சொல்லவொண்ணா சோகம் (கவிதை)

ளி மண்டலம்
வால் வளர்த்ததா – அதை
வாளெனக் கொண்டு
வாழ் வழித்ததா?

வானம் வகைமாறி
யானை யானதா – அது
தும்பிக்கைத் தொகுத்து
துவம்சம் செய்ததா?

காற்றின் மூலக்கூறுகள்
கோத்துக் கொண்டனவா -அவை
கயிறாய்த் திரிந்து
கழுத்தை நெரித்தனவா?

குளிரூட்டப் பட்ட
வாகனங்களையெல்லாம்
கொடுங்காற்றுக் கரண்டியால்
குப்புறப் போட்டதா?

களவையும் கயமையையும்
கண்டிக்கத்தான் -கடுஞ்
சுழற்காற்று வந்து
சொல்லி அடித்ததா?

வீடுகளெல்லாம் வீதியிலும்
வீதிகளெல்லாம் நாதியற்றும் -என
இக்கதி இயற்கையின் சதியா
சமிக்ஞை தருகிறது விதியா?

அழுத்தி அடைக்கப் பட்ட
காற்றை விடுத்தால்
வெளியேறும் வழியெல்லாம் குளிர்…
விடுபட்டக் காற்று
அழுந்தி அடித்தால்
உதிர்ந்து வீழும் உயிர்!

காற்றே நீ
காலக் கெடுவுக்குள்
போய் வந்தால் சுவாசம்
நின்றால் மரணம்
சுகம் தந்தால் தென்றல்
பாய்ந்தால் புயல்
போதாதென்று
இதென்ன
சுழன்றொரு வேகம்
சொல்லவொண்ணா சோகம்?

– சபீர்

இதை வாசித்தீர்களா? :   அடிமைத்தனமல்ல… அருட்கொடை!