
தீப்பிழம்பின் தந்தை யெனும்
தீயவன் அபுலஹபு
‘தீனு’க்கு எதிராகச் செய்த
தீமைகள் ஏராளம்!
நல்ல வழிகாட்டிய நம்
நாயகத்தை எதிர்த்து
‘நாசமே’ என் றுரைத்த
நயவஞ்சக நோயவன்!
அநியாயச் செயல் செய்த
அயோக்கிய அரக்கனவன்
அழியட்டும் கை இரண்டும்
அவனுமே ஒழியட்டும்!
அவன் கொண்ட செல்வமோ
அவன் சேர்த்த யாதுமோ
அவனுக்கு உதவாது- தீர்வு
அழிவுதான், மாறாது!
கொழுந்து விட் டெரியும்
கொடுந் தீயில் எறிந்து
நிரந்தர நெருப்பில் அவன்
நிலைகுலைந்து வீழ்வான்!
சுமக்கும் விறகை விட
கனக்கும் பாவம் செய்த
பாவியவன் மனைவிக்கும்
பேரழிவு உறுதியே!
பொன்மனச்செம்மல் நபி
போதனைக் கெதிராகப்
புறம்பேசி பகைவளர்த்து
பாதகம் செய்துவந்தக்
கொடுமைக்குப் பலனாக அக்
கொடியவள் கொலையாவாள்
கழுத்தில் சுருக்கிட்ட – ஈச்ச
முறுக்குக் கயிற்றினால் !
(மூலம்: சூரா அல் மஸத்/அத்தியாயம் 111 / அல் குர்ஆன்)
– சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்