மின்வெட்டு : இயலாமையும் நடுநிலை இல்லாமையும்

Share this:

நாட்டு மக்களின் மறதி என்பது ஓட்டுப் பொறுக்கும் நாலாந்தர அரசியல்வாதிகளின் மூலதனம் மட்டுமல்ல; நடுநிலை வேடம் கட்டியாடும் ஊடகங்களுக்கும்தான்.

சான்றாக, தினமணியில் வெளியான தலையங்கத்தின் சில பகுதிகளைப் படித்துக்கொள்வோம்:

தமிழகத்துக்கு மின்சாரத் தட்டுப்பாடு என்பது புதிதல்ல. தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் கணிசமான இடைவெளி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. மின்தேவையைக் கருத்தில் கொண்டு, மின்உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் தேவைகளும் இருமடங்காக அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்தப் பற்றாக்குறை அடிவானம் போல அடையமுடியாத இலக்காக நீண்டுகொண்டே செல்கிறது.

ஆனாலும், இதற்கு முன்பிருந்த ஒவ்வொரு ஆட்சியின்போதும் ஒவ்வொரு விதத்தில் இந்தப் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு வந்திருக்கிறது

தமிழகத்தின் மின்தேவை 12,000 மெகாவாட். ஆனால் உற்பத்தியோ வெறும் 7,000 மெகாவாட் மட்டுமே. இந்தக் குறைந்த மின்உற்பத்தியைக் கொண்டு, மக்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை. தொழிற்கூடங்களையும் திருப்தி செய்ய இயலவில்லை …

… இந்த நிலைமையைச் சமாளிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசுக்குப் பரிந்துரைத்து, அதை அமல்படுத்தியிருக்க வேண்டிய அதிகாரிகள், மெத்தனமாக இருந்துவிட்டு இப்போது வெறுமனே மின் பற்றாக்குறையை மட்டும் காரணமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்து, அதற்கு முன்பாகவே மின்சாரத்தைப் பெறும் ஒப்பந்தங்களைப் போட்டிருக்க வேண்டும். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே இப்போது மின்சாரத்தை மற்ற மாநிலங்களிலிருந்து பெறுவது சாத்தியம் என்று இப்போது கூறுகிறார் மின்துறையின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் தலைவர் சி.பி.சிங். ஏன் இந்த நிலைமையை முன்கூட்டியே அறிந்து, முன்பதிவு செய்திருக்கவில்லை என்பதுதான் நம் கேள்வி.

தமிழகத்தின் மொத்த மின் உபயோகத்தில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் வெறும் 16% மட்டுமே. வியாபார நிறுவனங்கள், கடைகள், ஷோ ரூம்கள் போன்றவற்றுக்காக 26% பயன்படுகிறது. தொழிற்சாலைகளுக்கான உயர் அழுத்த மின்சாரம் 42%மும் குறைந்த அழுத்த மின்சாரம் 12%மும், உபயோகப்படுத்தப்படுகின்றன. மின்கசிவால் ஏற்படும் விரயம் ஒருபுறம் இருக்கட்டும். மின் திருட்டால் ஏற்படும் இழப்பு மட்டுமே ஏறத்தாழ ரூ.6,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரை என்று கூறப்படுகிறது. இதுவும், ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே நடைபெறுகிறது என்று கேள்விப்படும்போது அதிர்ச்சி அதிகரிக்கிறது …

இந்தப் பிரச்னைக்காக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கம் முன்பே களத்தில் இறங்கியிருந்தால், தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பே பிற மாநிலங்களில் அப்போதைய விலைக்கே மின்சாரத்தைப் பெற முன்பதிவு செய்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். தடையில்லாமல் மின்சாரமும் கிடைத்திருக்கும். மின்வாரியத்துக்கு இழப்பும் ஏற்பட்டிருக்காது …

என்னது? உங்கள் கண்களை உங்களால் நம்பமுடியவில்லையா? மின்வெட்டுப் பிரச்சினையைக் கருவாகக் கொண்டு, தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்து தினமணி தலையங்கமே தீட்டியுள்ளதா எனக் குழம்புகின்றீர்களா?

குழப்பமடைய வேண்டாம்.

மேற்காணும் தலையங்கப் பகுதிகள் தினமணியில் வெளியானவைதாம். தமிழ அரசின் கையாலாகாத தன்மையினால் ஏற்பட்ட மின்வெட்டைப் பற்றித்தான் தினமணி தலையங்கம் தீட்டியது. ஆனால், 16 மணிநேர மின்வெட்டை நடப்பில் கொண்டுவந்திருக்கும் அ.தி.மு.க. அரசைப் பற்றிய கண்டனத் தலையங்கமன்று இது. வெறும் மூன்று மணிநேர மின்வெட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்த தி.மு.க. அரசைப் பற்றிய “கண்கெட்ட பிறகு …” எனும் தலைப்பிலான தலையங்கம் அது. வெளியான நாள் 5.5.2011.

மூன்று மணிநேர மின்வெட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், “இதற்கு முன்பிருந்த ஒவ்வொரு ஆட்சியின்போதும் ஒவ்வொரு விதத்தில் இந்தப் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு வந்திருக்கிறது …” என்று அப்போது குறிப்பிட்ட தினமணியில், கடந்த 18.10.2012இல் ஒரு பட்டிமன்றத் தலையங்கம் வெளியாகியுள்ளது. தலைப்பு : “இல்லாமையா? இயலாமையா? இயங்காமையா?“.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கியடித்து எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தின் மொத்தக் கருத்தும், “தற்போது தமிழகத்தில் திணிக்கப்பட்டுள்ள 16 மணிநேர மின்வெட்டு என்பது இல்லாமையால் ஏற்பட்டதாகும்; இயலாமையாலன்று” என்று முடிகிறது. அதாவது கடந்த தி.மு.க.ஆட்சியின்போது தனியாரிடமிருந்து வாங்கி வினியோகித்த மின்சாரத்தை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் 70% குறைத்தது தற்போது நிலவும் மின்வெட்டுக்கு உண்மையான காரணமல்லவாம். தமிழகத்தின் மின் பற்றாக்குறைக்கு நடுவண் அரசுதான் முழுப் பொறுப்பாம்.

ஆனால், “மின்சார உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு மாநில அரசுகள்தாம் முழுப் பொறுப்பு. மின் உற்பத்திக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகிறது. தமிழகத்தில் மின் பற்றாக்குறைக்கு, மின் உற்பத்திக்கான நீண்டகால திட்டம் இல்லாததே காரணம்” என்று உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஒரு மனுவில், நடுவண் அரசு தெளிவாக்கியுள்ளது.

“சுமார் 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை இருக்கும்போது ஒரு மாநிலம் என்ன செய்ய இயலும்?” என்ற தட்டையான கேள்வியை முன்வைத்திருக்கிறது தினமணி.

கடந்த ஆட்சியின்போது ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. அதுவும் ‘அறிவிக்கப்பட்ட மின்வெட்டு’. அந்த மின்வெட்டிலும் தலைநகர் சென்னை விலக்குப் பெற்றிருந்தது. அந்த மின்வெட்டைக் காரணம் காட்டியே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், “தடையில்லா மின்சாரம் வழங்குவோம்” என்று அ.தி.மு.க.வின் தலைமைமுதல் அதன் அடிபொடிகள்வரை பிரச்சாரம் செய்தனர். இளிச்சவாயர்களான பொதுமக்களும் அ.தி.மு.க.வை அரியணை ஏற்றினர்.

‘தடையில்லா மின்சாரம்’ தமிழகத்துக்கல்ல; அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் மற்றும் அதன் கட்சிக்காரர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் எந்த ஊரில் நடக்கிறதோ அங்கு மட்டும்தான்; அன்று மட்டும்தான் என்பது இன்னும் சில ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் சாத்தியமுண்டு.

கடந்த 13.10.2012 சனிக்கிழமை அ.தி.மு.க.வின் நாடாளுமன்றத்தின் கடலூர்த் தொகுதிச் செயல்வீரர்கள் கூட்டம், மஞ்சக்குப்பத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் & மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மின்வாரியத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி & நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகிய ஐந்து அமைச்சர்களும் அ.தி.மு.க.வின் முன்னாள் & இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அன்று ஒருநாள் மட்டும் கடலூர்ப் பகுதி மக்களுக்குக் காலையிலிருந்து மாலை 7 மணிவரை மின்வெட்டு இல்லாமல் கழிந்தது. இந்தச் செய்தியையும் தினமணி, “மின்வெட்டு மறைந்ததன் மர்மம் என்ன?” எனும் வினாக்குறித் தலைப்புடன் கடந்த 15.10.2012இல் வெட்கத்துடன் செய்தியாக வெளியிட்டது.

சென்னை தவிர்த்த மொத்தத் தமிழகத்துக்கும் தற்போது அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்பது மொத்தம் 8 மணி நேரமாகும். ஆனால், அறிவிக்கப்படாத மின்வெட்டுக்குக் கணக்கெல்லாமில்லை.  நாளொன்றின் பாதிக்குமேல் மின்வெட்டு நடைமுறையிலிருக்கும்போது “இல்லாமையே” எனப் பட்டிமன்றத் தீர்ப்பளிக்கும் தினமணியின் 18.10.2012 தலையங்கத்தின் பகுதிகள் சிலவற்றையும் பார்ப்போம்

மின்வெட்டைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விதவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் கடையடைப்பு நடத்துகிறார்கள். சில ஊர்களில் ஆர்ப்பாட்டம், தெருமுனைக்கூட்டம். சிறுதொழிலதிபர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோவை போன்ற நகரங்களில் பேரணி நடத்தப்படுகின்றது.

மின்சார அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிடுகிறார்கள். சில இடங்களில் இரவு நேரத்தில் முற்றுகையிட்ட மக்கள், ஆத்திரத்தில் மின் அலுவலர்களைத் தாக்கியுள்ளனர்.

கரண்ட் காணாமல் போய்விட்டது கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று சிலர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். அந்தப் புகாருக்கு காவல்நிலையமும் ரசீது கொடுக்கிறது. “காணவில்லை- பெயர் மின்சாரம், அடையாளம் – தொட்டால் ஷாக் அடிக்கும்’ என்று சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

இதெல்லாம் சரி. மின்தடைக்குத் தமிழக அரசு மட்டுமே காரணமா, தமிழக அரசும் காரணமா, அல்லது எந்த அரசாக இருந்தாலும் இந்த நிலையைச் சந்திக்க வேண்டியாகியிருக்குமா? மின்சாரத்தை வைத்துக்கொண்டே தமிழக அரசு வழங்க மறுக்கிறதா? சுமார் 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை இருக்கும்போது ஒரு மாநிலம் என்ன செய்ய இயலும்?

இந்தக் கேள்விகளைப் போராட்டம் நடத்துபவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே இந்தப் பிரச்னையை அணுகுகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிர்வாகம் செய்யத் தெரிந்திருந்தால், இந்நேரம் தட்டுப்பாட்டை போக்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் வாதம் செய்கின்றன. ஆனால், மத்திய அரசு ஏன் தர மறுக்கிறது என்பதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை. கூடுதல் விலைக்கு வாங்கி, குறைந்த விலைக்கு எத்தனைக்காலத்துக்கு சமாளிக்க முடியும் என்பது பற்றியும் அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை.

மின்வாரியத்திடம் மின்சாரம் போதுமான அளவு இல்லை என்பதே உண்மை. மத்திய தொகுப்பிலிருந்து அதிக மின்சாரத்தை தமிழகம் கெஞ்சிக் கேட்டாலும் தரப்படவில்லை. மேட்டூர் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஆகியன அடிக்கடி பழுதாகின்றன. பருவமழைக் காலத்தில் காற்றாலை மின்சாரம் குறைந்துபோனது. உற்பத்தியாகும் குறைந்த மின்சாரத்தை பகிர்மானம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தமிழக மின்வாரியம் திணறிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், மின்தட்டுப்பாடு குறித்து நிலைமையை ஆராய மின்துறை அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து, திங்கள்கிழமைதோறும் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள முதல்வரின் நடவடிக்கை இந்த நேரத்திற்கு அவசியமானது. …

நாள்தோறும் மத்திய அரசு தரும் மின்சாரம் இவ்வளவுதான் என்று சொல்வதால், அரசியல் ரீதியாகவும் மாநில அரசுக்கு சாதகம்தான். உள்ள நிலைமையை வெளிப்படையாகப் பேசுங்கள். மக்கள் புரிந்துகொள்வார்கள். பேசாவிட்டால், இதை, அரசின் தோல்வியாக எதிர்க்கட்சிகள் சித்திரிக்கும். இல்லாமை வேறு, இயலாமை வேறு, இயங்காமை வேறு! அரசியல் ரீதியாக அணுக வேண்டிய பிரச்னைகளை அதிகாரிகள் மூலம் தீர்க்க முடியாது. … அரசின் இன்றைய நிலைமை இல்லாமைதானே தவிர, இயலாமையோ, இயங்காமையோ அல்ல

கடந்தமுறை அ.தி.மு.க. ஆட்சியிலிருந்த 2001-2006 காலகட்டத்திலும் 2011இல் ஆட்சியில் அமர்ந்து, “ஓராண்டில் நூறாண்டு சாதனை(?)” படைத்த காலகட்டத்திலும் புதிதாக மின் உற்பத்திக்கான திட்டமேதும் தொடங்கப்படவில்லை என்பதிலிருந்து அ.தி.மு.க. ஆட்சிக்குத் தமிழக மக்களுக்கான மின் தேவை குறித்து எவ்வித அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இலட்சணத்தில் மின் தட்டுப்பாடு குறித்து நிலைமையை ஆராய்வதற்கு ஒரு குழு தேவையா? அல்லது முந்தைய ஆட்சி தொடங்கிவைத்து, 2013இல் மின் உற்பத்தியைத் தரவிருக்கும் புதிய பல திட்டங்களை விரைவுபடுத்தி உற்பத்தியைப் பெருக்குவது தேவையா?

தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சொந்தமான தஞ்சை மாவட்டம் குத்தாலத்திலுள்ள 101 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய எரிவாயு மின் நிலையத்திலும் இராமநாதபுரம் மாவட்டம் வழுதூரிலுள்ள இரண்டு 95+92 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய எரிவாயு மின் நிலையங்களிலும் பழுதடைந்து கிடக்கும் எந்திரங்களைப் பழுது நீக்கினால் மொத்தம் 288 மெகாவாட் மின் உற்பத்தியைப் பெறமுடியும். இது, தமிழக அரசின் இயங்காமையாக தினமணிக்குத் தெரியவில்லை. மின் உற்பத்தி இல்லாதபோதும் இந்த மூன்று மின் நிலையங்களுக்கும் தமிழ்நாடு மின் வாரியம் நாளொன்றுக்கு 71,00,000 ரூபாயை GAIL நிறுவனத்திற்குத் தண்டமாகக் கட்டிக்கொண்டிருக்கிறது. இதுவும் இயங்காமையாக தினமணிக்குத் தெரியவில்லை.

மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள மூன்று 500 மெகாவாட் அலகுகளுள் முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). மீதி இரண்டு 500 மெகாவாட் அலகுகளும் கடந்த மாதம் பரிசோதனை செய்யப்பட்டு ஸின்க் ஆகியிருக்கவேண்டும். மேட்டூர், வடசென்னை மற்றும் வள்ளூரின் மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டவை விரிவாக்கத் திட்டங்கள்தாம். இம்மூன்று மின் நிலையங்களின் 5 அலகுகளையும் இயக்கினால் மொத்தம் 2,700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரம் அரசுக்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடமிருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் உற்பத்தி செய்யத் தக்க மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சார உற்பத்தியை இயக்கவில்லை. ஆனால், தினமணியின் பார்வையில் இதுவும் இயங்காமையன்று.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2X500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. இதன் இரண்டாவது அலகு மார்ச் 2012இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். முதலாவது அலகு, ஜூன் 2013இல் மின் உற்பத்தியைத் தொடங்கும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியையும் தமிழக அரசு முடுக்கிவிடவில்லை. இதையும் “இயங்காமையல்ல” என்றே தினமணி சொல்லும்.

நடுவண் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நெய்வேலி முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2X250 மெகாவாட் அலகுகளின் மின் உற்பத்தியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய பங்கு 225 மெகாவாட் ஆகும். இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசுக்கு இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருப்பதற்கான காரணத்தை “இயலாமையல்ல” என்றே தினமணி சாதிக்கும்.

ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய பங்கு 190 மெகாவாட் மின்சாரமாகும். ஆனால், தமிழக அரசு தனக்குச் சேரவேண்டிய மின்சாரத்தை நடுவண் அரசிடம் கேட்காததால் தமிழகத்துக்கான பங்கு 190 மெகாவாட் மின்சாரத்தையும் ஆந்திர மாநிலத்திற்கே நடுவண் அரசு தாரை வார்த்திருக்கிறது. இந்தச் சட்ட மீறலையும் தன் உரிமையையும் தட்டிக் கேட்காதது தமிழக அரசின் “இயலாமை” என்று யாரும் சொல்லிவிட்டால் தினமணிக்குப் பொறுக்காது.

மின்கசிவால் இழக்கப்படும் 20% மின்சாரத்தையும் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் கட் அவுட்டுகளுக்கும் மாநாடுகளுக்கும் கொக்கிபோட்டுத் திருடப்படும் 10% மின்சாரத்தையும் நவீன தொழில் நுட்பம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தித் தன்வயப்படுத்த அரசு இதுவரை என்ன செய்தது? எனும் இயலாமையைக் கேள்வி கேட்டால் தினமணிக்குப் பொத்துக்கொண்டு வந்துவிடும்.

உற்பத்தியைவிட, தேவை அதிகமாக இருந்தால் உப்பையும் வெளியிலிருந்து வாங்கித்தான் உபயோக்கிக்க வேண்டும் என்பது பாமரனுக்கும் தெரிந்ததுதான். “மற்ற மாநிலங்களில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்து, அதற்கு முன்பாகவே மின்சாரத்தைப் பெறும் ஒப்பந்தங்களைப் போட்டிருக்க வேண்டும்” என்று அன்றைய தி.மு.க. அரசைக் குட்டிய தினமணி, இப்போது “இல்லாமையே!” என்று தீர்ப்பளித்திருக்கிறது. இதைத்தான் சாதிப் பற்று என்று சொல்கின்றார்களோ?

மேற்காணும் தகவல்களின் அடிப்படையில், “தினமணி என்பது ஒரு நடுநிலை நாளேடு” என்று பெரும்பாலான தமிழர்களின் பொதுப்புத்தியில் பதிந்துபோன மூடநம்பிக்கையை மூட்டை கட்டி வைப்பதற்கு இதுவே தக்க தருணம்.

oOo

பி.கு. இந்தத் தலையங்கத்திற்கான சில தகவல்கள் கோவை. சா.காந்தி, மற்றும் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்களால் http://www.envazhi.com/it-is-artificial-power-cut-imposed-by-jayalalithaa-govt/ எனும் வலைத்தளத்தில் பதியப்பட்டவை.

‘என்வழி’ தளத்தினருக்கு நமது ஆழிய நன்றி!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.