
மறைவானில் உன்னிருக்கை
… மாநிலமும் சிறுதுணுக்கே
இறைவா! உன் பார்வையிலே
… இவ்வுலகும் ஒரு துளியே!
குறையேதும் இல்லானே!
… கொற்றவனே உனைவணங்கி
முறையான நற்பாடல்
… முகிழ்க்கின்ற வேளையிதே!
சிறைபட்ட சாத்தானும்
… செயலற்று நின்றுவிட
மறையீந்த மாதத்தில்
… மாந்தரினம் மனந்திருந்த
பிறையாக ரமளானை
… பரிசளித்த பேரிறையே!
நிறைவான நல்வாழ்வை
… நித்தமும் தருவாயே!
கறைபட்ட மனமெல்லாம்
… கழுவுதற்கும் அறியாமல்
குறைபட்ட மனிதருளம்
… குறுகிப்போய் நிற்கையிலே
பிறைபூத்த ரமளானும்
… புனிதத்தின் அடிவானில்
நிறைவான மதியாகும்
… நம்பிக்கை பூரணமே!
கறைநீக்கும் கண்ணீரும்
… கடிமனத்தில் ஊற்றெடுக்க
இறைவா!உன் கருணையிலே
… ஒழிக்கின்றோம் பாவத்தை!
மறையோதி உணர்கையிலே
… மனமெல்லாம் பேருவகை
நிறைவான நற்பயிற்சி
… நல்குவது ரமளானே!
– கவிஞர் இப்னு ஹம்துன்