91. கதிரவன் மீதாணை !

க்கினி மிகைத் தொழுகும்
ஆதவன் மீதாணை – அதன்
அண்டம் துலங்க வைக்கும்
ஆற்றலின் மீதாணை !

கதிரவனைத் தொடர்கின்ற
கவின்நிலவின் மீதாணை – அது
உள்வாங்கி உமிழ்கின்ற
வெள்ளொளியின் மீதாணை !

பகலவன் வெயில் பரப்பப்
புலர்ந்த பகல் மீதாணை – அவ்
வெளிச்சம் வீழ்த்துகின்ற
வெற்றிரவின் மீதாணை !

வெள்ளி விழி சிமிட்டும்
விண்ணின் மீதாணை -அந்த
முகில் நீந்தும் முற்றமென்ற
முன்வானின் மீதாணை !

பந்தென உருண்டுச் சுழலும்
பூமியின் மீதாணை – அதை
பார்வைக்குத் தட்டை ஆக்கிப்
படைத்தவன் மீதாணை!

அனைத்திலும் அற்புதப் படைப்பாம்
ஆத்மாவின் மீதாணை – அதன்
ஆயுளை செம்மை ஆக்கி
ஆள்பவன் மீதாணை !

அப்பால்…ஆத்மாவுக்கு
அவ்வாறே அறியத் தந்தான்
அன்புசார் நல்லதையும்
அழிவு தரும் தீயதையும்

படைத்தவன் பரிசளித்த
பகுத்தறியும் ஆத்மாவை
பரிசுத்தமாக்கி வாழ்ந்தோர்
பெறுவதே வெற்றியாகும்

அழுக்கு எண்ணத்தால் அதை
இழுக்குறச் செய்தோர்தாம்
வழுக்கி விழுந்ததுபோல்
வாழ்க்கையில் தோற்றாரே!

அநியாய அக்கிரமங்களால்
அத்துமீறி நடந்துகொண்ட
ஸமூது கூட்டத்தினரோ
ஸாலிஹ் நபியை மறுதலித்தார்

கூச்சலும் குழப்பங்களுமாய்க்
குதூகலித்த கூட்டத்திலிருந்து
கேடுகெட்ட பிறவியொருவன்
குதித்து முன் வந்தபோது…

அல்லாஹ்வின் தூதர் தடுத்தார்:
‘இந்தப் பெண் ஒட்டகம்
இதைப் படைத்தவனுக்குரியது
தாகம் தணிய – இது
தண்ணீர் அருந்த விடுவீர்’ என்று!

ஏறவில்லை தூதரின் சொல் – அவர்
எச்சரிக்கை புறக்கணித்து
ஒட்டகக் கால் நரம்பை
வெட்டி வீழ்த்திவிட்டனர்!

இத்தகு பாவம் செய்த
இழிகுண கூட்டத்தோரை
இறைவன் இறக்கி அழித்தான்
ஈடற்ற வேதனை கொண்டு!

இவ்வாறும் இதற்குமேலும்
இலகுவாய் இனம் அழிக்க
அட்டி என்பதில்லையே
ஆள்கின்ற எம்மிறைக்கு!

oOo

91. சூரியன் !
(மூலம்: அல் குர்ஆன்/சூரா: அஷ்ஷம்ஸ்)

-சபீர்

 

இதை வாசித்தீர்களா? :   தியாகத் திருநாள் வாழ்த்துகள்!