வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு!

 

பாரத மாதாவுக்கொரு ‘ஜே’ சொல்லி
பார்ப்பனப் புத்தகம்
பகவத் கீதையை
தேசிய நூலாக்கு.

மூன்று சதவிகித
ஆரியக் கொள்கைகளை
எண்பது சதவிகித
இந்துக் கொள்கையென
புரட்டுக் கணக்குப் போடு.

தேசியக் கொடியை விட்டுவைக்காதே
பட்டை சாயலில்
மட்டும் போதாது
அசோகச் சக்கரத்தை
அகற்றி விட்டு
நடுவிலொரு
நாமத்தைப் போட்டு
நாட்டின் மதிப்பைக் கூட்டு.

தேசியப் பறவையின்
இறக்கையில்
வேல் ஒன்றைக் குத்தி
வல்லரசு இந்தியா என
வாய்ப் பந்தல் போடு.

தனிப் பெரும்பானமை திமிரோடு
தயிர்சாதத்தை
தேசிய உணவாக்கி
குருதிச் சூட்டைக்
குறைக்க வைத்து
அடிமைத்தனத்தை அதிகரி.

உள்ளத்தில் அழுக்கான
கருக்களை அழிக்காமல்
தெருக்களைச் சுத்தம் செய்ய
பொதுசனத்திடம்
கொடு ஒரு துடைப்பம்;
பாரத் ரத்னா
பட்டுக்குஞ்சத்தைக்
கட்சிக்காரனுக்குக் கட்டு.

ஏசுவின் இடத்தில்
வாஜ்பேயை வை;
கிறிஸ்துமஸ் தினத்தில்
வாஜ்பேயைக் கொண்டாடி
மதச்சார்பின்மையைப்
பறைசாற்று.

தேசத்தந்தையைப்
படுகொலை செய்தவனை
தேசபக்தனாக அறிவிப்புச் செய்.

காந்தியைக் கொன்றவனுக்குக்
கோவில் கட்ட வேண்டுமன்றோ?
மற்றுமொரு மசூதிக்குள்
கோட்ஸே சிலையை வை.

மேல்சபையிலும் கீழ்சபையிலும்
உன்னாட்களே நிரம்பி வழிய
ஓட்டெடுப்பு என்றொரு
கண்துடைப்பு செய்து
ஒப்புதல் ஒப்பேற்றி
கரசேவைகளை
தேசத் தொண்டாக
சட்டத்திருத்தம் செய்.

‘இந்து என்பதொரு மதமல்ல
இந்துத்துவா மதக்கொள்கையல்ல’
வாய்ஜாலம் செய்
‘வீடு திரும்புதல்’
என்ற பித்தலாட்டத்தில்
நாடு முழுவதும்
கூட்டம் கூட்டமாக
மதமாற்றம் செய்.

மாற்றி எடுத்த கையோடு
சாதிச்சான்றிதழ் ஒன்று
சரிகட்டி – உன்
சீழ்ப்பிடித்த
சித்தாந்தத்தைக் கொண்டு
செருப்பால் அடி.

சர்வசகல நேரமும்
ஏதாவது ஒரு ரூபத்தில்
எல்லா ஊடகங்களிலும்
விவாதங்கள் நடத்து.

மாறுபட்ட வேடங்களில்
உன்னாட்களையே நடிக்கவிட்டு
கேளிக்கைகளில் மயங்கும்
கோமாளி மக்களை
கதாகாலாட்சேபம் செய்தே
கட்டுக்குள் வை.

கங்கையைத் தூய்மையாக்க
கோடிகளை ஒதுக்கு
கணக்குவழக்கு கேட்டால்
கேடிகளால் அடக்கு.

காசு ஒதுக்கியும்
பேசி மயக்கியும்
கைப்பற்றிய பதவி…

மக்கள் சுனாமி ஒன்று
மறுமலர்ச்சி காணும்வரை
கானலை நீர் எனப் பசப்பு;
வளர்ச்சிப்பாதையில்
மேற்கொண்டு அறிவிப்புகள் செய்,
இன்னும் உண்டு
ஏராள நாட்கள்
உன் ஆட்சி அதிகாரத்தில்!

– சபீர்

இதை வாசித்தீர்களா? :   மனிதர்கள் (அந்நாஸ்)