சரித்திரம் சரிகிறதே! (கவிதை)

காந்தி பிறந்தமண்

இரத்தக்கறை படியக் கிடக்கிறதே!

சாந்தி தவழ்ந்த மண்ணின்

சரித்திரம் சரிகிறதே!

 

தியாகத் தலைமுறையை

தீப்பந்தம் மறைக்கிறதே!

அபாயம் நீங்கி – நல்ல

அமைதியை மனம் நாடிடுதே!

 

கடவுளின் பெயராலே

கலகங்கள் நடக்கிறதே!

மதவெறி தலைதூக்கி

மனிதநேயத்தை அழிக்கிறதே!
 

விஞ்ஞான இரகசியங்கள்

விலைபேசப் படுகிறதே!

மெய்ஞான மடங்களிலே – தேசம்

மண்டியிட்டுக் கிடக்கிறதே!

 

அரசியல் கழிசடைகளால் – நாடு

அசிங்கமாகிப் போனதே!

சரித்திரச் சின்னங்கள்

சரிக்கப்பட்டு கொண்டிருக்கிறதே!
 

விருப்பு வீழ்கிறதே!

வெறுப்பு வளர்கிறதே!

அகிம்சை தளர்கிறதே!

இம்சை துளிர்க்கிறதே!

 

ஆக்கம்: இனியவன் ஹாஜி முஹம்மது

இதை வாசித்தீர்களா? :   பாதுகாப்பு (கவிதை)