இஸ்லாமும் இணையமும்!

Share this:

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான முதற்பரிசை வென்ற கட்டுரை.

– சத்தியமார்க்கம் நடுவர் குழு


இறைவனின் பெயரால்

இறையச்சமும் தொழில்நுட்பமும் கைகோர்க்கும் இணையத்தில் இஸ்லாம்!

இணைய உலகில் இஸ்லாம் 1990களின் துவக்கத்திலேயே தடம் பதிக்கத் துவங்கிவிட்டாலும், அதன் தாக்கம் சர்வதேச அளவில் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் பெருமளவில் ஈர்க்கத் துவங்கியது 90களின் இறுதியில்தான்.

இணையத்தின் மூலம் மனித சமுதாயம் பெறும் எண்ணற்ற பயன்களில் மிக முக்கியமானதாக அறியப்படும் இஸ்லாமிய அறிவு கீழ்க்காணும் மூன்று நிலைகளைக் கொண்டது:

1. முஸ்லிம்கள் : தங்களின் சுய அறிவுத் தேடல்களுக்காகவும் புதியவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யவும்

2A. பிற மதத்தினர் : தங்களின் அறிவுத்தேடல்களுக்கு விடையாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும் இஸ்லாத்தின் மீதான சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும்

2B. இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் : இஸ்லாத்தின் மீது அவதூறு பூசவும் முஸ்லிம் பெயரில் ஒளிந்து கொண்டு சமூகச் சீர்கேட்டை ஏற்படுத்தவும்

இணையத்தில் இஸ்லாத்தை அணுகுகின்றனர். மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பகுதிகளையும் ஆக்கத்தில் கொடுக்க எண்ணியிருந்தாலும் விரிவஞ்சி இதில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விஷயம் முதலாவது மட்டுமே. மற்றவை கட்டுரையில் சுருக்கமாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

முன்னுரை: சைபர்ஸ்பேஸ் (Cyberspace) எனப்படும் கண்ணுக்குப் புலப்படா இணைய உலகில் சஞ்சரிக்கும் முஸ்லிம் சமுதாயம், தங்களது இறை நம்பிக்கைகளாலும் தனித்தன்மைகளாலும் கொள்கை அளவில் கொண்ட சகோதர இணைப்பினாலும் சமூக வாழ்க்கையினாலும் நன்னெறிகளாலும் கட்டுண்டுக் கிடக்கிறது. சர்வதேச அளவில் இதை விர்ச்சுவல் சொஸைட்டி” (Virtual Society) என்று அழைக்கின்றனர். இஸ்லாத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முகத்தோடு முகம் பார்த்திராத, ஏன் குரலைக்கூட கேட்டிராதவர்கள்கூட உடன்பிறந்த சகோதரர்களை விடவும் நெருங்கிய அன்பு பாராட்டுவதாலேயே இப்பெயர் ஏற்பட்டது.

சற்று யோசித்துப் பார்த்தோமானால் மொழி, இன, நாடு, நிற பேதங்களைக் கழுவிக் களைந்து ஒரே கொள்கைஎன்ற ஒரு தாரக மந்திரத்தில் சகோதரத்துவத்தைப் போதிக்கும் இஸ்லாம்தான் இத்தகைய விர்ச்சுவல் சொஸைட்டியின் அடிப்படை என்று கூறலாம். அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் மறந்து ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒரு காரணத்தினால் இந்த இஸ்லாமிய விர்ச்சுவல் சொஸைட்டி கட்டுண்டுக் கிடக்கிறது. இணையம் பொது அறிவுக்கு மட்டும் என்று துவங்கிய காலகட்டத்திலிருந்து கல்வி அறிவை வளர்த்துக்கொள்ளவும் நூல்கள், வரலாறு, இசை, செய்தி ஊடகங்கள், ரேடியோ, டிவி ஆகிய தொழில் நுட்ப வளர்ச்சிகள் அவ்வப்போது பெரும் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வந்திருந்தாலும் அவை அனைத்தையும் மீறி இஸ்லாமிய சமூகத்தில் இணையம் ஏற்படுத்தியிருக்கும் மறுமலர்ச்சி மிக மிக இன்றியமையாதது.

வெறுமனே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஓர் ஊடகமாகத் துவங்கிய இண்டெர்நெட் என்பது இன்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் கோட்பாடுகளையும் எண்ணங்களையும் செய்கைகளையும் கடல், வான் எல்லைகளைக் கடந்து முழு உலகிற்கும் எடுத்துச்சென்று பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக உள்ளது. தவிர்க்க இயலாத தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்துத் தடைகளையும் தகர்த்து எறிந்து பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் இணையத்திற்கு முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத்தைக் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்கவியலாது.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள வேறுபட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பலர் ஒரு சிறு அறையில் குழுமி அமர்ந்து பேசும் வசதியைப் போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தித் தருவது மட்டுமின்றி எளிதிலும் வேகமாகவும் தேடும் தகவல்களைப் பெற இயலும் வசதிகளை தன்னகத்தே கொண்ட தேடுவது கிடைக்கும்!” ன்ற இவ்வரத்தை இறைவனின் அருட்கொடை என்றே சொல்லலாம். செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொறுத்தே அமையும் எனும் நபிமொழிக்கேற்ப இணையத்தின் மூலம் அவரவரின் நல்லதும் கெட்டதுமான தேவைகளுக்கேற்பப் பயனை அடைந்து கொள்கின்றனர்.

தொடரும் ஐந்து பகுதிகளில் தலைப்பின் கருவைப் பற்றி ஆராய்வோம்.

1. இஸ்லாமிய சமுதாயத்தின் அழைப்புப்பணியும் இணையக் கூட்டமைப்பும்

இபாதத் எனப்படும் வணக்க வழிபாடுகளைத் தங்கள் வாழ்க்கையோடு இழையோடச் செய்யும் பல முஸ்லிம்களுக்கு இன்றைக்கு இணையத்தில் இஸ்லாம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிப்போய் விட்டது. தினசரி தொழுகைக்கான நேரங்காட்டி, குர்ஆன், ஹதீஸ் ஆய்வுகள், இஸ்லாமிய நாட்காட்டிகள், மென்புத்தகங்கள் மற்றும் இஸ்லாமியப் புதிர் விளையாட்டுகள் ஆகிய அனைத்து மென்பொருள்களையும் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது. மார்க்கச் சம்பந்தமான தேடல்களுக்கு அறிஞர்களை நேரில் சென்று கேள்விகளைக் கொடுத்துவிட்டுப் பின்பு மாதக்கணக்கில் பதிலுக்காகக் காத்திருக்கும் சூழல் மாறியிருக்கிறது. ஷரீஆவின் சட்ட நுணுக்கங்களைக் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்து மார்க்கத் தீர்ப்பு தரும் தரமான நல்ல பல தளங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அது தவிர, குழந்தைகள் விரும்பி விளையாடும் பார்பி பொம்மைகள் இஸ்லாம் வலியுறுத்தும் ஹிஜாப் உடையணிந்து காட்சி தருவதை இருந்த இடத்திலிருந்தே விலைக்கு வாங்கி வீட்டிற்கு வரவழைக்கலாம். ஆன்லைன் டிவியில் நேரடி மார்க்கச் சொற்பொழிவு ஒளிபரப்புகளையோ அல்லது பதியப்பட்ட உரைகளையோ கண்டு அறிவை பெருக்கிக் கொள்ளலாம். சாட்டிலைட் சேனல் தொழில் நுட்பத்தையும் ஓரங்கட்டி முழு உலக சேனல்களின் ஒளிபரப்பையும் தரம் குன்றாமல் தன் கையில் ஆளுமையை எடுத்திருக்கும் இணையம், இஸ்லாமிய அறிவுத் தேடல்கள் உடையோருக்கு ஓர் அமுதசுரபியாகும்.

இஸ்லாம் உலகின் வேகமாகப் பரவி வரும் மார்க்கம் என்ற யதார்த்தத்தை மெய்ப்பிக்கும் முகமாக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் சக்தி பெற்றத் தரமான இஸ்லாமியத் தளங்கள் தினமும் பெருகி வருகின்றன. நல்லதோர் இஸ்லாமிய நிகழ்வைக் காண, குறிப்பிட்ட பிரதேசத்தின் அல்லது நாட்டின் கலாச்சார, கருத்துப்பாங்கிற்கு ஒத்துப்போக வேண்டும், அல்லது அந்த நாட்டில்தான் வசிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இப்போது இல்லை. ஓர் உதாரணத்திற்கு இஸ்லாமிஸிட்டி.காம் தளத்தினைக் கூறலாம். கிட்டத்தட்ட ஒரு கற்பனை நகரமே கண்முன் வந்து நிற்கும் இதில் இஸ்லாமியக் கல்வி மையம், வணிகம், நிதி, நூல்கள், ஆடியோ, வீடியோ, கலைப்பொருள்கள் ஆகியவற்றின் பரிமாற்றத் தளமாகவும், இஸ்லாமிய அடிப்படையிலான முழுமையானதொரு வணிகச் சந்தையாகவும் இது விளங்குகிறது.

“பிற மதத்தினருக்கு இஸ்லாம் பற்றிய அடிப்படைகளை எளிமையான வடிவில் எடுத்துச் சொல்ல ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. மேலும் இஸ்லாம் என்பது மாறுபட்ட ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அழகிய விவாதத்தை வரவேற்கக் கூடியதுமான மார்க்கம் என்பதை அழகிய முறையில் இணையத்தின் மூலம் சொல்ல முடியும்!” என்கிறார் இஸ்லாமிஸிட்டி.காம் தளத்தின் CEO முஹம்மத் அலீம். மனம் திறந்த விவாதத்திற்குத் தயங்கும் மற்ற மதங்களில் இல்லாத சிறப்பை இஸ்லாம் பெற்றிருப்பது இதன் மூலம் உலகிற்கு வெளியாகிறது. “முள்ளை முள்ளால் எடுப்பது போன்று இணையத்தில் இஸ்லாம் பற்றிய திரித்தல்களைக் களைய அதே இணையத்தை முறையாகப் பயன்படுத்தினால் வெற்றி பெறலாம் என்று அவர் உறுதியாக சொல்கிறார்.

பிரபல இஸ்லாமிய ஒளிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் (IBN) நிகழ்ச்சி இயக்குனரான ஹனாபாபா கூறும்போது, “உலகெங்கிலும் இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தை நாடும் முஸ்லிம்களும் பிற மதத்தினரும் இஸ்லாத்தின் பெயரால் தவறான தகவல்களைக் கொடுக்கும் கயவர்களின் மாயவலையில் அறியாமல் சிக்கிக்கொள்கின்றனர் என்பது தான் மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது. மேலும் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இணைய தளங்களுக்கும் இத்தகைய எதிரிகளிடம் இருந்து தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனஎன்கிறார்.

இன்றளவும் இணைய தளசர்வர்களின் கேந்திரமாக விளங்கும் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அறிக்கை, “இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு ஒரு மிக முக்கிய ஊன்றுகோலாக இணையம் செயல்பட்டு வருவதாகத்” தெரிவித்துள்ளது. குறுகிய மனப்பான்மையும் சிறு வட்டத்திற்குள் அடைபட்டச் சிந்தனைகளையும் நொறுக்கிவிட்ட இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்ள இணையம் உதவுகிறது. முஸ்லிம்கள் தங்களது மார்க்க அறிவை ஒரு பள்ளிவாசலுக்குள் அமர்ந்து ஜும்மா சொற்பொழிவு கேட்பதன் மூலமாகவோ அல்லது ஓரளவிற்கு மார்க்க அறிவுள்ள ஒரு பள்ளி இமாம் மூலமாகவோ மட்டுமே இஸ்லாத்தைத் தெரிந்து கொண்டு வந்த மனப்பாங்கு மாறியிருக்கிறது. பரவலாக விரிந்திருக்கும் இணைய உலகில் மனதில் தோன்றும் கேள்விகளை இஸ்லாமியத் தளங்களின் முன்வைத்து உடனுக்குடன் விளக்கம் பெற்றுக்கொள்ள முடிகிறது.

பயங்கரவாதமும் வன்முறையும்தான் இஸ்லாம்என்று துவேஷப்பிரச்சாரம் மேற்கொள்ளும் ஆதிக்க சக்திகள் அவற்றை உறுதிப் படுத்திக்கொள்ள இணையத்தை அணுகுவதன் மூலம் குவியல் குவியலாக இஸ்லாத்தை ஏற்பதும் இதற்கு அண்மைக்கால உதாரணங்கள்.

2. இணையம் மூலம் பலனடையும் இஸ்லாமியக் குடும்பங்கள்

போதுமான அளவிற்குப் படித்திருந்தாலும் பிற ஆடவர்களுடன் கலந்து பழகும் சூழலினால் பணியிடங்களுக்குச் செல்லத் தயங்கும் இஸ்லாமியப் பெண்களுக்கு அவரவர்கள் வீட்டிலிருந்து குடும்பத்தைக் கவனித்துக்கொண்டே இஸ்லாமியக் கல்வியறிவோடு சிறு வேலை வாய்ப்புக்களையும் வழங்குவதில் இணையம் முன்னோடியாக உள்ளது. கவனமாக இணையத்தை அணுகுவது எப்படி என்ற அடிப்படைப் பயிற்சி பெற்ற முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் உள்பட பெண்களுக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் உற்பத்தி செய்து அதனை இணையத்தில் சந்தைப் படுத்துகிறார்கள். ஆர்டர்கள் வந்து விட்டால் அது உள்நாடோ, வெளிநாடோ விநியோகம் செய்யவும் குடும்பத்துக்காகப் பொருளீட்டும் கணவரை எதிர்பாராத விதமாகப் பறிகொடுக்க நேர்ந்தால் கையறு நிலையில் பரிதவிக்கும் சில வேளைகளில் நிர்க்கதியாய் நிற்காமலிருக்க இவ்வகை இணையச் சந்தை கை கொடுக்கிறது.

நான்கு குழந்தைகளுக்குத் தாயான நூரின் க்வாயா எனும் இஸ்லாமியப் பெண் ஒரு நல்ல குடும்பத்தலைவி. அத்துடன் இஸ்லாமிய உடைகளை விற்பனை செய்யும் ஒரு தளத்தின் CEOவும் கூட. குடும்பத்தை நடத்திக்கொண்டே வீட்டிற்குள்ளாகவே நடக்கும் தனது நிறுவனத்தில் ஒற்றை ஆளாகவே பணிபுரிகிறார். “தனது வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையோர் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கப் பெண்களே என்கிறார். இதனைச் சரியான கோணத்தில் புரிந்து கொண்ட சகினா யாஹூபி என்ற பாகிஸ்தானிய பெண்மணி நலிந்த வாழ்க்கையில் பிடிப்பிழந்த அகதிகளாய் பாகிஸ்தானுக்கு வந்த ஆப்கன் நாட்டுப் பெண்களுக்கு இணையத்தில் பயிற்சி அளிக்கிறார். இஸ்லாமிய அறிவுறுத்தலின் அடிப்படையில் பொது இடங்களுக்கு வேலைக்குச் சென்று சம்பாதிக்காமல் தங்கள் இருப்பிடங்களிலேயே தங்கள் வாழ்க்கைத் தேவைக்காகக் கணினியில் வேலை வாய்ப்பையும் இப்பெண்கள் பெற்று வாழ்க்கையின் மறுமலர்ச்சி அடைய இணையம் வழிவகுக்கிறது. “முற்றிலும் படிப்பறிவற்ற ஆப்கன் அகதிப்பெண்கள் இணையத்தின் மூலமாக மட்டும் இதுவரை அக்கவுண்டண்ட், மேனேஜ்மெண்ட், எழுத்துத் துறை ஆகியவற்றில் 110 பேர் வல்லுனர்களாக மாறியுள்ளனர் என்கிறார் சகினா யாகூபி.

இஸ்லாமியப் பெண்கள் வீட்டில் இருந்தபடியே உயர்கல்வி பயிலும் வசதியைத் தரும் MuslimWomenStudies.com போன்றவை உயர்கல்வியோடு இஸ்லாமிய அடிப்படைக் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது, “இண்டெர்நெட் மதரஸாஎன்று இத்தளத்தில் பயிலும் பெண்களால் அழைக்கப்படுகிறது.

3. இணையம் மூலம் பண்படுத்தப்படும் இஸ்லாமியக் கருத்தாய்வுகள்

ஒரு காலத்தில் ஓர் இறைவசனத்தைத் தொலைவிலுள்ள பிறருக்கு அறிவிப்பதென்பது காடு மலைகளைத் தாண்டிச் செல்லும் மலைப்பான ஒரு விஷயமாகும். ஆனால் இன்று, நினைத்த மாத்திரத்தில் உரிய விளக்கத்தை உலகில் எந்த மூலையில் உள்ள எவரும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் மாபெரும் சக்தியாகவே இணையம் உள்ளது. “வெப் முஃப்தி” என்று அழைக்கப்படும் இணைய ஃபத்வா செண்டர்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன.

இஸ்லாத்தை ஏற்க முன்மொழியும் ஷஹாதா (இறைநம்பிக்கை பற்றி உறுதிமொழிதல்) போன்ற சம்பவங்களும் இணையத்தில் நடைபெறுகின்றன. நூல்வடிவிலோ, ஆடியோவீடியோ வடிவிலோ கணக்கிலடங்கா தஃவா (அழைப்பு) பிரச்சாரங்களும், பதிவிறக்கத்திற்குத் தயாராகக் காத்திருக்கும் இலவச இஸ்லாமிய மென்பொருள்களும் இணையத்தில் கிடைக்கின்றன. ஆன்லைனில் இஸ்லாமிய அடிப்படையிலான ஃபத்வாக்களை முஃப்திகள் கொடுக்கக் காத்திருந்தாலும் அவை, (தக்வாவை) இறையச்சத்தை அதிகரிக்க உதவுமா என் சந்தேகம் பரவலாக இருக்கின்றது. இருப்பினும் அவை ஐயங்களைப் போக்கிக் கொள்ள உதவுகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இணையத்திற்கு முந்தைய காலகட்டத்தில் எந்த டிப்படை வசதி வாய்ப்புகளும் இல்லாமல் நடைபெற்ற அழைப்புப் பிரச்சாரத்தில் காணப்பட்ட இறையச்சம் இன்று அழைப்பாளர்களிடத்திலேயே குறைந்து வருவது வருத்தத்துக்குரிய உண்மையாகும்.

மற்ற மதங்களில் உள்ளது போல் போப், பிஷப், அல்லது மதகுருமார்கள், சாமியார்கள் என்ற எந்த இடைத்தரகும் இல்லாமல், இஸ்லாத்தில் மனிதனுக்கும் இறைவனுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. அவ்வளவு ஏன்? ஒரு மனிதர் இஸ்லாத்தைத் தழுவ விரும்பினால் கூட அதற்கு அவர் ஒரு மதகுருவையோ, அல்லது பள்ளிவாசலையோ தேடிப்போக வேண்டியதில்லை. இரண்டு முஸ்லிம்களைச் சாட்சியாகக் கொண்டு ஷஹாதா முன்மொழிய வேண்டிய அளவிற்கு மிக எளிமையாக்கப்பட்டுள்ளது இஸ்லாம். லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற அரபிப்பதத்தையும் அவரவர் மொழிக்கேற்ப அதன் மொழியாக்கத்தையும் (தமிழில்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராவார்) உணர்ந்து மொழிந்தால் போதுமானது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இஸ்லாமிசிட்டி.காம் ஷஹாதாவை முன்மொழியும் பயிற்சியையும் அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் வழிமுறைகளையும் இணையத்தின் மூலமாகவே சொல்லித்தருகிறது. இதனைப் பின்பற்றி சர்வதேச அளவில் இஸ்லாமிய இணையதளங்கள் இப்பணியினைத் துவங்கியுள்ளன.

மக்கள் இஸ்லாத்தை அதிக அளவில் ஏற்றுக்கொள்ளும் ரகசியம் எது?” என்பது பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அமெரிக்கர்கள் ஒரு ஆய்வில் தெரிவித்திருந்த விஷயம், இஸ்லாத்தின் எளிமைப் படுத்தப்பட்ட தன்மைதான் என்பதே. எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய இணையம் அதனை இன்னும் எளிமையாக்கி விட்டிருக்கிறது. அத்துடன் தெரிவிக்கப்பட்ட இன்னொரு விஷயம் பல காலமாக சரியான கோணத்தில் பிற மதத்தினருக்கு இஸ்லாம் எடுத்துரைக்கப்படவில்லைஎன்பதுமாகும்.

ஒரு புள்ளிவிபரம் தரும் அறிக்கைப்படி ஓர் இஸ்லாமிய மையத்திற்கு நேரில் வருகை தந்து ஒரு மார்க்க அறிஞரின் சொற்பொழிவைக் கேட்கும் மக்களைவிட அந்த மையத்தின் இணையதளத்திற்கு வருகை தந்து சொற்பொழிவுகளைக் கேட்கும் மக்களின் எண்ணிக்கை பன்மடங்காகும். இதற்குக்காரணம் பரபரப்பான உலகச் சூழலில், அமர்ந்த இடத்திலிருந்தே நிகழ்ச்சியைத் துல்லியமான ஒலி/ஒளியுடன் கண்டுகளிக்கும் வசதியும் ஆன்லைன் நிகழ்ச்சி முடிந்திருந்தாலும் நினைத்த நேரத்தில் மீண்டும் அதனைக் காணும் வாய்ப்புமே. சுருக்கமாகச் சொல்வதென்றால் சமூக அக்கறை மிக்கதொரு இஸ்லாமிய அழைப்புப் பணியின் புதிய பரிணாம வளர்ச்சியே இணையம்-இண்டெர்நெட் எனலாம்.

4. இஸ்லாத்தின் பெயரால் துவேஷங்கள்:

அறிவுத்திறனுக்கு மிக ஏற்றதாகவும் அறிவியல் உண்மைகளுடன் கொஞ்சமும் மோதாத யதார்த்தமுமே இஸ்லாம் அதிக அளவில் வளர்வதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதே சமயம், உலகில் அதி வேகமாகப் பரவி வரும் இஸ்லாமே அதிக அளவில் தவறாகவும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது அல்லது புரிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையை முழுக்கத் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சர்வாதிகார நாடுகள் இணையத்தை முக்கிய ஆயுதமாக எடுத்துக் கொண்டு, இஸ்லாத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டு வரும் ஆர்வத்தைக் குறைக்க இஸ்லாத்திற்கெதிரானக் கொள்கைகளை இஸ்லாத்தின் பெயராலேயே உலவ விட்டுள்ளனர். இஸ்லாமியர்களை நேரடியாக எதிர்த்துப் பலனில்லை என்பதை உணர்ந்திருக்கும் எதிரிகள் இஸ்லாமியர்கள் பெயரிலேயே தவறான தகவல்களை மட்டுமல்லாது, சுன்னி, ஷியா, சூஃபி என்ற பாகுபாடுகளை இஸ்லாமியர்களிடையே தூண்டி விட்டுத் தூபம் போடும் துவேஷங்களையும் இணையமெங்கும் பரப்பி வருகின்றனர்.

பிரபல இணையத் தேடுபொறி இயந்திரம் தரும் புள்ளிவிபரப்படி செப். 9/11 சம்பவத்திற்குப் பிறகு இணையத்தில் அதிகமாகத் தேடப்பட்டு வரும் ஆங்கில வார்த்தை “இஸ்லாம்” என்பதாகும். சூழ்ச்சிகளை முறியடிப்பதில் இறைவனே வல்லவன் என் இறைவசனத்திற்கேற்ப இஸ்லாத்தில் உள்ளதாகத் திரித்துக் கூறப்படும் பயங்கரவாதத்தைப் பற்றிப் படித்தறியும் ஆவலில் இறைமறையை இணையத்தில் ஆய்வு செய்ய முன்வரும் மக்கள், தாங்கள் கேள்விப்பட்டதற்கு மாற்றமான உண்மைகளை அதில் கண்டு கொண்டு இஸ்லாத்தையே தழுவுகின்றனர்.

ஏறத்தாழ ஒருவர் நினைத்ததை எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எந்தச் செலவும் சிரமமும் இன்றிப் பிறருக்குச் சொல்லும் கருத்துச் சுதந்திரத்தை இணையம் வழங்குவதாலேயே இது அதிக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவுக்கும் ஆய்வுக்கும் விருந்தாகும் இஸ்லாத்தினை நோக்கிய கருத்துப் பரிமாற்றங்களும் கடுமையான விவாதங்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

5. கவலை தரும் இணையம்

இன்றைய இணையத்தைக் கூர்ந்து கவனிப்பவர்கள் கைப்பிடியற்ற கூர்மையான இருபக்கங்களைக் கொண்ட ஒரு கத்தியின் நிலைக்கு ஒப்பிடுகிறார்கள். ஒப்பற்ற அறிவு கொட்டிக் கிடந்தாலும் மனதில் பலவீனமான இறையச்சம் கொண்டவர்களை எளிதில் வசப்படுத்தி ஷைத்தானின் சூழ்ச்சிக்கு அடிமைப் படுத்திவிடும் சாதனமாகவும் இணையம் உள்ளது. இதற்கு இஸ்லாத்திற்கு விரோதமான மற்றும் ஆபாசமான தளங்கள் மட்டும்தான் காத்துக் கிடக்கின்றன என்றில்லை. இஸ்லாத்தின் பெயரிலேயே ஏகப்பட்ட போலித்தளங்கள், போலியான கருத்தாய்வுகள் சமூகத்தினுள் குழப்பத்தை ஏற்படுத்தவும் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள் என்பதுபோல் சித்தரிக்கவென்றே கூலிக்கு இரவு பகலாக உழைக்கும் குழுமங்களும் அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களிடையே நன்கு அறியப்பட்ட சத்தியமார்க்கம்.காம் பெயரிலேயே ஒரு போலி வலைத்தளம் உருவாக்க முயன்றதும் இணையத் தமிழுலகுக்கு ஒரு சமீபத்திய உதாரணமாகும். சபலத்தை முதலீடாகக் கொண்டு இணையத்தில் உலாவரும் கயவர்கள் இஸ்லாத்தின் பெயரால் இது போன்ற திசைதிருப்பல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இணையம் பற்றி முஸ்லிம் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ள விஷயம் என்னவென்றால் சைபர் கம்யூனிட்டிஎன்றழைக்கப்படும் இணையச் சமுதாயம் பெருமளவு இஸ்லாத்தைப் பற்றிய கல்வியறிவை வளர்த்தாலும் இஸ்லாம் கூறும் சமூகக் கூட்டமைப்பை அதனால் நடைமுறைக்குக் கொண்டு வரமுடியுமா? என்று கேள்வி எழுப்புகின்றனர். நேருக்கு நேர் பார்த்திராமல் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள இந்தப் பிணைப்பில் இஸ்லாம் வலியுறுத்தும் பரஸ்பரம் சந்தித்துக் கூடிக் குழுமிக் கொள்ளும் சமூகப் பிணைப்புகள், ஜமாத் என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தும் அன்பையும் பாசத்தையும் இழக்கும் குறையும் உள்ளது. ஒரே அலுவலகத்தில் இரு சகோதரர்கள் பணியாற்றினாலும் நேரில் சென்று சந்தித்து அளவளாவுவதை விட சாட்டிங் செய்து பேசுவதை விரும்புவதில் இளைய சமுதாயம் ஆட்பட்டுக் கிடப்பது இந்த ஐயத்திற்குப் பெரிதும் தூபம் போட்டிருக்கிறது.

அழைப்புப் பணிகளில் ஈடுபடுவோரில் சிலர் வியர்வை சிந்தி, களப்பணிகளில் இறங்கி, எதிர் கொண்டத் துன்பங்களை அலட்சியம் செய்து, இஸ்லாமிய அழைப்புப் பணிகளைச் செய்து வந்த ஈடுபாடு குறைந்து போய், ணினியில் அமர்ந்து அழைப்புப்பணி செய்தால் போதுமானது என்ற அளவிற்கு அழைப்புப்பணியில் உடலுழைப்புச் சுருங்கியிருக்கிறது. மற்ற சகோதரரையோ குடும்பங்கள் ரீதியிலாகவோ நேரில் சென்றுச் சந்தித்துப் பேச அனைத்து வாய்ப்புக்கள் இருந்தும்கூட கணினியில் செய்யும் அழைப்புப் பணியோடு தம் கடமை முடிந்தது என்று கையைக் கட்டிக்கொள்ளும் சகோதரத்துவம்கேள்விக்குரியது மட்டுமில்லை கேலிக்குரியதுமாகும். அடுத்த வீட்டுக்காரரின் உடல்நிலையை விசாரிக்கக்கூட மின் மடல் அனுப்பும் அளவிற்கு முன்னேறிவிட்டசகோதரத்துவம் நிச்சயம் மறுபரிசீலனைக்குரியதாகும்.

மார்க்க சட்டநுணுக்கங்களை ஆராய்ந்து குர்ஆன், ஹதீஸுக்கு எவ்விதத்திலும் மாறுபடாமல் ஃபத்வா வழங்குவதில் பிரபலமான Islamonline.net, Jannah.com மற்றும் 07-10-2007 அன்று சவூதி அரசினால் துவங்கப்பட்டுள்ள www.alifta.com போன்றவற்றினூடே பல்வேறு தளங்கள் இஸ்லாமியப் போர்வையில் நுழைந்து இயன்றவரை குழப்பங்களை விளைவிக்கின்றன. இஸ்லாத்தின் வளர்ச்சியை நேரடியாக எதிர்கொள்ள திராணியற்றுப் போகும் இந்தத் தீய சக்திகள், வேறு வழிகள் இல்லாமல் இவ்வாறு கயமைத்தனத்தில் ஈடுபடுகின்றன. ற்றிற்கான விளம்பரங்களைத் தவிர்க்க அவற்றின் தளச்சுட்டிக்களை இங்கு இணைக்கவில்லை. அவற்றை உண்மையென நம்பி விடும் முஸ்லிம்கள் அவற்றிற்கு இரையாகிறார்கள். முன்னுக்குப் பின் முரணாக முஸ்லிம்களை யோசிக்க வைத்து, தத்தம் மார்க்க அறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வைப்பதில் ஆதிக்க சக்திகள் இதன் மூலம் வெற்றியடைகின்றன.

முடிவுரை:

இணையத்தில் புழங்கும் தளங்களின் மூலம் விளையும் சாதக, பாதகங்கள் பற்றிய அறிவு இன்னும் ஒரு சாமான்ய முஸ்லிமுக்கு எளிமையாக்கப்படவில்லை. கணினித்துறையில் வல்லுனர்களாக உள்ளோரும் இணையத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தில் தேர்ச்சி அடைந்தோரும் இஸ்லாமிய அறிவைத்தேடியலையும் முஸ்லிமுக்கோ, பிற மதத்தினருக்கோ ஒரு நேர் வழிகாட்டும் கலங்கரை விளக்காக இணையம் மாறிடல் வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபடும் அனைவரும் தாம் அறிந்த இணைய அறிவுள்ள சகோதரர்களிடையே இணையம் பற்றிய முறையான அறிவையும் பயிற்சியையும் அளிக்க வேண்டியது கட்டாயமாகும். இஸ்லாத்தை நேரடியாக எதிர்கொள்ளும் திராணியினை முற்றிலுமாக இழந்து, துவேஷங்களும் காழ்ப்புணர்ச்சியும் குரோதமும் கொப்பளிக்கும் இன்றைய இணைய உலகில் இயன்றளவில் முஸ்லிம்கள் இணையத்தோடு ஓர் அங்கமாகி இணைந்துவிட வேண்டும் என்பது அவசியமானது மட்டுமல்ல, தவிர்க்க இயலாததும் கூட.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வ்வாக்கத்திற்கு ஆதாரங்களுக்காக பயன்படுத்தப்பட்ட தளங்கள்:

Muslim Women’s Leagueபடிப்பறிவற்ற, ஏழை எளிய பெண்களுக்கு, வன்கொடுமைக்கு ஆளானோருக்கு  இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் தீர்வுகளும் கூடவே வாழ்வாதாரமும் அளிக்க உதவி செய்யும் தளம்.

Women’s Learning Partnershipமுஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாமியக் கல்வியோடு, தொழில் சார்ந்த யுக்திகளையும் கற்றுத்தரும் தளம்.

MuslimWomenStudies.com இஸ்லாமிய மற்றும் சமூக அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பை அளிக்கும் தளம்.

Islamic Finder அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய மையங்கள், பள்ளிவாயில்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், அமெரிக்க நகரங்களுக்கானத் தொழுகை நேரங்கள் பற்றிய முழுத் தகவல் செய்திக்குறிப்புகள்.

Muslim Students’ Association of the United States and Canada – இணையத்தின் மூலம் கல்வி, இஸ்லாமிய பள்ளிகளுக்குத் தேவைப்படும் புத்தகங்கள் மற்றும் வளங்களை அளிக்கும் தளம்.

IslamOnline.netசர்வதேசச் செய்திகள், கருத்துப் பரிமாற்றங்கள், ஆன்லைன் பரிந்துரைகள் (கவுன்ஸிலிங்), குர் ஆன் கல்வி கற்றல் மற்றும் பல சுவையான பகுதிகள் அடங்கிய இஸ்லாமியத் தகவல் களஞ்சியம்.

IslamiCity.comதுடிப்பான இணையச் சேவையை வழங்கும் இஸ்லாமிஸிட்டி, ஓர் இஸ்லாமிய இணையச் சந்தையாகும்.

Islamic Broadcast Networkஇஸ்லாமிய நிகழ்ச்சிகளை இணையம் மூலம் சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் லாப நோக்கற்ற அமைப்பு.

Muslim Women’s League – முஸ்லிம்களின் கல்வியறிவின்மை, ஏழ்மை, வன்முறை மற்றும் குடும்பவியல் பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதற்காக ஒரு தளம்.

Islam-USA.com – இணையத்தின் மூலமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு மருத்துவர் ஷாஹித் அதார் அளிக்கும் இஸ்லாமிய அடிப்படையிலான மருத்துவக் குறிப்புகள்.

Glossary of Muslim Terms and Conceptsஇஸ்லாமிய வார்த்தைகளுக்கான அருஞ்சொற்பொருள்.

Women’s Learning Partnershipசர்வதேச லாப நோக்கற்ற அமைப்பான இது, கல்வி மற்றும் தொழில்நுட்பத்தை முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்கும் சேவையைச் செய்கிறது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆக்கம்: சகோதரர். இப்னு அமீர்

2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.