
படுப்பதுவோ…
போர்த்துவதுவோ…
கண்ணடைப்பதுவோ
அல்ல உறக்கம்,
நடந்ததுவும்…
நடப்பதுவும்…
நடக்க இருப்பதுவும்- என
நர்த்தனமாடும் மனச்
சலனங்கள் ஓய்வதே…
உறக்கம்!
திறந்த கண்களும்…
பரந்த பார்வையும்…
உரத்த நோக்கும்
அல்ல விழிப்பு,
பிறர் வலி உணர்தலும்…
உணர்ந்து நீக்கலும்…
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!
காண்பதும்…
கேட்பதும்…
நுகர்தலும்…
மூச்சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை
நினைப்பதும்…
செய்வதும்…
செய்ததை உலகம்
நினைத்திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை!
உயிர் கழிதலும்…
உணர்வழிதலும்…
மெய் வீழ்தலும்…
அல்ல மரணம்,
உயிர்களுக்கு உதவாமல்…
இல்லாமலிருத்தல்போல்…
இருப்பதே…
மரணம்!
தெரியாதவை தெரிதலும்…
புரியாதவை புரிதலும்…
விளங்காதவை விளங்கலும்…
அல்ல ஞானம்,
தெரிந்ததை தெரிவித்தலும்…
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே…
ஞானம்!
மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!
-சபீர்