குண்டு வெடிப்புகள் கூறும் இரண்டு செய்திகள்!

கடந்த 25.07.2008 வெள்ளிக்கிழமையன்று பெங்களூர் விட்ட் மல்லய்யா சாலை, பந்தரப்பால்யா, ரிச்மண்ட் வளைவு, மைசூர் சாலை, நயந்தஹல்லி, மடிவாளா, ஆடுகோடி ஆகிய இடங்களில் மதியம் 1.30 மணி முதல் சாலை ஓரங்களிலும் அகதிகள் முகா‌‌ம்களுக்கு அருகிலும், இரும்பு நட்டுகளால் தயாரிக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

டைமர் உபயோகித்து 1 மணி நேரத்திற்குள் 9 இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “குண்டுவெடிப்புக்கு ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பரிசோதித்த வெடிகுண்டு நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் கடந்த 2005 ஆம் ஆண்டு கேரளவிலுள்ள கோழிக்கோடு எனும் இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உபயோகப்படுத்தப்பட்ட அதே ஜெலட்டின் குச்சி வகையைச் சேர்ந்தது எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

 

ஒசூ் சாலைக்கும் மடிவாளாவிற்கும் இடையில் 4 குண்டுகளும் நயந்தஹல்லி, விட்டல் மல்லய்யா சாலை, ரிச்மண்ட் வளைவு ஆகிய இடங்களில் 3 குண்டுகளும் வெடித்தன.

இதை வாசித்தீர்களா? :   சரியும் அமெரிக்கப் பொருளாதாரம், உலகம் அமைதியை நோக்கி...

 

பெங்களூரு குண்டு வெடிப்புகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் அடுத்த நாளான 26.07.2008 சனிக்கிழமையன்று மாலை 6.45 மணியளவில் அஹ்மதாபாத்தின் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது. அடுத்தடுத்து 16 இடங்களில் குண்டுகள் வெடித்து நாட்டையே உலுக்கியது. இந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 45 பேர் உயிரிழந்தனர்; 161 பேர் படுகாயமடைந்தனர்.

‌‌க்கள் நெருக்கடி மிகுந்த மணி நகர், பாபு நகர், டைமண்ட் மார்க்கெட், சர்நாக்பூர், ராஜ்பூர், ஜவஹர் நகர், ஹட்கேஷ்வர், நரோல் வளைவு, இசன்பூர், தக்கார் பாபுநகர் உள்ளிட்ட 16 இடங்களில் மாலை 6.45 மணி முதல் சுமார் 25 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

 

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அஹ்மதாபாத்தில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. தொலைபேசிகள் செயல்படவில்லை. நகர் முழுவதும் காவலர் குவிக்கப்பட்டனர். பல இடங்களில் போக்குவரத்துப் பாதிப்புக்கு உள்ளானது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளைக் காவல்துறையினர் சீல் வைத்தனர்.

 

பெங்களூரைப் போலவே அஹ்மதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடிகுண்டுகள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்தன. குண்டுவெடிப்புகள் நடந்த இடங்கள் பெரும்பாலானவை மக்கள் அதிகம் கூடும் கடைவீதிப் பகுதிகள் ஆகும்.

 

இதில் மணிநகர் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மட்டும் மொத்தம் 3 இடடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. அங்குள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தில் குண்டு வெடித்தது. சைக்கிளில் வெடிகுண்டுடன் வந்த ஒருவர், பேருந்தின் மீது மோதி குண்டை வெடிக்கச் செய்ததாகத் தெரிகிறது. இதில் பேருந்து பாதி எரிந்து போய் விட்டது.

இதை வாசித்தீர்களா? :   கிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்

இவை தவிர எல்.ஜி. மருத்துவமனை அருகே ஒரு குண்டு வெடித்தது. சிவில் மருத்துவமனையிலும் ஒரு குண்டு வெடித்தது. சிவில் மருத்துவமனை அருகே நடந்த குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து  GJ-6 CD 9718 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட்டைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் காரில் குண்டுடன் வந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

அஹ்மதாபாத் தொடர் குண்டு வெடிப்புக்குச் சற்று முன்னர் ஊடகங்களுக்கும் தொலைக்காட்சி நிலையங்களுக்கும், தாங்கள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப் போவதாக ‘இண்டியன் முஜாஹிதீன்’ என்ற அமைப்பினர் alarbi_gujarat@yahoo.com மற்றும் guru_alhindi@yahoo.fr என்ற முகவரிகளிலிருந்து மின்னஞ்சல்கள் அனுப்பினர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தனைக்கும் குஜராத் முதல்வர் மோடியின் உளவுத்துறை மொத்தமாகச் செயலிழந்து போயிருக்கிறது. குண்டு வெடிப்பதற்கு முன்னர் அதுகுறித்து குஜராத் உளவுத்துறைக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை.

 

குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி மக்களின் உயிரைக் குடிக்கும் எவராயினும் அவர்கள் மனிதகுல விரோதிகளாவர். மேலும், இந்திய முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி அவர்களை மென்மேலும் பலிகடா ஆக்குவதற்கு முயலும் சதிகாரர்களாவர். இண்டியன் முஜாஹிதீன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு செயற்படும் கூட்டத்தினரைக் காவல்துறையினர் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். அநியாயமாக உயிரிழந்தோரது குடும்பத்திற்கு மத்திய – மாநில அரசுகள் நஷ்ட ஈடும் அவர்தம் குடும்பத்தினருள் தகுதியுடையோருக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும்.

 

பரபரப்பான அரசியல் குற்றங்களை மக்கள் பேசத் தொடங்கும்போது மட்டும் நம் நாட்டில் குண்டுகள் எப்படி வெடிக்கின்றன என்பது எப்போதும் புரியாத புதிராக இருக்க, நம் நாட்டில் எங்கு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தாலும் அவை இரண்டு செய்திகளை மறவாமல் சொல்லுகின்றன:

 

1. இந்திய முஸ்லிம்கள் மீது பழி விழுந்து அதனால் அப்பாவி முஸ்லிம்கள் நிம்மதி இழக்க வேண்டும்.

2. நம் நாட்டின் உளவுத்துறை, குண்டு வெடிக்கும் முன்னர் அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் தூங்கி விட்டு, வெடித்த சப்தம் கேட்ட பின்னரே விழித்துக் கொள்ளும்!

 

வெடிகுண்டுகள் ஒழிய வேண்டும்; மனிதகுல விரோதிகள் அழிய வேண்டும்!