மரணம் நெருங்கியபோது…

அதிகாலை நான்கு மணியாகியிருந்தது …
மரணம், ஒருவரின் படுக்கையறைக் கதவைத் தட்டியது!

யாரது? தூக்கக்கலக்கத்தில் எழுந்தவரின் குரல்
நான் தான் “மலக்குல்-மவுத்”, என்னை உள்ளே வர விடுங்கள்…

உடனே அந்த மனிதனின் உடல் நடுங்கத்துவங்கியது
கடும் ஜுரத்தால் வியர்த்தவன் போல் துடித்தது!

அவன் தூக்கத்திலிருந்த தன் மனைவியை தட்டியெழுப்பினான்
என் உயிரை எடுத்துச்செல்ல விடாதே என்று கதறியழுதான்!

தயவு செய்து திரும்பி விடுங்கள் ஓ, மரண வானவர் அவர்களே
என்னை தனியே விடுங்கள் நான் இன்னும் தயாராகவில்லை!

என் குடும்பம் இன்னும் முழுமையாக என் பொறுப்பில்
வாய்ப்பொன்று அளித்துவிடுங்கள் தயை கூர்ந்து!

உன் உயிரை இன்று பறிப்பது அல்லாஹ்வின் ஆணை
என் விருப்பம் என்று இதில் ஏதுமில்லையே அன்பரே!

பீதியுற்ற அம்மனிதன் மீண்டும் கதறியழத்துவங்கினான்
ஓ வானவரே நான் மரணிக்க மிகவும் அஞ்சுகின்றேன்!

இருக்கின்ற தங்கமனைத்தும் தாரை வார்க்கிறேன், அடிமையாகிறேன்
இழுத்துச் சென்று விடாதீர் என்னை அந்த ஒளியற்ற மயானத்திற்குள்!

என் நண்பனே –  என்னை உள்ளே வர விடு
கதவைத் திற படுக்கையை விட்டும் எழுந்துவிடு!

இனியும் நீ என்னை உள்ளே வர விடவில்லையென்றால்
கதவினுள் நுழைந்து வந்துவிடுவேன் நான் ஜின் போல்!

அம்மனிதன் தன் வலக்கரத்தில் துப்பாக்கி ஏந்தினான்

அதன் மூலம் மலக்கின் வரவைத் தடுக்க முனைந்தான்!

 

நான் உம் தலைநோக்கி துப்பாக்கி குறி வைப்பேன்
நீர் உள்ளே வரத் துணிந்தால் உம்மைச் சுட்டு வீழ்த்துவேன்!

அதற்குள் அவ்வானவர் அறைக்குள் வந்து விட்டார்
நண்பரே, உன் இறுதி நேரத்திற்கு தயாராகு என்றார்!

அறிவிலியே வானவர்கள் எப்பொழுதும் மரணிப்பதில்லை
அறிந்துகொள், துப்பாக்கியைக் கீழே போடு; மாற்று வழி உனக்கில்லை!

மரணிக்க அஞ்சுகிறாய், எனக்கு நீ காரணம் கூறு
அல்லாஹ்வின் ஏற்பாடின்றி இல்லை இது வேறு!

என்னை புன்முறுவலுடன் வரவேற்பாயாக கடுமையாக அல்ல
சந்தோஷமாகத் தயாராகு நீ அவனிடம் திரும்பிச்செல்ல!

ஓ வானவரே நான் கடும் வெட்கத்தால் தலை குனிகிறேன்
அல்லாஹ்வை நினைவு கூற மறந்தமைக்கு வருந்துகிறேன்!

அதிகாலை முதல் மாலைவரை சொத்து சேர்க்க முனைந்தேன்
ஆரோக்கியத்தைப் பற்றி கவலையின்றி அயராமல் உழைத்தேன்!

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு நான் கட்டுப்படவில்லை
ஐந்து வேளை தொழுகையையும் நான் தொழுததில்லை!

புனித ரமலான்கள் வந்தன, அவையே கடந்தும் சென்றன!
ஆனாலும் பாவமன்னிப்புப் பெற நேரமின்றியே காலங்கள் கழிந்தன!

ஹஜ் எனும் கடமையும் எனக்கு ஏற்கனவே விதியாகியிருந்தது
பணத்தை விட்டுப் பிரிய எனக்கோ மனம் வராமலே இருந்தது!

எல்லா தர்மங்களையும் நான் அலட்சியப்படுத்தி வாழ்ந்தேன்
ஆனால் வட்டியினை அதிகம் அதிகமாக வாங்கிக் குவித்தேன்!

இதை வாசித்தீர்களா? :   ஊன தினம்!

ஓ வானவரே எனது தாழ்மையான கோரிக்கை இது கேளுங்கள்
எனக்கு அவகாசம் அளியுங்கள் இன்னும் இரு வருடங்கள்!

குர்ஆனின் சட்டத்திற்க்கு நான் முழுமையாகக் கட்டுப்படுவேன்
இந்த நாள் முதலே நான் தொழுகையையும் நிறைவேற்றுவேன்!

எனது நோன்புகளையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றிடுவேன்
தான்தோன்றித்தனமாக வாழ்வதையும் அறவே தவிர்த்திடுவேன்!

வட்டியின் மாயையிலிருந்தும் நான் தவிர்ந்து கொள்வேன்
செல்வத்தை முழுவதும் நான் தர்மங்களில் செலவழிப்பேன்!

வானவர் நாங்கள் அல்லாஹ்வின் ஏவல்களை செயல்படுத்துபவர்கள்
அவன் ஏவியதை விட்டு ஒருபோதும் மாறு செய்ய இயலாதவர்கள்!

மரணம் என்பது அனைவர்க்கும் விதிக்கப் பட்ட ஒரு சட்டமாகும்
தந்தையோ, தாயோ, மகளோ, மகனோ, அனைவரும் சந்திக்க நேரிடும்!

உனது இறுதி நேரம், இதை வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது
உன்னிடம் கடந்த கால பாவ நினைவுகளே எஞ்சியுள்ளது!

உனது தற்போதைய பயம் கலந்த மனநிலையும் புரிகிறது
இனி கண்கலங்கி ஒரு பயனும் இல்லை என்பதும் தெரிகிறது!

இவ்வுலகத்தில் நீ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துள்ளாய்
ஆயினும் ஒரு போதும் நீ மக்களை மதித்துப் போற்ற தவறி விட்டாய்!

உமது பெற்றோர்களுக்கும் ஒருபோதும் நீ கட்டுப்பட்டு நடக்கவில்லை
பசித்தோரையும், ஏழைகளையும் கண்டு முகம் சுளிக்க அஞ்சவில்லை!

இஸ்லாத்தைக் கடைபிடித்து நல்ல முஸ்லிம் என முன்மாதிரியாவதை கைவிட்டாய்
இனிய உன் குழந்தைகளுக்கு சத்திய தீனை போதிக்க தவறி விட்டாய்!

தொழுகைக்கு அழைத்த முஅத்தின் பாங்கை அலட்சியப்படுத்தினாய்
இறுதி இறை வேதமாம் புனித குர்ஆனை ஓதி வாழத்தவறினாய்!

கொடுத்த வாக்குறுதிகளை காலமெல்லாம் நீ மறந்து வாழ்ந்தாய்
புறம் பேசுதலினால் நண்பர்களையும் உறவுகளையும் இழந்தாய்!

முறை தவறிய வியாபாரங்களின் மூலம் இலாபங்களைப் பெருக்கினாய்
உனது ஏழை ஊழியர்களை ஊதியமின்றி துன்பத்தில் உழலச்செய்தாய்!

குதிரைப் பந்தயம்,  சூதாட்டமும் பொழுது போக்குகள் உனக்கு

பணம் அதிகம் சம்பாதிப்பதில்தான் மெத்த சந்தோஷம் எதுக்கு?

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு உன் உடல் பெருத்து விட்டது
சக நோயாளிகளிடம் அன்பு காட்ட மனம் மறுத்து விட்டது!

உனது இரத்ததில் ஒரு துளியும் நீ தானம் செய்தது இல்லை
இது பலர் உயிர் காக்கும் என்பதில் உனக்கு கவலையும் இல்லை!

ஓ மனிதா, நீ அளவு கடந்து தவறுகளை செய்து விட்டாய்
சொற்ப விலையில் நீ பெரும் சொத்துகளை வாங்கியுள்ளாய்!

உழவர்கள் உன்னிடம் அவர்கள் கோரிக்கையை வைத்தபோது
உண்மையில் இரக்கமற்ற கோர குணம்தான் வெளிப்பட்டது!

சுவனம் உனக்கு கிடைக்குமா என்ற ஞானம் எனக்கு இல்லை
நரகத்திற்கு செல்வாயோ எனும் என் அச்சத்திலோ குறைவு இல்லை!

இதை வாசித்தீர்களா? :   துவங்கியது புனித ரமளான் மாதம்!

இனி நீ வருந்தி பாவமன்னிப்பு கோர அவகாசமேதுமில்லை
ஏவிய படி உன் உயிர் பறிப்பதைத் தவிர வேறு வழியில்லை!

அவனுடைய இறுதி முடிவு மிக மிக சோகமாக இருந்தது
கொஞ்சமாக அவன் மூளை குழம்பி, விதித்த முடிவு வந்தது!

பெரும் கூச்சலிட்டவாறு அவன் படுக்கையில் குதித்தான்
விநாடியில், உயிரற்ற உடலாக கீழே வந்து விழுந்தான்!

அன்பர்களே இதில் நம் அனைவருக்கும் படிப்பினை இருக்கிறது
“மரணம்” எவ்வளவு அருகில் என்பது யாரும் அறியாதது!

நமது வாழ்க்கையை மாற்றி உடன் சீராக்கிட வேண்டும்
சுவனம் பெறுவதும் பெறாததும் நமது செயல்களின் மூலம்!

கவிதையிது நமக்கெல்லாம் ஒரு நிச்சய பாடம்
மற்றவர்களுக்கும் கொடுப்போம் இந்த ஞானம்!

நம் இறுதி (மறுமை) காலத்திற்கு என்ன உள்ளது நம்மிடம்?
நல்ல அக்கறையுடன் இருந்திடுவோம் இனி வரும் வாழ்நாளில்!!
— இப்னு ஆதம்