மகா கஞ்சன் (கவிதை)

அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை!
அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை!

பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை!
பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை!

பாலில் தண்ணீரை கலக்காமல் விற்றதில்லை!
பசியென்று வந்தோர்க்கு பச்சைத் தண்ணீர் தந்ததில்லை!

பணம் கொடுத்து வைத்தியம் எப்போதும் பார்த்ததில்லை!
பணப்பெட்டி, நகை நட்டை திறந்தென்றும் கண்டதில்லை!

சலவைக்குத் துணிகளை ஒருபோதும் போட்டதில்லை!
சாந்தமுடன் அறுசுவையை உண்டதாக நினைவேயில்லை!

வேலைக்குப் பணியாளை இன்றுவரை வைத்ததில்லை!
வறியவன் பிச்சை கேட்டால் கதவையே திறப்பதில்லை!

இரவல் என்பதை இதுவரை எவருக்கும் கொடுத்ததில்லை!
இரவிலும் மின்விளக்கை ஒருபோதும் போட்டதில்லை!!

ரூபாய் நோட்டுகளை மாற்றுவது பழக்கமில்லை!
ரோசமுடன் இறையில்லம் ஒருபோதும் சென்றதில்லை!

வீசி நடந்தால் வீசம் குறையுமென்று – கை
வீசி நடந்ததில்லை – கணையாழியையும் போட்டதில்லை!

கஞ்சன் என்ற பெயருக்கு அஞ்சியே நடந்ததில்லை!
மிஞ்சிய ஒருபிடி உணவை ஈ,காக்கைக்கும் தந்ததில்லை!

அவசரத்திற்கு கைகொடுக்க மனமும் வந்ததில்லை!
எவருக்கும் உபயோகமில்லா இவ்வாழ்க்கைக்கும் அர்த்தமில்லை!

ஆக்கம்: அபு யாசின்

இதை வாசித்தீர்களா? :   அரஃபாத் 1987