
இன்னும் விடிந்திராத
இருள்சூழ்ந்த நேரமல்ல;
இனிதாய் உதித்துவிட்ட
இளங்காலைப் பொழுதுமல்ல;
உலகே விழித்துக்கொள்ள
உருவான வேளையல்ல;
உச்சியில் செங்கதிரின்
உஷ்ணமான காலமல்ல;
கதிரவன் மங்கிச்சாயு மந்தக்
காலத்தின் மீ தாணை…
மனிதன் என்றென்றும்
இழப்பில்தான் இருக்கின்றான் !
மறை வானவற்றையும்
மறை ஆணையிட்டவையும்
இறை தந்த மார்க்கத்தையும்
நிறை மனதாய் ஏற்று…
சோதனைகளைச் சகித்து
வேதனைகளைப் பொறுத்து
நல்லறங்கள் செய்து
அல்லாதவற்றைத் தவிர்த்து…
சத்தியத்தை நேர்மையாகவும்
பொறுமையைக் கனிவாகவும்
தமக்கிடையே உபதேசிக்கும்
நல்லோர்களைத் தவிர !
oOo
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
(மூலம்: அல் குர் ஆன் /சூரா 103:அல்-அஸ்ரு)