
‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’
வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
காட்சியிலே படுவதெல்லாம் கடவுள் என்பார்
கடவுளவன் இலக்கணத்தைக் காண மாட்டார்
மாட்சியுள்ள ஓரிறையோன் மார்க்கம் தந்தான்
மண்ணுலகில் நன்னெறியின் வேதம் ஈந்தான்.
மீட்சியுறும் மனிதர்தம் மனதின் நன்றி
மேதினியில் சமத்துவத்தை மலரச் செய்யும்
சாட்சியினைச் சொல்கின்ற மூமீன் கூட்டம்
சீருடையாய்த் தூய்மையினை அணிந்து சுற்றும்.
இபுராஹீம் என்கின்ற தூதர் இங்கே
எழுப்பிவைத்த ஆலயத்தில் இனிய ஹஜ்ஜு
நபிமார்கள் பல்லோரும் அவரின் வம்சம்
நன்மார்க்கப் ஒளியளித்த ஞானத் தீபம்
சபையோர்கள் சிந்திக்கக் கேள்வி கேட்டார்
சாகாமல் நிலைப்பதுவே இறைமை என்றார்
அபயங்கள் இறையிடமே! – ஆழ்ந்து சொன்னார்
அதனாலே நம்ரூத்-தின் நெருப்பை வென்றார்.
சிறப்பான வெற்றிகளைக் காண வேண்டின்
சிந்தையிலே நேர்மையினைப் பற்ற வேண்டும்
குறுக்கீடாய் சாத்தானும் கூட வந்தால்
கொள்கையதன் உறுதியுடன் போக்க வேன்டும்
பிறப்பாலும் இறப்பாலும் பேத மில்லை
பின்பற்றும் வழியாலே மாற லாமோ?
அறமில்லா சுயநலத்தை அறுத்தால் போதும்
அதுதானே இறைத்தோழர் அளித்த செய்தி.
அர்ப்பணங்கள் இறைவனுக்காய் இருக்க வேண்டும்
அவனிடமே நம்பிக்கை அமைய வேண்டும்
கற்பனைகள் சத்தியத்தில் கலத்தல் கூடா
கண்டபடி வாழுதற்கா பிறந்து வந்தோம்?
பொற்பனைய வாணாளின் பொழுதை என்றும்
பயனாகக் கழிப்பதிலே பெரிய வெற்றி
நற்கருணை இறையோனும் நலமே செய்வான்
நம்பிக்கை வைப்பதுவே முதலாம் தேவை.
அனைவருக்கும் இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்!
– கவிஞர். பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)