அலஹாபாத் தீர்ப்புக்கு ஆப்பு

Share this:

பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது?” எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை சரியான பதிலை எவரிடமிருந்தும் இந்திய முஸ்லிம்கள் பெறமுடியவில்லை!

பாபரி மஸ்ஜிதுக்குள் சிலைகள் வைக்கப்பட்ட அயோக்கிய நாளான 22.12.1949க்கு அடுத்த நாள், அயோத்தி நகரின் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ராம் துபே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை:

 

“எனக்குக் கிடைத்த தகவலின்படி, பாபரி மஸ்ஜித் வளாகச் சுவரின் பூட்டை உடைத்தோ ஏணியை உபயோகித்துச் சுவரேறிக் குதித்தோ ராம்தாஸ், ராம் சக்திதாஸ் உட்பட இன்னும் அடையாளம் தெரியாத 50-60 பேர், மஸ்ஜிதுக்குள் நுழைந்து ஸ்ரீபகவானின் சிலையை அங்கு வைத்திருக்கின்றனர். மேலும் பாபர் மஸ்ஜிதின் வெளி-உள் சுவரில் சீதை, ராம் ஆகியோரின் படங்களை வரைந்துள்ளனர். இதன் மூலம் மஸ்ஜிதின் புனிதம் பாழ்படுத்தப்பட்டுள்ளது. பணியிலிருந்த அரசு ஊழியர்களும் வேறு பலரும் இதைக் கண்ட சாட்சிகளாவர். எனவே, இந்நிகழ்வு எழுதிப் பதிக்கப்படுகிறது” (அத்தியாயம் 5, ஆவணம் 2, தேதி 23.12.1949).

இந்த முதல் தகவல் அறிக்கையின்படி, “பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது?” எனும் ஒற்றைவரி கேள்விக்கு ஒரேநாளில் தீர்வு கண்டிருக்க முடியும்.

அயோக்கிய நாளுக்கு நான்கு மாதங்கள் கழித்து, உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஃபைஸாபாத்தின் காவல் துறை இணை ஆணையர் ஜே.என். உக்ரா, ஃபைஸாபாத் நீதிமன்றத்துக்கு எழுத்துப் பூர்வமாகச் சமர்ப்பித்த கடிதத்தின் 12-13ஆவது வரிகள்:

“… இந்தச் சொத்து வழக்கில் குறிப்பிடப்படுவது ‘பாபரி மஸ்ஜித்’ என அறியப்படுவதும் நெடுங்காலமாக முஸ்லிம்கள் வழிபாடு செய்து வந்த இடமுமாகும். அது ஸ்ரீராமச்சந்திரரின் ஆலயமாக இருந்ததே இல்லை”

உத்தரப் பிரதேச அரசு சார்பாக அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, நான்கு மாதங்களிலாவது பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும்.

ஆனால், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி, அவருக்குப் பிறகு அவருடைய மகள் இந்திரா, பேரன் ராஜீவ் ஆகியோரில் தொடர்ந்து, இப்போதுவரை ஆளும் காங்கிரஸ் நடுவண் அரசு, ‘இரட்டை வேடம்’ என்பதை முஸ்லிம்களுக்கான கொள்கையாகவே கொண்டுள்ளது.

எனவே, எளிதாகத் தீர்த்திருக்க வேண்டிய சிறிய பிரச்சினையை இழுத்தடித்தது காங்கிரஸின் நடுவண் அரசு. பாபரி மஸ்ஜித் இழுத்துப் பூட்டப்பட்டபோதும் பூட்டிய மஸ்ஜிதுக்குள் இருந்த சிலைகளுக்குப் பூஜைகள் செய்யப்பட்டன. வழிபாடுகள் தொடர்ந்தன. ராஜீவின் ஆட்சியின்போது அக்கிரமங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு மகா அக்கிரமம் நடத்தேறியது.

அயோக்கிய நிகழ்வு நடந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு, 25.1.1986 அன்று உமேஷ் சந்திர பாண்டே என்ற 28 வயது வழக்கறிஞர், “சிலைகளை நேரடியாகத் தரிசிப்பதற்குத் தடையாக உள்ள பூட்டைத் திறந்துவிடவேண்டும்” என்று ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு ஐந்தே நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்ததாகச் சொல்லிக் கொண்ட மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே, யாரிடமும் விசாரிக்காமல் – குறிப்பாக பூட்டு தொங்கக்கூடிய இடத்துக்குச் சொந்தக்காரர்களாகிய முஸ்லிம்களிடம் விசாரிக்காமல் – 36 ஆண்டுகாலமாகப் பூட்டியிருந்த பூட்டைத் திறந்துவிடும்படி 36 நிமிடத்தில் தீர்ப்பளித்தார். தீர்ப்பைச் செயல்படுத்துமாறு வருவாய்த்துறை அதிகாரி டீ.கே. பாண்டேக்கு உத்தரவிட்டார். வழக்குக் கொண்டு வந்தவர், தீர்ப்பளித்தவர், செயல்படுத்தியவர் அனைவருமே பாண்டேக்கள் என்பது இங்குக் கவனத்தில் கொள்ளத் தக்கது. கூடவே, மேற்காணும் தீர்ப்பை எழுதுவதற்குத தமக்கு உத்வேகம் தந்ததாகப் பிற்பாடு நீதிபதி கே.எம் பாண்டே தமது சுயசரிதையில் கூறிய ‘குரங்குக் கதை’யும் இங்கு நினைவுகூரத் தக்கது. எல்லாவற்றுக்கும் பின்னணியில் ராஜீவ் இருந்ததும் பூட்டு திறக்கப்பட்ட அன்று அவர் கூறிய “டிட் ஃபார் டாட்” உவமையும் ஊரறிந்த இரகசியமாகும்.

oOo

“புதுடெல்லியின் ஜந்தர் மந்தர் சாலையின் 7ஆம் எண்ணில் இயங்கும் கட்டடம் யாருக்குச் சொந்தமானது?” எனும் 1971ஆம் ஆண்டு வழக்கில், 7.2.1972இல் தீர்ப்பளித்த சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் ஏ.ஜி. கட்டிங், “குற்றப் பிரிவு 145இன் கீழ் வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டடம் யாருடைய அனுபோகத்தில் இந்த வழக்குக்கு முன்னர் இருந்ததோ அவரிடமே திருப்பி அளிக்கப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

1971இல் காங்கிரஸ் கட்சி உடைந்து, காங்கிரஸ் (இ), காங்கிரஸ் (ஓ) என இரண்டானபோது, 13.11.1971இல் பழைய (சிண்டிகேட்) காங்கிரஸ்காரர்களைக் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, காங்கிரஸ் (இ) வகையினர் கட்டடத்தைக் கைப்பற்றினர். அந்தக் கட்டடத்தின் முகவரிதான் 7, ஜந்தர் மந்தர் சாலை. “புதுடெல்லியின் ஜந்தர் மந்தர் சாலையின் 7ஆம் எண்ணில் இயங்கும் கட்டடம் யாருக்குச் சொந்தமானது?” என்பது, புதுடெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கான உரிமையை, இருதரப்பினர் கோரி தொடரப்பட்ட வழக்காகும்.

மாஜிஸ்ட்ரேட் கட்டிங் தமது தீர்ப்பின் இடையில், “எவர் உண்மையான காங்கிரஸ் என்று ஆராய்வது சட்டத்தின் வேலையில்லை. மாறாக, எவருடைய அனுபோகத்தில் உரிமை கோரும் இடம் இருந்தது எனத் தெளிந்து தீர்ப்பளிப்பதே சட்டத்தின் கடமை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதே வகையான உரிமை கோரல் வழக்கில், அதே CrPc 145 பிரிவின்கீழ் பாபரி மஸ்ஜிதுக்கான தீர்ப்பை நீதிமன்றங்கள் எப்போதோ அளித்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் அளிக்கவிடவில்லை. அது இடித்துத் தரைமட்டமாக்கப்படும்வரை வாயில் லாலிபாப் வைத்துக் கொண்டிருந்த நடுவண் அரசு, ஒருமாதம் கழித்து 7.1.1993இல் “பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தின்கீழ் இராமனுக்குக் கோயில் இருந்ததா?” என்பதை விசாரித்துச் சொல்லுமாறு உச்சநீதிமன்றத்துக்கு ஒரு கேலிக்குரிய கோரிக்கையை வைத்து வழக்கின் போக்கைத் திசைதிருப்பியது.

நாட்டின் முதுபெரும் வழக்கறிஞர் என்.ஏ. பல்கிவாலா நடுவண் அரசின் அந்தக் கோரிக்கையைப் பற்றி,

“பயிற்சியின் மூலமோ அனுபவத்தின் மூலமோ தகுதிபெறாத ஒன்றைப் பற்றி நீதிமன்றத்திடம் கோரிக்கை வைப்பது நீதித்துறையில் குறுக்கிடுவதாகும். நீதிமன்றங்கள் சட்டத்தின் அடிப்படையிலோ உண்மை நிகழ்வின் அடிப்படையிலோ வழக்குகளை விசாரிக்குமேயன்றி, அகழ்வராய்வு வரலாறு ஆகிய துறைகள் சட்டத்துக்குத் தேவையில்லாதவை. தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அல்லது தம்மால் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே வழக்கின் போக்கை ஒரு நீதிபதி தீர்மானிப்பார். ‘செவிவழியாகக் கேள்விப்படுபவற்றை ஆதாரங்களாக அனுமதிக்கக் கூடாது’ என்பது இந்திய சாட்சியச் சட்டம் மூலமாக நிறுவப்பட்டதாகும்”

என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் காட்டமான கட்டுரை ஒன்றை எழுதி, ‘பெரும்பான்மை வெறும் நம்பிக்கை’க்கான சர்ட்டிஃபிகேட்டுக்கு அலைந்த நடுவண் அரசுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

காங்கிரஸ் நடுவண் அரசு, குடியரசுத் தலைவரை விட்டு, “கோயில் இருந்ததா? இல்லையா?” என விசாரிக்குமாறு கேட்டதற்கு “அது எங்கள் வேலையில்லை” என்று அப்போது பதிலளித்திருந்த உச்சநீதிமன்றம், அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து இப்போது (9.5.2011) உத்தரவிட்டிருக்கிறது.

கூடவே, “நிலத்தைப் பங்கு வைத்துத் தாருங்கள் என்று வழக்காளிகள் எவருமே கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் தான்தோன்றித் தனமாக மூன்று பங்கு வைத்துத் தீர்ப்புக் கூறியிருப்பது பெரும் விந்தையாக இருக்கிறது” என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்துக்குக் குட்டு வைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அவை ஆவணங்களின் அடிப்படையில், நாட்டில் நடைமுறையிலுள்ள அனுபோகச் சட்ட விதிகளின்படி முறைப்படி விசாரித்து அளிக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டும் என்பதே இன்னும் நீதித் துறையில் நம்பிக்கை வைத்துள்ள இந்திய முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.