
அடுத்த உதயம் வரை
அடர்ந்துவிட்ட இருளைப் பொறு,
விருட்சம் விளையும் வரை
விழுந்த விதையைப் பொறு!
பூக்கும் காலம் வரை
பூமொட்டுகள் பொறு,
பூப்பூத்த காலங்களில்
பிள்ளைகளின் பிழைகள் பொறு!
கைகளில் கனியும் வரை
கிளையில் காயைப் பொறு,
கண்ணுக்குள் உனைக் காத்த
வயோதிகத் தாயைப் பொறு!
மரணத்தின் அண்மை வரை
மூத்தவர் முனகல் பொறு,
இறுதிநாள் தட்டும் வரை
இதயத்தின் இச்சை பொறு!
திறக்காத கதவில்லை
திறக்கும் வரை திசைகள் பொறு,
திறக்க நீயும் முயன்றுவிட்டால்
திக்குகள் துலங்கும் பொறு!
பச்சைக்கு மாறும் வரை
‘சிக்னலில்’ சிகப்பைப் பொறு,
உனக்கான நேரம் வரை
உலகிலே காலம் பொறு!
கொள்கையில் நிலைக்கும் வரை
கொடிய உன் கோபம் பொறு,
தொட்டது துலங்கும் வரை
சுட்டுவர் சொற்கள் பொறு!
உண்மைகள் ஜெயிக்கும் வரை
உருப்படாப் பொய்யைப் பொறு,
நண்மைகள் நிலைக்கும் வரை
தீமையின் தீங்கைப் பொறு!
உழைக்கும் உடல் இருக்கும் வரை
தோளில் உன் சுமையைப் பொறு,
பிழைக்க வழி கிடைக்கும் வரை
படைத்தவனின் சோதனை பொறு!
நினைத்ததை முடிக்கும் வரை
நகைப்பவர் நக்கல் பொறு,
காரியம் கைகூடி
கயமையும் அழியும் பொறு!
பொறு!
புயலின் பொறுமையே
பூந்தென்றல்,
பூகம்பத்தின் பொறுமையே
புவியின் மெல்லதிர்வு ,
தீயின் பொறுமையே
தீபம்,
மனிதா உன்
மனத்தின் பொறுமையே
மனிதம்!
– சபீர்