உன்னப்பனின் விண்ணப்பம்!

Share this:

வா போவோம்
வழி நெடுகப் பேசிக்கொண்டே…

நீ பிறக்க-
நீண்ட
நெடுநாள் காத்திருந்தோம்,
நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம்,

மொத்தக் கனவுகளின்
ஒற்றைப் பலன்!

யாமும் ஏனையோரும்
நின்னைப் பார்த்திருக்க-
நீயோ…
உன்றன் முதல் விழிப்பில்- உன்
அன்னை பார்த்தாய்-பின்
என்னைப் பார்த்தாய்
புன்னகையோடு உறங்கிப்போனாய்.

பிஞ்சுப் பாதங்கள்
நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்
தொட்ட கனத்தில்…
சீரானது என்
சுவாசம்!

ஒற்றை நிழலோடு
ஊரில்
உலா வந்த எனக்கு…
குட்டி நிஜமாய்
நீ
கூட வந்தாய்!

கக்கத்திலும் காலரிலும்
கைப்பட்டியிலும்
அத்தர் மணக்க…
என் –
இடக் கை விரல் பிடித்து
நீயும்
வலக் கை தாங்கி
உன் தாத்தாவும் என –
பெருநாள் தொழுகைக்கு
பள்ளி சென்ற பொழுது
நினைவிருக்கா உனக்கு…?

நீ
கார் பொம்மை கேட்டாய்-
நானுனக்கு
கார்களின் காட்சியகம்
வைத்துத் தந்தேன்.
நீயோ…
ஒரே நாளில்
உடைத்துப் போட்டு
பணிமனை யாக்கினாய்!

நீ எழுதிய
முதல் எழுத்து
வெளவாலாய்த் தொங்கினாலும்-
அது என்
ஆத்ம உயிர்ப்பின் உயில்!

நீ உண்ட மிச்சம்
எனக்கெனவும்…
உன் உறக்கத்தின் நடுவே
என் ஓய்வு எனவும்…
உன்
மனம் மகிழ்விப்பதுவே
என் கொள்கை யெனவும்…
நீ
வளர்கிறாய் மகனே!

வளர்ந்தொருநாள்
வாலிபம் வந்து
இளைஞனாவாய்…

இளமை…
இனிய பருவத்தின்
இயற்கையான முறுக்கும்
இயல்பான எழிலும் என
இன்புற்றுத் திரிவாய்…

இருப்பதெல்லாம்
இஷ்டப் படுவாய்
இல்லாததற்கும்
இச்சை கொள்வாய்…

இஸ்லாத்தின்
இனிய வழியில்
இல்லத்தரசி பெறுவாய்…

இல்லாதோருக்கு ஈவாய்
இன்னல் எனில் உதவுவாய்
இங்கொன்றும் அங்கொன்றுமென
இருண்டவெளியும் கடப்பாய்…

இத்துணைச் சிறப்போடும்
இன்னபிற எழிலோடும் நீ
இருக்கும்
இந்நிலையில்…

முதுமை எய்தி…
முழங்கால் வலியோ
மூட்டு வலியோ
மூச்சிறைப்போ
மூத்திர அடைப்போவென
முடியாமல் போய்…

முதுகில் கூனுமாய்
முகம் சுருங்கி-
முன்னுச்சி முதல்
முடி முழுதும்
முல்லையென வெளுத்தும்-

மூலமோ
முடக்கு வாதமோ தாக்கி…
முற்றத்திலோ
மூலையிலோ நான்
முடங்கிப்போனால்…

முச்சந்தியில் விடாமல்
மூன்று வேளையல்ல
முடிந்தால்
முழுப் பசிக்குமாக
மூன்று கவளம் உணவு போதும்
முடிவாக -கண்
மூடி -மண்
மூடும்வரை தரவேண்டும் என் மகனே!

 

– சபீர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.