உள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம் கட்சிகளும்

Share this:

நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எடுத்துள்ள முடிவுகள் வருத்தப்பட வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்துப்போட்டு, பெண்களுக்காக எனவும் தலித்களுக்காக எனவும் ஒதுக்கி, முன்னாள் இந்நாள் முதல்வர்கள் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைப்பதில் ஒன்றுபட்டுள்ளனர்.

குரங்கு பங்கு வைத்த ஆப்பத்தில் எஞ்சியிருக்கும் பகுதிகளிலாவது ஒன்றுபட்டுப் பொது வேட்பாளர்களை நிறுத்தினால்கூட முஸ்லிம்கள் அரசியல் பிரதிநித்துவம் பெற்றுப் பதவிக்கு வருவதென்பது சற்றே கடினம் எனும் சூழ்நிலையில், இம்முறை முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட எடுத்துள்ள மோசமான முடிவால், முஸ்லிம்கள் அதிகம் வாழும் உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் ஏதோ ஒரு சில வார்டுகள்கூட முஸ்லிம்களுக்குக் கிடைக்காமல் போகும் அவல நிலையை நினைத்துக் கவலை கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்து அரசியலுக்கும் கட்சிக்கும் மக்கள் கொடுத்த மரண அடியைத் தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடி, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நரவேட்டை மோடியை அழைத்தும் மோடியின் உண்ணா(?)விரதக் கேலிக்கூத்து நாடகத்துக்குத் தம் அமைச்சர்களை அனுப்பிவைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கிலிருந்து தாம் திருந்தவேயில்லை என்று கூறாமல் கூறும் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாடம் புகட்ட வேண்டுமானால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் செய்ய வேண்டுவது என்ன? சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் தங்களைக் கூட்டணியாக இணைத்துக் கொண்ட மமகவையும் தேமுதிமுகவையும் கம்யூனிஸ்ட்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எட்டித் தள்ளிய ஜெயலலிதாவுக்குத் தகுந்த பாடம் புகட்டும் வழி என்ன? என்று யோசித்துச் செயல்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் களத்தில் நிற்கும் முஸ்லிம் லீக்குகளும் மமகவும் இன்னபிற அமைப்புகளும் அரசியலுக்காகவாவது ஒன்றுபட்டு நின்று, வெல்லும் கூட்டணி காண முயற்சிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் நடப்பதோ வேறு!

ஏற்கெனவே திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, புதிய தமிழகம் ஆகியவை தனித் தனியாகவும் கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழக ஆதரவோடு பாஜகவும் தேமுதிகவோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஓர் அணியாகவும் நிற்கும் நிலையில்,

முஸ்லிம் லீக், மமக ஆகியவையும் தனித் தனியாக நிற்கிறார்களாம்!

விடுதலைச் சிறுத்தைகளும் விடவில்லை.

எஞ்சியுள்ள முஸ்லிம் அமைப்புகளான 1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை, 2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, 3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, 4. இந்தியன் நேஷனல் லீக், 5. சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை, 6. தேசிய லீக் கட்சி, 7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த், 9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில், 10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், 11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை, 12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, 13. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், 14. இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆகியவை விடுதலைச் சிறுத்தைகளோடு கூட்டணி. இந்தக் கூட்டணியில் 6 கிருஸ்துவ அமைப்புகளும் இடம்பெறுகின்றன.

இப்படிச் சிதறிப் போவதோடு, தங்கள் கட்சித் தலைவர்/தலைவி சொல்வதை வேதவாக்குபோல் எடுத்துக்கொண்டு, உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களிக்கும், வாக்குச் சேகரிக்கும் ‘கரை வேட்டி’ முஸ்லிம்கள் இன்னமும் உள்ளனர்.

சமுதாயத்தை இப்படிச் சிதறவிடுவது யாருக்கு இலாபத்தைக் கொடுக்கும் என்ற சிறு சிந்தனைகூட முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இல்லாமல்போய் விட்டதே!

திமுகவுக்குக் கொடுத்த மரண அடியால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த முதல்வர் ஜெயலலிதா, திமுகவினரைச் சகட்டு மேனிக்குக் கைது செய்து சிறையிலடைத்தும் தம் அகங்காரத்தை விட்டுக்கொடுக்காமல் சமச்சீர் கல்வி விஷயத்தில் மாணவர்கள் நலனில் விளையாடி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு நடத்தி, இறுதியில் உச்ச நீதிமன்றத்திடமிருந்து குட்டு வாங்கித் திரும்பியதையும் புதிய தலைமைச் செயலக விஷயத்தில் மக்களின் கோடிகணக்கான வரிப்பணத்தை வீணாக்கி மக்களிடம் வெறுப்புக்குரியவராக மாறியிருப்பதையும் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபடாமல் தனித்தனியாகப் பிரிந்து நின்றால் அது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் பலனை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்குப் புரியவில்லையா?

அரசியலில் கத்துக்குட்டியான, சினிமா கேப்டன் விஜயகாந்துக்கு இருக்கும் அரசியல் தொலைநோக்கு எண்ணம் இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு இருக்கும் பரந்த எண்ணம்கூட இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல்போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது!

14 முஸ்லிம் அமைப்புகள் + 6 கிறிஸ்துவ அமைப்புகளை ஒன்றுகூட்டி அவர்களுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறார் திருமா. இந்த அணியில் புதிய எஸ் டி பி ஐ கட்சியும் இணைந்துள்ளது.

இப்போதைய அரசியல் நிலையில், இந்த அணிக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, சிறுபான்மையினரை அரவணைப்பதில் திருமாவின் அரசியல், ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

அதிமுக அணியிலிருந்து வெளியேறி/வெளியேற்றப்பட்டு, தனித்து நிற்கும் மமகவின் அணுகுமுறையால், அதன் பலன் நிச்சயம் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் கிடைக்கும் என்பது வெளிப்படை. இவ்வாறு எதிர்பார்த்தே, தம் மற்ற கூட்டணிக் கட்சிகளைப் போலவே மமகவையும் ஜெயலலிதா கழட்டி விட்டிருக்கக் கூடும்.

அரசியல் கட்சிகளாகத் தங்களை இனங் காட்டிக் கொள்ளும் மமகவும் முஸ்லிம் லீக்கும் திருமாவுடன் இணையட்டும். இல்லையேல் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கட்டும்.

அதைவிடுத்து, முஸ்லிம்கள் பொது வேட்பாளராக நின்று வெற்றிபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தத்தம் வேட்பாளர்களையும் போட்டியாளர்களாகக் களமிறக்கி, அதிமுக, பாஜக, திமுக, தேமுதிக என வேறு யாராவது வெற்றிபெற வழிவகுத்துத் துணை நின்றால் … அதனை இச்சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.