
வயதுகளைத் தவிர்த்து
ஒற்றுமையில்லை நமக்குள்.
பள்ளிக்கூடம் உங்கள் உலகம்;
உலகம் எங்கள் பள்ளிக்கூடம்.
பெயர்த்தெடுக்கப்பட்ட
தண்டவாளத் துண்டொன்றில்
ஒலிக்கும்
பாடசாலை மணியோசை.
மொழிபெயர்த்தால்…
‘நாம் இணைகளில்லை’.
உங்கள் முதுகுகளில்
பாடப்புத்தகங்களின் சுமை.
எங்கள் முதுகுகளில்
யாருடைய வாழ்க்கையோ?!
எங்கள் ‘கறுப்பு மை’ பூசி
பொலிவடைகின்றன
எஜமானர் காலணிகள்.. .
கைத்தட்டல்கள்
உங்களுக்கு வெற்றிக்காக..
எங்களுக்கோ பெயருக்காக..
இளைய மரக்குச்சிகளில்
கந்தகமாய்த் தகிக்கும்
கல்வி ஆசை!
வாங்கிச்சேர்க்கும் வயதில்
விற்றுக்கொண்டிருக்கிறோம்
ஆசைகளை.
உயரே பறக்கின்றன
உங்கள் பலூன்கள்
உள்ளே
எங்கள் மூச்சுக்காற்று!
‘நாளைக்குச் சோறிடுவாய்’
நம்பிக்கையின் தைரியம் செழிக்கச் செய்யும்
உங்கள் படிப்பு.
“இன்றைக்குச் சோறிட வா”
இயலாமையின் கூக்குரல் துரத்த உய்யும்
எங்கள் உழைப்பு.
உங்களுக்கு மட்டும்
கிடைத்துவிட்ட உற்சாகத்தில்
‘கல்விதான் கண்’ என்கின்றீர்கள்
தவறியும்
எங்களைப் ‘பார்த்து’விடாத படி!
oOo
– இப்னு ஹம்துன்