குடியரசுத் தலைவர் பதவியும் மதச்சார்பின்மையும்!

Share this:

ந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 19.7.2012இல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. அதன் செல்லப் பிள்ளையான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நிறுத்துவதற்கு அரும்பாடுபட்டுத் தோற்றுப் போன பின்னர் முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதாக முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு இறுதி நேரத்தில்  தள்ளப்பட்டது. முதன்முதலில் அ.தி.மு.கவும் பிஜு ஜனதா தளமும் சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

என்றாலும் தாம் குடியரசுத் தலைவராவது என்பது நிச்சயமில்லை என்று சங்மாவே அறிந்து வைத்துள்ளார். அதனால்தான், “உலகில் அதிசயங்கள் நிகழ்வது உண்மைதான். எனக்கும் அதிசயங்கள் நிகழ்வதில் நம்பிக்கை உண்டு. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அதிசயம் நடக்க வாய்ப்பு உள்ளது” என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சப்பைக் கட்டினார்.

நடுவண் அரசின் நிதியமைச்சர்  பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி, நிதி அமைச்சர் பதவி மற்றும் மக்களவை உறுப்பினர் பதவி ஆகிய அனைத்தையும் ராஜினாமா செய்துவிட்டுக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை பிரணாப் நாளை (28.6.2012இல்) தாக்கல் செய்ய உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் பதவி, நம் நாட்டைப் பொருத்தவரை அலங்காரப் பதவியாகவே கருதப்படுகிறது. பிறநாட்டு அரசியல் தலைவர்கள் நம் நாட்டுக்கு வரும்போது ராணுவ மரியாதையோடு சந்திப்பது, மக்களவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்குப் பெயரளவு ஒப்புதல் தருவது போன்றவை தவிர்த்து வேறு சிறப்புகள் குடியரசுத் தலைவருக்கு இல்லை என்றாகிவிட்டது.

முப்படைகளின் தலைவராக இருந்த போதிலும் நம் நாட்டுக் குடியரசுத் தலைவர், இராணுவ நடவடிக்கைகளில் எவ்வகையிலும் தொடர்புகொள்வது கிடையாது. சுதந்திர, குடியரசு தினங்களில் கொடியேற்றி வைத்து இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டபிறகு வெளிநாட்டு விருந்தினர்களோடு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் உயர்தர விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வதோடு சரி. இனி அடுத்த ஆண்டு நிகழ்சியில்தான் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பற்றிய செய்திகள் ஊடகங்களில் இடம்பெறும்!

இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு 62 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதும் நமது குடியரசுத் தலைவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட இந்த ஆடம்பர, அலங்காரப் பதவியிலிருந்த கடைசி நாள் வரையிலும் இவ்வகையில்தான் தங்கள் பதவிக்காலத்தைக் கழித்தனர். அவர்களிலிருந்து சற்றே மாறுபட்டு, பள்ளி மாணவ மாணவியரை அடிக்கடி சந்திக்கும் குடியரசுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் திகழ்ந்தார். குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியாவின் எல்லா மதத்தவருக்கும் தலைவர் என்றாலும் பதவியேற்றவுடன் சங்கராச்சாரியார் போன்ற இந்துமதத் துறவிகளிடம் மட்டும் ஆசி பெறுவது நம் குடியரசுத் தலைவர்கள் அனைவரின் ‘தேசிய’ மரபாக நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த காலகட்டத்தில் பல இடங்களில் அப்துல் கலாம் கலந்து கொண்ட பூஜை புனஸ்காரங்கள், பீட ஆசிர்வாதங்கள் போன்று, அசந்தர்ப்பவசமாக(!)  குதுப்மினாரில் நடந்த தொழுகை ஒன்றில் கலந்து கொண்டது தவிர இஸ்லாமிய அடையாளம் எதனையும் அப்துல் கலாம் வெளிப்படுத்தியதில்லை.

காங்கிரஸின் கடைக்குட்டி ராகுல் காந்தி 2014இல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் அப்பதவிக்குக் காங்கிரஸுக்குள் யாரும் குட்டையைக் குழப்பிவிடக்கூடாது என்பதாலும் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால் சிக்கல் குறையும் என்ற எதிர்பார்ப்பினாலும் பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவராக்கி ‘அழகு பார்க்கும்’ கட்டாயம் சோனியாவுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது குடியரசுத் தலைவராக முன்னிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் என்ற போதிலும் அவர் நிதியமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில்தான் இந்தியப் பொருளாதாரம் அதளபாதாளம் நோக்கிப் பாய்ந்தது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில், “தவறாக எதுவுமே நடக்கவில்லை” என்று ஓயாமல் அறிக்கை விட்டுக்கொண்டிருந்த இவரது அலுவலக மாற்றத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் மந்திரம் நிகழ்ந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

பிரணாப் முகர்ஜியின் தெய்வபக்தி வடநாட்டில் மட்டுமின்றி, தமிழகத்திலும் பிரபலம்.

“கடந்த மூன்று மாதங்களாகக் கோயில்கோயிலாக வலம் வந்தார்கள் பிரணாபின் ஆட்கள். இப்போது ஜோதிடருடன் சேர்ந்து மகாகாளியையும் நம்பத் தொடங்கிவிட்டார் பிரணாப். எதிர்ப்புகளை நசுக்குவதற்காகத் தனது வீட்டிலேயே காளி பூஜையை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. கும்பகோணம் வந்து சூரியனார் கோயிலுக்கு ஒன்பது பசு மாடுகளைத் தானம் செய்து, அதற்கான சிறப்புபூஜைகள் செய்துள்ளார்கள் பிரணாபின் ஆட்கள். பிரணாப்பின் வெற்றிக்காக பூரி ஜகன்னாதர் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்துள்ளன. அவரது குடும்பத்தினரின் ஆஸ்தான ஜோதிடர் என்று சொல்லப்படும் ராஜேஸ் தைதபதி என்பவர்தான் இதையெல்லாம் செய்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பே அந்த ஆலயத்தில் பூஜை செய்யப்பட்ட வஸ்திரங்கள், பிரணாப் வீட்டின் பூஜையறைகளையும் அலங்கரித்துள்ளன” என்றெல்லாம் வருங்கால இந்தியக் குடியரசுத் தலைவரின் பக்தி  குறித்து ஜு.வியின் கழுகார் விவரித்துள்ளார்.

இந்தியக் குடியரசு தலைவர்கள், அவர்களின் உதவியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என்று மேல்மட்ட அதிகாரிகள் அனைவரும் இந்துச் சாமியார்களின் பக்தர்களாக இருப்பதால், அவர்களைக் கைக்குள்போட்டுக் கொண்டு தங்களிடம் ஆசி பெறுவதுபோன்ற காட்சிகளை ஊடகங்களில் பரப்பி, தங்களையும் தங்கள் மடங்களையும் பிரபலமாக்கிக் கொண்டதுபோல், முஸ்லிம்களில் எவரும் இத்தகையக் கீழ்த்தர மத அரசியலில் அப்துல்கலாமைப் பயன்படுத்திக் கொண்டதில்லை.

பிரணாப் முகர்ஜி, அவர் சாந்துள்ள இந்துமத தெய்வங்கள்மீது பக்தியாக இருப்பதை நாம் குறை சொல்லவில்லை. மத சார்பற்ற இந்தியாவின் குடியரசுத் தலைவராக வருபவரின் வெளிப்படையான இத்தகைய மதசார்பு நடவடிக்கைகள் அவருடைய எதிர்கால ஆசையான குடியரசுத் தலைவர் பதவியின் மாண்பினை மாசுபடுத்தக்கூடியவை என்பதை எடுத்துச் சொல்கிறோம்.

ஒரு மதம் சார்ந்த வேள்விகளும் பூசைகளும் பதவியளிக்க வல்லவை எனில் மக்கள் என்போர் எதற்கு? மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகள்தாம் எதற்கு?

ஜெய் மதச்சார்பற்ற(?) ஹிந்த்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.