
முழு உந்து விசையோடு
முடுக்கிவிட்ட எந்திரம்போல்
மூச்சிரைக்க விரைந்தோடி
முந்துவன மீதாணை !
சிக்கிமுக்கிக் கற்களவைச்
சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல்
குளம்பில் பொறிபறக்க
குதித் தோடுவன மீதாணை !
ஒளிக்கதிரின் வேகம்போல்
விடிகாலை போதினிலே
எதிரிகளை வீழ்த்தவென
எம்பிப் பாய்வன மீதாணை !
புகைகிறதோ பூமி யென
பிரமித்துப் போகுமாறு
புழுதிப்படலம் எழுப்பி
பாய்ந்து செல்பவை மீதாணை !
எதிரிப் படைக்கிடையே
எகிரிப் பாய்ந்து சென்று
கூட்டமாய் உள்நுழைந்து
கலங்கடிப்பவை மீதாணை!
நிலையற்ற வாழ்விதனை
நிரந்தர மென்றெண்ணி – மனிதன்
நிச்சயமாக நாயனுக்கு
நன்றி கெட்டவனாகின்றான்
நன்றி கெட்டச் செயல்களுக்கு
நல்லதொரு சாட்சியாக
தனக்கே எதிராகத்
தன்னையே காண்கிறான்
ஆண்டவன் அளிக்குமந்த
அருள் வேண்டாமென்று -அற்பப்
பொருட்களை யன்றோ
பெரிதும் நேசிக்கிறான்
அறிவுக்கு ஏனோ
அவனுக்கு எட்டவில்லை…
புதைக்கப்பட்ட குழியிலிருந்து
எழுப்பப்படும் நாளில் – மனிதன்
மனத்தில் மறைத்த யாவும்
வெளிக்கொணரப்படும் என்று !
எல்லாரும் அந்நாளில்
எழுப்பப்படும் வேளை
படைப்புகளின் கணக்கை
வடிப்பதில் இறைவன் நிபுணன் !
oOo
(மூலம்:அல் குர்ஆன்/சூரா:100/அல் ஆதியாத்)
-Sabeer Ahmed abuShahruk