நீதிபதிகளுக்கு ஜீரணம் ஆகிவிட்டது!

ஜீரணக் கோளாறு
Share this:

முன்னறிவிப்பு:

இது நடிகை குஷ்புவுக்கான வெட்டி விளம்பரமல்ல. இருமாதங்களுக்கு முன்னர் எந்த நீதிபதிகளால் “ஜீரணிக்க முடியாதவை” என்று உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டதோ அதே நீதிபதிகளுக்குக் குஷ்புவின் கருத்துகள் இப்போது ஜீரணம் ஆகிவிட்ட விந்தையின் வேரைத் தேடிப் பார்க்கும் முயற்சி மட்டுமே!

-o-

இந்தியா டுடே இதழ் 28.09.2005 தமிழ்ப் பதிப்பின் 23ஆம் பக்கத்தில்,  ‘எயிட்ஸ் விழிப்புணர்வு’ பற்றி அதன் நிருபர் பீர் முஹம்மது என்பவரிடம் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துகள் தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பின. அவற்றுள்,

  1. திருமணத்திற்கு முன்னர் பெண்கள் பிற ஆண்களுடன் உடலுறவு கொள்வது தவறில்லை. ஆனால், நோயோ கருவோ ஏற்பட்டுவிடாமல் உடலுறவின்போது தற்காப்பு முறைகளைக் கையாண்டு கொள்ள வேண்டும்.

  2. ஒரு படித்த ஆண், தனக்கு மனைவியாக வருபவள் கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகும்.

ஆகிய இரு கருத்துகளும் தலையாயன. அவையிரண்டும்போக,

“நம் பிள்ளைகளுக்குப் பாலியல் கல்வியைப் பள்ளியில் கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளிகள் பயிற்றுவிக்கத் தவறினால் பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றும் சொல்லி வைத்தார். அத்துடன் தற்போதைய கணவரோடு திருமணத்துக்கு முன்னரே சேர்ந்து வாழ்ந்ததாகக் கூற மறக்காதவர், அவரின் இரு பிள்ளைகளுக்கும் பாலியல் கல்வி பயிற்றுவிக்கப் பட்ட விபரம் எதையும் பேட்டியின்போது கூறவில்லை.

நோயையே ‘மருந்து’ எனக்கூறி விளம்பரம் செய்து வயிறு வளர்ப்பவர்கள், எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிக் கருத்துக் கேட்க குஷ்புவைத் தேர்ந்தெடுத்தது வியப்புக்குரியதன்று. தன்னைப் போலவே தமிழகப் பெண்கள் அனைவரும் ‘முன்னேற’ வேண்டும் என்று குஷ்பு விடுத்த அறிவுரையால் அவர் ஆப்பசைத்த குரங்கானார்.

பிழைக்க வந்த இடத்தில் குஷ்பு கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். இந்தியா டுடே இதழில் வெளியான குஷ்புவின் கருத்தைக் குறித்துத் தினத்தந்தி நிருபர் கேள்வி கேட்க, “திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடாத பெண்கள் எத்தனைபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று காட்டுங்கள் பார்க்கலாம்”  என்று திமிர்த்தனமாக அறைகூவியது கூடுதல் அனர்த்தமானது.

ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண்களின் கற்பைக் கேள்விக்குள்ளாக்கியதால் தமிழின அமைப்புகள் பலவும் போராட்டத்தில் இறங்கின. அக்டோபர் 2005இல் பாட்டாளி மக்கள் கட்சி, குஷ்புவுக்கு எதிராக இந்தியக் குற்றவியல் சட்டம் 500, 504, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்குகள் தொடர்ந்தது.

குஷ்புவுக்கு எதிராகத் தொடரப்பட்ட 22 வழக்குகளுள் சேலம் மாவட்டம் மேட்டூர் நடுவர் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கும் ஒன்று. ஆணை பிறப்பித்தும் 11.11.2005இல் விசாரணைக்குக் குஷ்பு வராததால் பிணையில் வெளிவர இயலாப் பிடியாணை பிறப்பித்தது மேட்டூர் நடுவர் நீதிமன்றம்.

அடுத்த அமர்வுக்கு அரக்கப் பறக்க ஓடிவந்து, ரூபாய் 5,000 காப்புத்தொகை கட்டி, “இனிமேல் அவ்வாறெல்லாம் பேசமாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்து, பிணையில் வெளிவந்தார் குஷ்பு. இது நடந்தது 11.11.2005இல்.

இதற்கிடையில் 16.10.2005 நாளிட்டு வெளிவந்த குமுதம் இதழில், “நீங்கள் என்னிடம் கோபப்பட்டதாகக் கூறப்பட்ட எந்தக் கருத்துகளும் என்னால் சொல்லப்பட்டவை அல்ல. நினைவு தெரிந்து நான் ஒருத்தருக்கும் கெடுதல் பண்ணியது கிடையாது. என் நெஞ்சின் அடியாழத்திலிருந்து சொல்கிறேன். தமிழ் மக்களுக்கு கரம் கூப்பிச் சொல்கிறேன். உங்களைப் புண்படுத்துகிற எந்த வார்த்தைகளையும் எனக்குப் பேசத் தெரியாது. இதுதான் நிஜம். இதுதான் சத்தியம்” என்று தமிழ் மக்களிடம் கொஞ்சம்போல் நல்லபெண்ணாகக் காட்டிக் கொள்ள முயன்றார்.

இந்நிலையில் அரியலூர், திருவண்ணாமலை நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க 4 வார இடைக்கால தடைவிதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், “விசாரணைக்கு குஷ்பு நேரில் வரவேண்டும்” என நடுவர் நீதிமன்றங்கள் விதித்த உத்தரவுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி இடைக்காலத் தடைவிதித்தார்.

தெம்படைந்தார் குஷ்பு.

முழுதாக ஒருமாதம் முடியவில்லை. அதற்குள், செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் நடத்திய சர்வதேசப் படவிழாவின் தொடக்க நிகழ்ச்சி குறுக்கிட்டது. சென்னை ஃபிலிம் சேம்பர் தியேட்டரில் நடைபெற்ற அந்த விழாவில் பங்குகொண்ட குஷ்பு, “நான் முன்பு சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக நான் வெட்கப்படவும் இல்லை” என்று கூறித் தன் திமிரைப் புதுப்பித்தார்.

தனக்கு எதிரான எல்லா வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் குஷ்பு. ஆனால் வழக்குகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்காணும் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் குஷ்பு வழக்குத் தொடுத்தார். அதில், தனது பேச்சுரிமையை உயர் நீதிமன்ற உத்தரவு பறிப்பதாகக் குறிப்பிட்டு, தனக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரியிருந்தார்.

-o-

நீதிபதிக்குப் படித்துக் காட்டப்பட்ட பகுதி

Chastity is Becoming Outdated

Women in Chennai were lagging behind Bangalore in expressing sexual desires. But Chennai women are now coming out of hibernation. I see a lot of women going out, in pubs and discos here. Women are able to talk about sex without inhibition. Given our conservative Indian backdrop, women are slowly coming out. But I do have questions about this women liberation when cases like Stefani’s accident are happening (this girl was chased and killed by drunken youth after a night party in a Chennai hotel). But at the same time, I think sex education is a must in our schools. When the schools fail to teach sex, parents should educate their children about sex. In my opinion, sex is not only related to body; it’s got a lot to do with our minds. I can’t understand how some girls could change their boyfriends every Friday. When a girl is sure about her boyfriend she can tell her parents that she’s going out with him. When the girl has a serious relationship the parents should also allow it. Our society should liberate itself from such ideas that the brides should all be virgins at the time of marriage. No educated man will expect his bride to be virgin at the time of marriage. But when indulging in pre-marital sex, the girl should guard herself against pregnancy and sexually transmitted diseases.

I married a guy who I love. As we were sure about our relationship, we lived together even before marriage. Now it is six years since we got married. As we have two kids, our responsibilities have increased. As our children sleep in the same bedroom, my husband and me should find time for ourselves. But still our sex life is enjoyable. Married couples should be able to give each other happiness physically also. Satisfying each other is happiness. When they understand the other person’s sexual desires, there won’t be any problems in married life. Some couples make use of pornography to add spice to their sex lives. I don’t see anything wrong with that. At the same time each one should understand the other person’s likes and dislikes; comfort and discomfort levels. When women express their sexual desires they are looked down upon. This attitude should change. Sex is about two minds.

(As told to Peer Mohamed)
This guest column by Khushboo appeared on page No. 23 of INDIA TODAY’s Tamil edition, issue dated September 28, 2005.

கடந்த 19.01.2010இல் குஷ்புவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி, “பெண்கள் குறித்த குஷ்புவின் கருத்துக்கள் ஏற்க முடியாதவையாக உள்ளன. அவரது கருத்துகள் ஜீரணிக்க முடியாதவை” என்று கூறியதோடு இது குறித்து இரு வாரங்களில் விளக்கமளிக்குமாறு குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

இதில் நாம் ஆழ்ந்து நோக்கத் தக்கது யாதெனில், குஷ்புவின் கருத்துகள் வெளியான இந்தியா டுடே இதழ்ப் பகுதிகளை குஷ்புவின் வழக்கறிஞர் பிரியங்கா ஆனந்த் ஆங்கிலத்தில் படித்துக் காட்டிய பிறகுதான், “குஷ்புவின் கருத்துகள் ஜீரணிக்க முடியாதவை” என்று நீதிபதி கூறினார்.

இதற்குப் பிறகு நீதிபதிகளின் ஜீரணத்துக்கு என்ன வழிவகை செய்யப் பட்டது என்பது தெரியவில்லை.

கடந்த 23.03.2010 அன்று குஷ்புவின் வழக்கை மீள்விசாரணை செய்யும்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வெளியிட்ட கருத்து, நாம் இந்திய மண்ணில்தான் இருக்கிறோமா அன்றிக் கலாச்சாரச் சீரழிவில் சிக்கித் தவிக்கும் மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விட்டோமா என்ற ஐயத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா, நீதிபதி சவுகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குஷ்புவுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர், “நடிகை குஷ்புவின் கருத்தால், இளைய சமுதாயம் கெட்டுப்போய் விடும்; நாட்டின் பண்பாடும், கலாசாரமும் வீழ்ச்சி அடைந்து விடும்” என்று தம் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

வந்ததே கடுஞ்சினம் நீதிபதிகளுக்கு!

“திருமணத்துக்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதோ திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றம் அல்ல. அவற்றைத் தடை செய்யும் வகையில் எந்தச் சட்டமும் இல்லை. இவை சட்டத்தின் எந்த விதிப்படி குற்றம் என்று நீங்கள் சொல்லத்தயாரா?” என்று வழக்கறிஞரைக் கேள்வியால் மடக்கினர்.

மேலும், “வயது வந்த இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், அதில் என்ன தவறு? அது குற்றமா? சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல. புராணங்கள் சொல்வதன்படி, பகவான் கிருஷ்ணரும் ராதையும் கூட சேர்ந்து வாழ்ந்துள்ளனர்” என்று புராணமும் பாடினர்.

“திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்பது வாழும் உரிமை. வாழும் உரிமையையும் சுதந்திரத்தையும் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 21ஆவது பிரிவு கூறுகிறது” என்று உரிமைக்குக் குரல் கொடுத்தனர்.

“நடிகை குஷ்பு கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. அது உங்களை எப்படிப் பாதித்தது? எப்படி உங்களுக்கு கவலை ஏற்படுத்தியது? தனிப்பட்ட முறையில் தெரிவித்த அந்தக் கருத்து, எப்படிக் குற்றம் ஆகும்? எந்தச் சட்டவிதியின்படி குற்றம்?” என்று கேள்விக் கணைகளை அடுத்தடுத்துத் தொடுத்தனர்.

“குஷ்புவின் அந்தப் பேட்டிக்குப் பிறகு, எத்தனை இளம்பெண்கள் வீட்டை விட்டு ஓடினார்கள் என்று ஆதாரம் காண்பிக்க தயாரா? எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டன என்று சொல்லத் தயாரா?” என்றும் அறிவுப்பூர்வமான வினாக்களை விடுத்தனர்.

அத்தோடு விடாமல், “புகார்தாரருக்கு மகள்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டார் ஒரு நீதிபதி. அதற்கு “இல்லை” என்று பதில் வந்தது. அதைக்கேட்ட நீதிபதிகள், “பிறகு எப்படி நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்டு, சட்ட நுணுக்கத்தைப் பிட்டுப் போட்டனர்.

மேற்காணும் அத்தனை கேள்விகளும் 19.01.2010 அன்று நடந்த முதல் விசாரணையில் மூன்று நீதிபதிகளில் ஒருவருக்குக்கூட நினைவுக்கு வராமல் போய் இரண்டு மாதங்கழித்து நினைவுக்கு வந்திருப்பது பலவித ஐயங்களை ஏற்படுத்துகிறது.

தமிழகமெங்கும் பல அமைப்புகள் குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தின. காரணம், தமிழக மக்களால் அவரது கருத்துகளை ஜீரணிக்க முடியவில்லை.

தமிழக நகரங்கள் பலவற்றிலும் குஷ்புவுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. காரணம், இங்கு எவராலும் அவரது கருத்துகளை ஜீரணிக்க முடியவில்லை.

சென்னையின் உயர் நீதிமன்றம் குஷ்புவின் கோரிக்கைகளைத் தொடர்ந்து மறுதலித்தது. காரணம், உயர் நீதிமன்றத்தால் அவரது கருத்துகளை ஜீரணிக்க முடியவில்லை.

உச்ச நீதிமன்றமும் தனது முதல் விசாரணையில் குஷ்புவுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. காரணம் தெளிவானது. அன்றைய 19.01.2010 தேதிவரை உச்ச நீதிமன்றத்தால் அவரது கருத்துகள் படிக்கக் கேட்டபிறகு அவற்றை ஜீரணிக்க முடியவில்லை.

இடைப்பட்ட இருமாதங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதே கருத்துகள் ஜீரணம் ஆகிவிட்டதோடு நில்லாமல் புராணப் பசியும் ஏற்பட்டிருக்கிறது.

வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, சட்டம் பேசிக் கொண்டிருக்கும்போது கிருஷ்ணனும் ராதையும் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டு வந்து திணிக்கும் நீதிபதிகள் மதச்சார்பற்ற தங்கள் பதவிகளுக்குத் தகுதியானவர்கள்தாமா? என்பதையும் இங்குச் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

“கிருஷ்ணனும் ராதையும் வாழ்ந்த வாழ்க்கை இந்துமத தர்மப்படி முற்றிலும் தவறானது” என்பதாக பாஜகவின் வெங்கையா நாயுடு தெளிவாக்கியுள்ளார்.

எப்படியோ நீதிபதிகளுக்கு ஜீரணம் ஆகிவிட்டது. ஆனால், அவர்களது ஜீரணத்தால் நமது சட்டங்கள் தொடர்பாக நமக்குப் பலவித ஐயங்கள் ஏற்பட்டு விட்டன:

  • வாடகை விடுதிகளில் வயதுக்கு வந்த ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் ‘விரும்பி’ ‘வாழ்ந்து’ கொண்டிருக்கும்போது காவல்துறையினரின் சோதனையும் கைதும் தொடர்வது சட்டப்படி சரியா தவறா?

  • அரசியல் சட்டத்தின் 21ஆவது பிரிவின்படி அவர்களது ‘வாழும் உரிமை’யில் குறுக்கிடுவது குற்றம் ஆகாதா?

  • ஒரு பெண்ணுக்குப் பதினேழு வயதோடு 364 நாட்களும் கழிந்து, ஓர் ஆணோடு ‘வாழ்ந்து’ கொண்டிருந்தால் அதை, ‘கற்பழிப்பு’ என்று கூறலாமா?

  • அதே பெண், ஒருநாள் தாமதாக விருப்பப்பட்ட ஓர் ஆணோடு ‘வாழ்ந்தால்’ அதை ‘விபச்சாரம்’ என்று கூறுவது நியாயமா?

  • கல்வி நிறுவனங்கள், வழிபடுமிடங்கள் ஆகிய பொது இடங்களிலிருந்து 601ஆவது அடிதூரத்தில் நின்று கொண்டு ஒரு பெண் ‘வாழ’ அழைப்பது சில மாநிலங்களில் அனுமதிக்கப் பட்டுளது. அப்பெண் ஓர் அடி முன்வைத்து அழைப்பது எந்தவகையில் குற்றம்?

  • பல பெண்களுக்கு ‘வாழ’ வழிவகைகள் செய்யும் பரந்த உள்ளம் கொண்டோரை, “புரோக்கர்கள்” எனக்கூறி இழிவு படுத்துவதும் அவர்களைப் பிடித்து மூன்று மாதங்கள் முதல் பத்தாண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிப்பது சரியா?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள், கூடவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அஜீரணத்தைத் தீர்த்து வைத்த மாயமருந்து எதுவென்றும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.