
ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி
அந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை
கடப்பாறைகளுக்கு இரையானது!
மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது!
வேற்றுமையில் ஒற்றுமையென்பது
வேருடன் பிடுங்கியெறியப்பட்டது!
கடப்பாறைகளின் உறுமலில்
நீதியின் கதறல் ஈனஸ்வரமானது!
பாரதத்தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த
குழந்தையின் வாய், தாயின் மாரோடு சேர்த்தறுக்கப்பட்டது!
பெரும்பான்மையினரின் குரல் என்ற போர்வையில்
சிறுபான்மையினரின் குரல்வளை நெறிக்கப்பட்டது!
காந்தி மகானை வீழ்த்தியவர்கள்
கண்ணியமான மசூதியையும் தகர்த்தனர்!
கரசேவையின் பெயரில்
நரசேவை நடந்தேறியது!
ஆட்சிக்கான அறுவடையின் முதல் விதை
அன்றுதான் விதைக்கப்பட்டது!
சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க
ஒரு செங்கல்லைக்கூட நகர்த்தாதவர்கள்
சிந்தப்பட்ட தியாகிகளின் இரத்தத்தைத் தங்கள்
சிறுநீர் கொண்டு கழுவிய நாள்!
தட்டிக் கேட்க வேண்டியவர்கள்
மதத்தின் பெயரால் கட்டிப்போடப்பட்டனர்.
ஒரு தலைமுறையாய்
அலைகிறோம் நீதி வேண்டி!
நீதி வழங்க வேண்டியவர்கள்
ஆப்பத்தைப் பங்கு வைத்த குரங்குகளாய்
பிய்த்துப் பிரித்து வழங்கினர்
நம்பிக்கையின் அடிப்படையில்!
உண்மை எப்போதுமே தூங்காது!
அதர்மம் எப்போதுமே ஓங்காது!
இந்த நினைவை எங்கள் நெஞ்சில் சுமந்து
எம் பிஞ்சுகளுக்கு தாய்ப்பாலில் சேர்த்தூட்டுகின்றோம்!
எங்களின் இந்த இயலாமையை
எங்கள் பிள்ளைகள் இல்லாமல் ஆக்குவர்;
எம் சமுதாயத் துயர் போக்குவர் என்ற
அசைக்க முடியா நம்பிக்கையோடு!
– அபுல் ஹசன் R
9597739200