
அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்படிக்கையைக் கைவிடுமாறு உரத்த குரலில் எச்சரித்த கம்யூனிஸ்டுகளைக் கடைசி வரையில் இழுத்தடித்து வெறுப்பேற்றியதால் வெளியிலிருந்து ஆதரவளித்த கம்யூனிஸ்டுகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையிலான அரசு தள்ளப்பட்டது.
நம் நாட்டின் முழு மின்சக்தித் தேவையில் நம்முடைய அணு உலைகளின் மூலமாக 3% மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. அடுத்து வரும் பதினைந்து ஆண்டுகளில் மேற்கொண்டு வெறும் 4% அணுமின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உலகநாடுகள் எதிலும் விலைபோகாத அணு உலைகளை 300000 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து, அமெரிக்க நிறுவனங்களிலிருந்து வாங்குவது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பது சுத்த மோசடி என்றும் உலகிலேயே தோரியம் அதிகம் கிடைக்கும் நம் நாட்டில் அதைப் பயன்படுத்தாமல் யுரேனியத்தை அமெரிக்காவிடமிருந்து வாங்குவது மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் செயல் மட்டுமின்றி, நமது அணு உலைகளையும் நம் நாட்டுப் பாதுகாப்பையும் அமெரிக்காவிடம் அடகு வைப்பதாகும் என்பது செங்கொடியினரின் குற்றச்சாட்டு.
ஆனால் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர், “நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத எந்தவொரு முடிவையும் தமது அரசு எடுக்கவில்லை” என்று குதிர் விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி பேசும்போது, அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையைத் தமது கட்சி முழுமையாக எதிர்க்கவில்லை என்றும் இந்தியாவின் பங்குக்குறைவை மட்டுமே எதிர்ப்பதாகவும் புதுவிளக்கம் சொன்னார். “ஐ எஸ் ஐ, எல்லை தாண்டிய தீவிரவாதம்” போன்ற அவரது நிரந்தரப் பதிவுச் சொற்கள், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான அவரது நாடாளுமன்றப் பேச்சின்போது வெளிப்பட்டன.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு/எதிர்ப்பு நிலவரம்:
கட்சி | மொத்தம் | ஆதரவு | எதிர்ப்பு |
---|---|---|---|
காங்கிரஸ் | 153 | 149 | 4 |
ராஷ்ட்ரீய ஜனதாதளம் | 24 | 19 | 5 |
தி.மு.க. | 16 | 16 | |
தேசியவாத காங்கிரஸ் | 11 | 11 | |
பாட்டாளி மக்கள் கட்சி | 6 | 6 | |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா | 5 | 5 | |
லோக் ஜனசக்தி | 4 | 4 | |
தேசிய மாநாட்டு கட்சி | 2 | 2 | |
போட்டி ம.தி.மு.க. | 2 | 2 | |
முஸ்லிம் லீக் (கேரளம்) | 1 | 1 | |
இந்திய குடியரசு கட்சி | 1 | 1 | |
அகில இந்திய மஜ்லிஸ் | 1 | 1 | |
கேரள காங்கிரஸ் | 1 | 1 | |
காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி | 1 | 1 | |
சிக்கிம் ஜனநாயக முன்னணி | 1 | 1 | |
மிஜோரம் தேசிய முன்னணி | 1 | 1 | |
தேசிய லோக்தந்திரி | 1 | 1 | |
சமாஜ்வாடி | 39 | 35 | 4 |
போடோலேண்ட் மக்கள் முன்னணி | 1 | 1 | |
பாரதீய ஜனதா | 130 | 6 | 124 |
சிவசேனா | 12 | 12 | |
பிஜு ஜனதாதளம் | 11 | 11 | |
ஐக்கிய ஜனதாதளம் | 8 | 6 | 2 |
சிரோன்மணி அகாலிதளம் | 3 | 3 | |
நாகாலாந்து மக்கள் முன்னணி | 1 | 1 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு | 43 | 43 | |
இந்திய கம்யூனிஸ்டு | 10 | 10 | |
புரட்சி சோசலிஸ்டு | 3 | 3 | |
பார்வர்டு பிளாக் | 3 | 3 | |
பகுஜன் சமாஜ் | 17 | 17 | |
தெலுங்கு தேசம் | 5 | 5 | |
மதசார்பற்ற ஜனதாதளம் | 3 | 3 | |
ராஷ்ட்ரீய லோக்தளம் | 3 | 3 | |
தெலுங்கானா ராஷ்டிர சமிதி | 3 | 3 | |
ம.தி.மு.க | 2 | 2 | |
அசாம் கணபரிஷத் | 2 | 2 | |
திரிணாமுல் காங்கிரஸ் | 1 | 1 | |
மொத்தம் | 531 | 270 | 261 |
இதில் முடிவை வெளியில் சொல்லாத, நேற்றுவரை விலைபடியாத குதிரைகளான மூன்று சுயேட்சைகள், பாரதீய நவசக்திக் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் மற்றும் வாக்களிக்க முடியாத/விரும்பாத உறுப்பினர்களும் உள்ளனர். மேற்காணும் பட்டியிலில் உள்ள் ஆதரவு எதிர்ப்பாகவோ எதிர்ப்பு ஆதரவாகவோ மாற்றமடையக் கூடும்.
ஐநூற்று நாற்பத்து ஐந்து இடங்களைக் கொண்ட நமது பாராளுமன்றத்தைக் நிலைக்க வைப்பதோ கலைக்க வைப்பதோ ஐந்தே ஐந்து உறுப்பினர்களின் கைகளில் இருக்கிறது!
காலியாக உள்ள இரண்டு இடங்களும் உரிமை பறிக்கப் பட்டு ஓரிடமும் போக மீதமுள்ள 542 உறுப்பினர்களுள் 272 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே இப்போதுள்ள நடுவண் அரசு மேலும் ஓராண்டு ஆள முடியும்.
நேற்று மாலை நிலவரப்படி 267 உறுப்பினர்கள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில், “குறைந்தது நான்கு காங்கிரஸ் உறுப்பினர்களாவது ஆளும் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பர்” என்று எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் “பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்களுள் சிலர் எங்கள் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்” என்று காங்கிரஸும் வெளிப்படையாகவே அறிவித்துக் குதிரை வியாபாரத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர் என்பதை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டனர்.
மேலும், மொய் ஓட்டுக் கணக்குப் பார்ப்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியுடைய வீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கு வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தடபுடலான விருந்தளிக்கப்பட்டது.
எதிர்காலப் பிரதமர் என்று முன்மொழியப் பட்டிருக்கும் மூன்றாவது அணித் தலைவி மாயாவதி, கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டு ஆட்சியைக் கவிழ்ப்பதில் முனைப்புடன் இருக்கிறார். ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி எனப் பெயரிடப்பட்ட மாயாவதி தலைமையிலான மூன்றாவது அணியில் அ.தி.மு.க., சமாஜ் வாடி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்பட 8 கட்சிகள் முன்னர் அங்கம் வகித்தன. முதலில் இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. அண்மையில் குதிரை வியாபாரத்தில் சிக்கி, சமாஜ்வாடி கட்சி `பல்டி‘ அடித்து காங்கிரஸ் பக்கம் போய் விட்டது. தற்போது 3-வது அணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத், இந்திய தேசிய லோக் தளம், ஜார்க்கண்ட் விகாஸ் கட்சி, ராஷ்டீரிய லோக் தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கான, ராஷ்டீரிய சமிதி உள்பட 10க் கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.
மேற்காணும் பட்டியலில் ஒரு சிக்கல் உள்ளது. கொலைக்குற்றம் சாட்டப் பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.கவோடு சேர்ந்து கொண்டு அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக உறுதிப் படுத்தாத செய்திகள் கசிந்தன. அதையடுத்து, “ஜா.மு.மோ. உறுப்பினர்கள் ஐவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால், சிபு சோரனுக்கு நடுவண் அரசில் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப் படும்; அமைச்சர் பதவிக்கு அவர் முற்றிலும் தகுதியானவர்” என்று கொலைக் குற்றம் சாட்டப் பட்டுள்ள சிபு சோரனைப் புனிதப் படுத்தி, நாடாளுமன்ற விவகார அமைச்சர் வயலார் ரவி அறிக்கை விட்டிருக்கிறார்.
பா.ஜ.க. மட்டும் சளைத்ததா?
“எங்களோடு சேர்ந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு வாக்களித்தால் நடுவண் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பிழைத்து விட்டாலும்கூட சிபு சோரனை நாங்கள் ஜார்கண்டின் முதலமைச்சர் பதவியில் அமர்த்துவோம்” என்று பா.ஜ.க. அறிவித்திருக்கிறது.
இதிலிருந்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களுக்கு ஒரே செய்தியைத் தெளிவாகச் சொல்லுகின்றனர். அதாவது “கொலைக் குற்றவாளியே ஆனாலும் தங்களோடு சேர்ந்து விட்டால், கோப்புகள் மூடப் படுவதோடு பதவியும் வழங்கப் படும்” என்பதுதான் அந்தத் தெளிவான ஞானஸ்நானச் செய்தி.
மேலும், “ஆளும் கூட்டணிக்கு ஆதரவு வாக்களிப்பதற்காக 250 மில்லியன் ரூபாய்வரை எனது ஒரு வாக்குக்கு விலை பேசப் பட்டது” என்று முலாயம் சிங்குடைய சமாஜ்வாடிக் கட்சியின் அதிருப்தியாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனவ்வர் ஹஸன் வெளிப்படையாகக் கூறுகிறார்.
நமது நோக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்ற ஜோஸியம் சொல்வதன்று. வியாபாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமே.
இந்தத் தலையங்கம் வெளியாகும்போது, பேரங்கள் பேசப்பட்டுக் குதிரை வியாபாரம் நடந்து முடிந்திருக்கும்.
சத்தியமேவ ஜெயதே!