கிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்

லகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.”

– M.H.Hart, ‘The 100! A ranking of the most influential persons in history‘ New York, 1978, pp. 33).

அரசியல், ஆன்மிகம், இராணுவம், மக்கள் நலன் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து, உலக வரலாற்றில் இன்றுவரை விதந்து பேசப்படுகின்றவரும் உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவருமான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி இஸ்லாத்தின் எதிரிகள் அவ்வப்போது சரடுகள் அவிழ்த்துவிடுவதுண்டு.

அவை அத்தனையும் தக்க சான்றுகளுடன் முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்பட்டு, முனைமழுங்கிப் போயின என்பது வரலாறு.

அந்த வரிசையில் தினமணி நாளேட்டின் சிறுவர் மணிக்கான 15.02.2014 நாளிட்ட இதழின் பக்கம் 31இல்

“இயேசு சிலுவையில் அறையப்பட்டது, முகமது நபி கற்கள் வீசப்பட்டுக் கொல்லப்பட்டது, சாக்ரடீஸ் விஷம் தரப்பட்டு மாண்டது, அண்ணல் காந்தி, ஆப்ரகாம் லிங்கன், ஜான்கென்னடி ஆகியோர் கொல்லப்பட்டது – அனைத்தும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று!” என்று சி. பன்னீர்செல்வன் என்பவர் எழுதியது வெளியாகி இருந்தது.

ஒரு வரலாற்றுத் தகவலை எழுதுவதற்கு முன்னர் அத்தகவலை நன்றாக உறுதி செய்துகொண்டு எழுதுவதே நல்ல எழுத்தாளர்களின் அடிப்படைப் பண்பு. உலகளாவிய சமயத் தலைவர் ஒருவரைப் பற்றிய தகவல் எனில், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உறுதியான தகவலை எழுத்தில் வடிப்பது அதை எழுதுபவரின் கடமையாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார்கள் எனபதும் அவர்கள் மரணமடைந்தது ஒரு திங்கட்கிழமையில் என்பதும் மிகவும் எளிதாகப் பெறக்கூடிய தகவல்களே [http://en.wikipedia.org/wiki/Prophet_Mohamed#Death_and_tomb].

இவற்றுள் எதையும் கருத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் எழுதுவது கழிசடை ஊடகங்களின் வழக்கம். அதையே தினமணியும் செய்தது.

அந்தச் செய்தியைப் படித்த வாசகர்கள் பலர், தினமணிக்குத் தம் கண்டனங்களை மின்னஞ்சல் வழியாகப் பதிவு செய்ததோடு, அடுத்த இதழில் திருத்தம் வெளியிடுமாறு வேண்டுகோளும் விடுத்தனர்.

அறியாமல் ஏற்பட்டிருந்த பிழையாக இருந்தால், பிழையைச் சுட்டிக்காட்டிய தன் வாசகர்களுக்கு நன்றியையும் வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று, வருத்தமும் திருத்தமும் தினமணி வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டு ஊடக தர்மத்தை நிலைநாட்டுவதற்கு தினமணியின் தன்மானம் இடம்தரவில்லை.  ஆனால், ஆன்லைன் பதிப்பில் மட்டும்,
“இயேசு சிலுவையில் அறையப்பட்டது, முகமது நபி கொல்லப்பட்டது, சாக்ரடீஸ் விஷம் தரப்பட்டு மாண்டது, அண்ணல் காந்தி, ஆப்ரகாம் லிங்கன், ஜான்கென்னடி ஆகியோர் கொல்லப்பட்டது – அனைத்தும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று!” என்று அரைகுறையாகத் திருத்தம் செய்திருக்கிறது.

 
தினமணி ஆசிரியர் குழுவினரின் வரலாற்று அறிவு எத்துணை மோசமானது என்பதைத் தமிழ் வாசக உலகிற்குக் காட்டியதோடு, காழ்ப்புணர்வும் குரோதம் கொப்பளிக்கும் ஒரு சிலர் மீடியாவில் இருந்தால் அதன் வெளிப்பாடுகள் எப்படி இருக்கும் என்பதற்கும் சிறந்த உதாரணமாக அமைந்திருந்தது அந்தப் பதிவு.
 
1932இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழைத் துவங்கிய பி. வரதராஜுலு நாயுடு, கடந்த செப்டம்பர் 11, 1934இல் தினமணியை துவங்கினார்.

இதை வாசித்தீர்களா? :   குடியரசுத் தலைவர் பதவியும் மதச்சார்பின்மையும்!

தினமணியின் நிறுவனரான வரதராஜுலு நாய்டு கடந்த July 23, 1957இல் தெருநாய்கள் கடித்து வலி தாங்காமல் நாக்குத் தள்ள தூக்கு மாட்டி, தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனார் என்று எஸ். ஸ்ரீராம் என்ற பெயரில் ஒரு வாசகர் கட்டுரை ஒன்றை எழுதி ஊடகங்கள் வெளியிட்டிருந்தால் தினமணி குழுமத்தின் மனநிலை எப்படி இருக்கும்? எதிர்வினை என்னவாக இருக்கும்?

 
ஒரு நாளிதழின் நிறுவனரைப் பற்றித் தவறான தகவல் தந்தால் சகித்துக் கொள்வார்களா? இஸ்லாம் எனும் உலகளாவிய சமயத்திற்குப் புத்துயிரளித்த சீர்திருத்தவாதியை, உலக முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதித்துப் போற்றும் தலைவரைப் பற்றிய தவறான, எதிர்மறைத் தகவலைப் பதிந்ததுமல்லாமல் தவற்றைச் சுட்டிக் காட்டிய பின்னும் திருத்தம் வெளியிடாததற்குக் காழ்ப்பைத் தவிர வேறு காரணமில்லை.

‘தினமணி என்பது தரமான நடுநிலை நாளிதழ்’ என்ற ஒரு தவறான பிம்பம் தமிழ் முஸ்லிம்களிடையே பதிந்து இருந்தது. அந்த பிம்பம் இனி உடைந்து போகும்!