101 – நிலைகுலைக்கும் நிகழ்வு!

நிலநடுக்கத்தை விஞ்சிடும்
குலைநடுங்கும் அதிர்ச்சி;
அழிகிறதோ உலகம் என
விழிபிதுங்கும் நிகழ்வு – அது!

சீரழிவை மீறிவிடும்
பேரழிவுப் பிரளயம்;
சொல்லவொண்ணா சோகமான
சோதனை என்பதெது?

என்ன அந்த அதிர்ச்சி?
எத்தகைய நிகழ்ச்சி?
எடுத்துமக்கு இங்கு
இயம்பியதும் – எது?

விளக்கைச் சுற்றிச்சுற்றி
வெளிச்சப் பாலருந்தும்
விட்டில்களாய் மனிதர்கள்
வீழ்ந்திடுவர் அந்நாளில்

கடும் கற்கள் அடர்த்தியுற்று
பெருத்துவந்த கனமலைகள்
வெறும் பஞ்சுப் பொதிகளென
பறந்துவிடும் அந்நாளில்

நற்செயல்களை நாடியும்
நல்லறங்களைத் தேடியும்
நன்மைகளின் எடை கனத்த
இம்மையின் நல் இனத்தோர்…

நிம்மதியும் நிறைமனதும்
மங்காத இன்பமுடன்
மகிழ்வுடனே வாழ்ந்திடுவர்
மேன்மைமிகு இறையருளால்!

பாவங்கங்கள் செய்துகொண்டு
பலவாறு தீங்கிழைத்து
நன்மைகளின் எடை குறைந்த
இம்மையில் இழிவானோர்

தங்குமிடம் கொடியதாகும்
எத்தகையக் கொடியதென்று
இயம்பியது எது உமக்கு?
அழித்தொழிக்கும் தீயாகும் – அது!

oOo

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

(மூலம்: அல் குர்ஆன் / சூரா 101: அல் காரிஆ)

இதை வாசித்தீர்களா? :   அற்பம்