நான் குதிருக்குள் இல்லை!

Share this:

ஜனநாயகம், மதச்சார்பின்மை இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பெரும் தூண்களாகும். “சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைகளின்படி செயல்பட்டுக் கொள்வது நமது ஜனநாயகம் வழங்கும் அடிப்படை உரிமையாகும்” – உலக அளவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்புடன் வைக்கும் சட்டத்தின் மிக முக்கிய நிபந்தனைகளான இவை இரண்டும் துரதிஷ்டவசத்தால் பெரும்பாலான சமயங்களில் வெறும் ஏட்டில் மட்டும் வைத்து அழகு பார்க்கும் வரிகளாக மாறிப் போகின்றன.

அனைவருக்கும் சமமான நீதி நடைமுறை உறுதிப் படுத்தப்படுவதே ஜனநாயகம் தழைப்பதற்கும் மக்கள் அமைதியாக வாழ்வதற்குமான அடிப்படை காரணிகளாகும். ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை நீதி என்பது பணம், பதவியுடையவர்களுக்கு ஒரு விதமாகவும் ஏழைகளுக்கு வேறு விதமாகவுமே உள்ளது. அதனாலேயே காஞ்சி காம கோடி, அத்வானி, மோடி, ஜெயலலிதா, ஹர்ஷத் மேத்தா போன்ற இன்னபிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், மோசடி போன்றவற்றில் ஊறிப்போனவர்கள் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி வலம்வருகின்றனர். அதேவேளை, சின்னஞ்சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சாதாரணமானவர்கள் மீது மட்டும் சட்டம் தனது முழுவலிமையைப் பிரயோகிக்கின்றது.

சமநீதி விஷயத்தில் வலியவன், எளியவன் என்ற பாரபட்சம் பார்க்கும் நீதி, முஸ்லிம்கள் என்று வரும் பொழுது அத்தகைய கருணை வாசலையும்கூட அடைத்து விடுகின்றது.

அநியாயம் செய்திருந்தாலும் வலியவனுக்குச் சாதகமாகவும் அநீதி இழைக்கப் பட்டிருந்தாலும் எளியவனுக்குப் பாதகமாகவும் வளைந்து கொடுக்கும் இத்தகையச் செயலைகளை “நீதி தேவன் மயக்கம்” என்ற பெயரில் அறிஞர் அண்ணா ஒரு நாடகம் எழுதினார். 1954ஆம் ஆண்டு மேடையில் அரங்கேறிய அவரது நாடகம் இப்போது(ம்) அரங்கேறிக் கொண்டிருப்பது நமது நீதிமன்றங்களில்!

இந்திய விமானப்படை ஊழியர் அன்ஸாரீ அஃப்தாப் அஹ்மது என்பவர் சீக்கிய ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு நடைமுறையிலிருக்கும் தாடி வளர்த்துக் கொள்ளும் மத உரிமையைத் தனக்கும் அளிக்க வேண்டும் எனக் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், இந்திய விமானப்படை வழிகாட்டு நெறிமுறைகள் 2003இன்படி “சீக்கியர்களுக்கு வழங்கும் உரிமையை 2002ஆம் ஆண்டுக்குப்பிறகு விமானப்படைக்குத் தேர்வு செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது” என்று கடந்த ஆண்டு பஞ்சாப்/ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றவர்க்கு வளைந்தும் முஸ்லிம் என்றால் நிமிர்ந்தும் நிற்கும் சட்டம் இந்திய விமானப்படைக்கு மட்டும் சொந்தமானதன்று.

மத்தியப்பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்திலுள்ள சிரஞ்ச் நகரில் இயங்கி வரும் ‘நிர்மலா கான்வெண்ட்’ என்ற பள்ளியில் தொடக்கம் முதல் பத்தாம் வகுப்புவரை முஹம்மது ஸலீம் என்ற முஸ்லிம் மாணவர் கல்வி பயின்று வந்தார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குத் தாடி வளர்ந்து விட்டது. “தாடியை மழிக்காமல் பள்ளிக்கு வருவதாக”க் கூறிப் பள்ளியின் நிர்வாகி ப்ரின்ஸிபால் தெரஸா மார்ட்டின், மாணவர் ஸாலிமைப் பள்ளியிலிருந்து நீக்கினார். அதை எதிர்த்து, தன்னைத் “தாடி வளர்த்துக் கொள்ளப் பள்ளி அனுமதிக்க வேண்டும்” எனக் கோரி முதலில் பள்ளிக்கு முறைப்படி விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம் மறுதலித்துவிடவே, உயர்நீதி மன்றத்தில் மாணவர் ஸலீம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

“முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்” என்ற பள்ளிச் சட்ட-திட்டத்தினைத் தளர்த்தக் கோரி ஸலீம் சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் கடந்த 30.12.2008இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடாப் பிடியாக, “தாடி வளர்ப்பது என்னுடைய மத உரிமை. மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு (சட்டப் பிரிவு 25இன்படி) தன் மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக் கூடாது. எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்” எனக் கோரி, உச்சநீதி மன்றத்துக்கு வழக்கைக் கொண்டு சென்றார்.

ஸலீம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி இரவீந்திரன் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாணவர் ஸாலிமுடைய கோரிக்கையை, அவர் பயிலும் பள்ளியின் சட்ட-திட்டங்களை மட்டும் காரணம் காட்டி மறுதலித்திருந்தால் பிரச்சினை பெரிதாகி இருக்காது.

ஆனால், சட்டம் கற்றுத் தேர்ந்ததாகச் சொல்லப் படும் ஒரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு என்பவர், “தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்” என்ற காரணம் கூறி கடந்த திங்கட்கிழமை (30.3.2009) வழக்கைத் தள்ளுபடி செய்து, தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் வெறும் 30 ஆண்டுகால வரலாறுடைய தாலிபானுக்கும் என்ன சம்பந்தம்? நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கே வெளிச்சம்!

தாலிபான் என்ற பெயரே அறியப் படாத ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் முஸ்லிம் ஆண்கள் தாடி வளர்த்தும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தும் வருகின்றனர். தாடி இல்லாத ஆண் சீக்கியர் இல்லை என்னும் அளவுக்கு சீக்கிய ஆண்கள் தாடியோடுதான் இருப்பர். தாடி வளர்த்திருப்பவரெல்லாம் தாலிபான் அமைப்பின் உறுப்பினரா? நம் பிரதமரை நீதிபதி கட்ஜு ரொம்பத்தான் தாக்குகிறார்!

“தாலிபான்களை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது” என்று கூறியதோடு, “நாளைக்கு ஒரு (முஸ்லிம்) மாணவி, பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கலாம். நாம் அதை அனுமதிக்க முடியுமா?” என்று நீதிபதி கட்ஜு அறிவு(?)ப்பூர்வமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

“நாட்டின் மதசார்பற்ற நிலைபாட்டைப் பயன் படுத்திக் கொண்டு இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது” எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே நீதிபதி ஜோக்கடித்திருக்கிறார்.

“சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்துக் கொள்ளவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும்போது, என்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி நிர்வாகத்தின் தெளிவான இரட்டை நிலைபாடு” என ஸலீம் வாதித்தார்.

ஆனால் பயனில்லை. “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30ஆம் பிரிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸலீம் வேறு ஒரு பள்ளியைத் தேர்வு செய்து கொள்ளட்டும்” எனவும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

இந்நாட்டில் ஒரு சமுதாயத்திற்கு அனுமதிக்கப்படும் நீதி, அதே வடிவில் பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் எனில் மறுக்கப்படுகிறது. இது “இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் மத அடிப்படைகளைப் பின்பற்றுவதற்கான உரிமைகளுக்கு” முரணான நிலைபாடு எனில், வழக்கிற்குத் தொடர்பில்லாத வகையில் இஸ்லாமிய அடிப்படைகளைச் சம்பந்தமில்லாத தனிப்பட்ட குழுக்களோடு தொடர்பு படுத்தி இழிவுபடுத்துவது இந்திய நீதித்துறைக்கு அவமானத்தைப் பெற்றுத்தரும் செயலாகும். அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு அணுகவேண்டிய, நாட்டின் உன்னத பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பான அதிகாரியின் சட்டமீறலுமாகும்.

“தாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்; இந்தியாவில் தாலிபானிஸம் வளர்வதை அனுமதிக்கமுடியாது” என்று உண்மையைப் பொய்களுடன் கலந்து உண்மையைப் பொய்யாக்குவதையும் பொய்யை உண்மையாக்குவதையும் அதனை வைத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதையும் தங்களது பாணியாகக் கொண்டுள்ள ஹிந்துத்துவத்தின் ஒரு மோடி, அத்வானி வகையறாக்களின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் உதிர்ந்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அதுவே நாட்டின் உன்னத பீடத்தை அலங்கரிக்கும் ஒரு நீதிபதியின் வாயிலிருந்து வருவதென்றால்…..?

நீதிபதி கட்ஜுவின் அறியாமைக் கருத்துகளுக்கு எதிராகவும் நீதியின் இரட்டைமுக நிலைபாட்டிற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் ‘தாலிபான்’ பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே.

“நான் ஒரு மதசார்பற்றவன்” என்று நீதிபதி கட்ஜு கூறிய தன்னிலை விளக்கத்தில் ஓர் உண்மை பொதிந்திருக்கிறது.

தலைப்பை இன்னொரு முறை படித்துக் கொள்ளவும்!

(தொடர்புடைய சுட்டி: http://www.indianexpress.com/news/iaf-cites-religion-to-ban-beard-for-muslims/412045/)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.