கூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்

ஓர் எளிய பெண் இன்று
பிணமாகி எரிந்தாள்!

அதிகார வர்க்கத்தின்
கூட்டுப் பாலியல்
வன்புணர்வு காரணம்.

முதலில் அவளைச் சாய்த்தார்கள்
பிறகு பரவினார்கள்.

வன்புணர்வுக்குப் பின்
இத்தனைக் காலமும்
ஒவ்வொரு உறுப்பாக
ஒடித்து ஒடித்து
ஒன்றுமில்லாமல் செய்து
மிச்சத்தையும் இன்று
நீதியின் பெயரால்
தீவைத்து எரித்துவிட்டார்கள்.

அபலைப் பெண்ணுக்காக
அழவும் யாருக்கும் வக்கில்லை.
அவளை எரித்த இடத்தில்
அயோக்கியர்கள்
தங்கள் கடவுளுக்கான
ஆலயத்தை அமைத்து
வழிபடக் கூடும்.

பிறகென்ன…
புனிதம் போர்த்திவிட
பருத்து வீங்கக் கூடும் உண்டியல்கள்.

எல்லாவற்றையும்
கணக்கிலெடுத்துக்
காத்துக் கொண்டிருக்கிறது காலம்!

கவிதை: இப்னு ஹம்துன்

இதை வாசித்தீர்களா? :   இஹ்ராம் என்றோர் இலக்கணம்