும் வேட்பாளர்கள் தங்களை எந்தக் கட்சியுடன் இணைத்துக் கொள்வர் என்பது பெரும் கேள்விக்குறி. அவர்கள் குதிரைபேரத்துக்கான விற்பனை குதிரைகளாகவே நிற்பர் என்பது நிதர்சனம். இப்பிரச்சனைகளைத் தாண்டி, சீமானைப் போன்று தினகரனும் மாற்று அரசியலுக்கான நல்லதொரு மாற்றுதான். ஆனால், அது சட்டமன்றத் தேர்தலுக்கே பயனாக அமையும். மத்தியில் யாருக்கு ஆட்சி என்பதற்கான இத்தேர்தலில் தினகரனின் அமமுக கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும், அவர் வெற்றிபெறாதபட்சத்தில் வீணாவது மட்டுமன்றி காங்கிரஸின் ஓட்டுகளும் அதிகம் பிரியும்பட்சத்தில் மீண்டும் மக்கள் விரோத பாஜகவுக்கே அது பயனாக அமையும். இதுவன்றி ஒருவேளை தினகரன் கட்சியில் சிலர் வெற்றிபெற்றாலும் அது பாஜகவுக்கே பயனாக அமையப்போகிறது – காங்கிரஸுக்கு அவர் ஆதரவு கொடுக்கப் போவதில்லை என்பதால்! ஆக எப்படி பார்த்தாலும் தினகரனுக்கும் இத்தேர்தலில் அளிக்கும் ஓட்டுகள் விழலுக்கு இறைக்கும் நீராகவே அமையப்போகிறது.

அதே சமயம், அவர் அதிமுகவிலிருந்து பிரிக்கும் ஓட்டுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு நன்மையையும் விளைவிக்கும். இதனைக் கணக்கில் கொண்டே, காங்கிரஸுக்கு எதிரான ஓட்டுகளைத் தினகரனுக்குத் திருப்பும் எண்ணத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆக, நமத்துப் போய் விட்ட, “மோடியா இல்லை இந்த லேடியா” என்று சூளுரைத்த ஜெ.மீது பற்று கொண்ட, தற்போதைய அதிமுகவிலுள்ள பாஜக எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட தொண்டர்கள் ஒவ்வொருவரும், பாஜகவைப் பழிவாங்க தேர்வு செய்ய வேண்டியது தினகரனையல்ல; காங்கிரஸையே! இதை உணர்ந்து ஓட்டுக்களை அளித்தால் எம் ஜி ஆர், ஜெயலலிதாவின் சூளுரையை நிறைவேற்ற முடியும். அதுவே, எடப்பாடி-ஓபிஎஸ் கூட்டணியின் அடிமை மனோபாவத்தையும் மாற்றி தினகரன் மற்றும் எடப்பாடி குழு ஒன்றாக இணைந்து அதிமுகவைக் காப்பாற்ற வழிவகுக்கும்!

ஆக, இத்தேர்தல் மிகத் தெளிவாக ஒன்றே ஒன்றை நமக்கு உணர்த்துகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக மதத்தின் பெயரால் நாட்டு மக்களைக் காவு வாங்கும் அதேவேளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக, சாதாரண மக்களின் வாழ்வைச் சின்னா பின்னம் ஆக்கிய பாஜகவை மத்தியிலிருந்து அகற்ற வேண்டுமா வேண்டாமா என்ற ஒற்றைக் கேள்வியின் மீதான தேர்தல் இது.

இக்கேள்விக்கு வேண்டுமென பதிலளிக்கும் ஒவ்வொரு தமிழனும் சீமான், கமல், தினகரன் என தம் ஓட்டை நான்கு புறமும் சிதறடித்து வீணாக்காமல், காங்கிரஸ் கூட்டணிக்குத் தம் வாக்குகளைப் பதிவு செய்வதே தமிழகத்திற்கு நலன் தரும் அறிவுக்கூர்மையான முடிவாக இருக்கும்!

– அபூசுமையா