மாலையில் ஒரு விடியல்

Share this:

கொக். கொக்.. கொக்…

செய்தித்தாளைக் கண்ணுக்கும், காப்பியை வாய்க்கும் கொடுத்துக் கொண்டிருந்த என்னை அந்த கோழிச்சத்தம் கவர்ந்தது.  பக்கத்து வீட்டு வாண்டு அப்பாஸ், தன் வாப்பாவை நச்சரித்து வாங்கிய கோழி முட்டையிட்டு, அடைகாத்து உருவாக்கிய கோழிக்குடும்பம்.

அப்பாஸின் மேற்பார்வையில், அரை டஜன் குட்டி குட்டி கோழிக் குஞ்சுகளுடன். அந்தத் தாய்க்கோழி கம்பீரமாய் நடைபோட்டுக் கொண்டிருந்தது.  வெள்ளையும், பொன்னிறமுமாய் சுறுசுறுப்புடன் அந்த கோழிக்குஞ்சுகள் அழகில் மிளிர்ந்தன. ஏழாவது கோழிக்குஞ்சாக அவைகளின் பின்னே சென்று கொண்டிருந்த அப்பாஸை ரசித்துக் கொண்டிருந்த என்னை, "என்னங்க" என்ற குரல் கலைத்தது.

வேறு யார்? எல்லாம் என் உள்துறை அமைச்சகம் தான்.  "ம்ஹ்ம்!", முனங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் ஆளைக் காணோம். என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே எழுந்து உள்ளே சென்றேன். 

 

"இந்தாங்க, உங்க அம்மாகிட்ட இருந்து வந்த கடிதம். நேத்து ராத்திரி குடுக்க மறந்து போச்சு", கையில் திணித்துவிட்டு சடுதியில் சமையலறைக்குள் புகுந்தாள்.

 

கடிதம் பிரிக்கப்பட்டிருந்தது.

 

தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.

 

எத்தனை யுகங்களானாலும் இந்த மாமியார், மருமகள் புதிர் புரியாமலேதான் போய்க்கொண்டிருக்கிறது. என்ன செய்வது? கடிதத்தை பிரித்தேன். 

 

ரொம்பப் பழக்கமான கையெழுத்து. உம்மாவுக்கு மட்டுமே சொந்தமான முத்து முத்தான எழுத்துக்கள். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, மருத்துவச் செலவுகள் அதிமாகி விட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள். வாப்பா, உம்மா இருவருக்குமே சர்க்கரை நோய். வாப்பாவின் பென்ஷனில் மருந்து, இன்சுலின், இத்தியாதி… இத்தியாதி…, கஷ்டம்தான். இந்த மாதமாவது கொஞ்சம் பணமனுப்ப வேண்டுமென நினைத்துக் கொண்டே பாத்ரூமிற்குள் புகுந்தேன். அலுவலகத்திற்கு போகும் வழியிலேயே போஸ்ட் ஆபீசுக்கு போய் கண்டிப்பாக இன்றே மணியார்டர் அனுப்பிவிட வேண்டும்.  திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டேன், மறந்துவிட கூடாதில்லையா?

ஆவி பறக்க இட்லிகளைப் பரிமாறிய கையோடு, "உங்க அம்மா உங்ககிட்ட இருந்து ஏதோ பணம் எதிர் பார்க்கிற மாதிரி இருக்கு?…", மனைவி என் எண்ணவோட்டத்தை அறிந்து கொள்ள ஆழம் பார்க்கிறாள் என்பது புரிந்தது. "ஆமாம் ஆயிஷா, அவங்களுக்கு வேற யாரு இருக்கா?"  குரலில் பரிதாபத்தைத் தடவி பதிலளித்தேன், அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில். 

 

ஆனால், ஆயிஷா கொஞ்சமும் இடம் கொடுக்காமல் பேசினாள்.  "கையில இருக்கிற பணத்த வச்சு இப்பதான் ஒரு மைக்ரொவேவ் ஓவன் வாங்கலாமுன்னு கனவு கண்டுகிட்டு இருக்கேன். அவங்களுக்கு ஒரு மாசம் பணம் அனுப்பினா, ஒவ்வொரு மாதமும் எதிர்பாப்பாங்க.  நீங்க பேசாம இருங்க…" என்றாள்.

 

வேறு என்ன செய்ய? முடியாது என்றால் இந்த மாதம் முழுவதும் வீட்டில் நிம்மதி இருக்காது. தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பாள். இருக்கும் நிம்மதியைத் தொலைக்க மனமின்றி, சரியென்று தலையை ஆட்டி விட்டு, அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.

 

வெளியில் அப்பாஸ் சின்ன ஸ்டூல் போட்டு  பெரிய மேற்பார்வையாளன் போல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கோழி தன் குஞ்சுகளுக்கு உணவை எப்படி எடுப்பது என சாப்பிட இறைக்கப்பட்டிருந்த தானியங்களைக் கொத்தி கொத்தி காண்பித்துக்கொண்டு இருந்தது.

 

"அங்கிள், உங்க பைக்க தூரமா கொண்டு போய் ஸ்டார்ட் பண்ணுங்க, என் கோழியெல்லாம் பயந்துடும்" என்று சொன்ன அப்பாஸின் தலையைச் செல்லமாக கலைத்தேன். அவன் சொல்வதும் நியாயம்தானே.

 

அலுவலகத்தில் நேரம் போனதே தெரியவில்லை. ஆடிட்டிங் நேரம். மணியைப்பார்த்தபோது ஐந்தைத் தாண்டியிருந்தது.  சோம்பல் முறித்துகொண்டே எழுந்தேன்.  வழியில் மக்ரிப் தொழுது கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அலுவலகத்திலிலேயே ஒளுச் செய்து கொண்டேன்.

 

வீடு திரும்பிய போது, வீட்டு முற்றத்தில் ஒரே கும்பல். அப்பாஸ் அழுது கொண்டிருந்தான். அவனது தாய் அவனை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார். அப்பாஸின் தந்தை முகம்  சோர்வடைந்து, வாடியிருந்தது. என் மனைவி ஆயிஷா அப்பாஸின் தாய்க்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். ஒன்றும் புரியவில்லை. பைக்கை நிறுத்தி விட்டு பதற்றத்துடன் அருகில் சென்றேன்.

 

அப்பாஸுக்கு முன்னே நான்கு கோழிக்குஞ்சுகள் கடித்து குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தன. அப்பாஸின் கையில் இரண்டு கோழிக்குஞ்சுகள் அடைக்கலமாகியிருந்தன. எங்கு பார்த்தாலும் கோழி இறகுகள்… காற்றில் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. சற்று தொலைவில் தாய்க்கோழி கண்ணுக்கு தெரிந்தது. உடலில் ஒரு சிறகு கூட இல்லாமல், ரத்த வெள்ளத்தில், நிற்க கூட திராணியின்றி…!

 

அருகில் ஒரு பூனை! கழுத்திலும், வயிற்றிலும் கொத்தப்பட்டு இறந்து கிடந்தது.

 

என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை எனக்கு.

 

பார்வையைத் தாய்க்கோழியின் பக்கம் திருப்பினேன். அதிகம் போனால், இன்னும் பத்து நிமிட நேரம்தான். தாய்க்கோழியின் கதையும் முடிந்துவிடும். ஆனால் அந்த கோழியின் கண்களில் தெரிந்தது இரண்டு குஞ்சுகளை காப்பாற்றிய மகிழ்ச்சியா? அல்லது, பலத்தில் தன்னையும் மிஞ்சிய பூனையைக் கொன்ற வெற்றிக் களிப்பா? தெரியவில்லை!  ஆனால் அந்த கண்களில் இம்மியளவும் வலி இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.

 

இதயம் அழுதது. அதே சமயத்தில் மனதில் சுருக்கென்று முள் தைத்தது போல ஒரு வலி. மன வேகத்தைக் கால்களுக்குக் கடத்தி, வீட்டிற்குள் நுழைந்து மணியார்டர் ஃபாரத்தை எடுத்து பெறுநர் என்ற இடத்தில் உம்மாவின் முகவரியை வேகமாக எழுதத் தொடங்கினேன்.

 

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக! மேலும் ''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

 

என்று பக்கத்து வீட்டு ஷபானா, அவள் வாப்பா தமிழிலும் பொருள் விளங்கும் விதத்தில் குர்ஆனை ஓத வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதற்கிணங்க சத்தம் போட்டு அருள்மறையை தமிழாக்கத்துடன் படித்துக்கொண்டிருந்தாள்!!

 

ஆக்கம்: அபு ஷிஃபா.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.