
தொழுகை என்பது கடமை; அதனைத் தவறாமல் பேணிடுவோம்
நம் ஈருலகத் தேவைகளை அதன் மூலமே கோரிடுவோம்;
தினந்தோறும் ஐவேளை தொழுதிடுவோம்
ஐம்பது தொழுகையின் நன்மையும் பெற்றிடுவோம்.
தொழுகையின் மகத்துவத்தை உணர்ந்திடுவோம்
கடும் “ஸகர்” எனும் நரகினிலிருந்து தப்பிடுவோம்;
தொழுகையின் மகத்துவத்தை உணர்த்திடுவோம்
நம் குடும்பத்தையும் நரகிலிருந்து காத்திடுவோம்.
நிலையற்ற இவ்வுலகில் நீதமாக வாழ்ந்திடுவோம்
நிலையான மறுமையின் தேவைகளை சேர்த்திடுவோம்;
நிதம் தொழுது புத்துணர்வும் பெற்றிடுவோம்
தூய நபிகளார் காட்டிய நல் வழியினிலே வாழ்ந்திடுவோம்.
நற்பணிகளில் நேரத்தை நாம் கழித்திடுவோம்
நற்பலன்களை குறைவின்றி கூட்டிடுவோம்;
சீரானோர் வழியில் வாழ வழி வகுத்திடுவோம்
புவியில் நல்லடியார்களையும் நாம் பெருக்கிடுவோம்.
இறை உதவியால் அனைத்தையும் சாதித்திடுவோம்
நம் தொழுகை மூலம் நிதம் இதற்கு இறைஞ்சிடுவோம்;
தொழுகையை தவறாமல் நாம் கடைபிடிப்போம்
என்றும் உண்மை முஸ்லிமாக வாழ்ந்திடுவோம்.
தொழுகை நமக்கு இறைவன் விதித்த கடமையாம்
அதனை மறந்து மறுத்து வாழ்வதொன்றே மடமையாம்;
இவ்வுலகின் பல வழிகள் இருள் மிகுந்ததாம்
தொழுகை எனும் இவ்வழி இறை அருள் நிறைந்ததாம்.
பெயரளவில் முஸ்லிமாக வாழ்வதை தவிர்த்திடுவோம்
தொழுது உண்மை முஸ்லிமாகவே நாமும் மரித்திடுவோம்;
கருத்து வேறுபாடுகளை முறையாகக் களைந்திடுவோம்
அண்ணல் நபி(ஸல்) காட்டிச் சென்ற நல்வழியில் இணைந்திடுவோம்.
தொழுகை மூலம் “இறைவனை” நாம் நெருங்கிடுவோம்
தொழுத முஸ்லிமாக “சுவன” வாழ்வை நாடிடுவோம்;
தொழுகையின்றி “வெற்றி” இல்லை சற்று சிந்திப்போம்
தொழுத முஸ்லிமாக “மறுமையில்” அவனை சந்திப்போம்.
ஆக்கம்: இப்னு ஹனீஃப்