சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ்(Samjhauta Express)

சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ்
Share this:

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் பின்னணி: “1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரினைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டு பின்பு சுமார் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தார் எக்ஸ்ப்ரஸ் ரயில் சர்வீஸ் தொடங்கப்படும்வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே ஓடிய ஒரே ரயில், நட்பு ரயில் என்று அறியப்பட்ட சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் ரயிலாகும்.”

சம்ஜவ்தா என்ற சொல் உருது மற்றும் இந்தியில் “ஒப்பந்தம்”, “இணக்கம்”, “உடன்பாடு” ஆகிய பொருட்களைத் தரும். இருநாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் விடப்பட்டதால் இதற்கு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.

22 ஜூலை 1976 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்திற்குப் பின்னர் அமிர்தசரஸ் மற்றும் லாஹூருக்கு இடையே சுமார் 42 கிலோ மீட்டர் ஓடும் வகையில் தினசரி ரயிலாக சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் துவக்கப்பட்டது. 80 களில் பஞ்சாபில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து இந்திய எல்லையான அட்டாரிக்குத் திருப்பப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் என வாரம் இரு முறையாக குறைக்கப்பட்டது.

டிசம்பர் 13, 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 1, 2002 ல் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் சர்வீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் 15 ஜனவரி 2004 மீண்டும் துவங்கப்பட்ட சர்வீஸ் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட தருணத்திலும் பாதுகாப்பு காரணங்களால் 27 டிசம்பர் 2007 ல் மற்றொரு முறை நிறுத்திவைக்கப்பட்டது.

சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ்(Samjhauta Express) புகைப்படம்: irctconline.in

19 பிப்ரவரி 2007 ஆம் தேதி பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி, இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைக்காக இந்தியா வர இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் 18 பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் பயங்கர சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறின. இரு பெட்டிகளிலும் முழுவதுமாக பயணிகள் இருந்த நிலையில், இப்பயங்கரவாதத் தாக்குதலில் 68 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்; ஒரு சில பயணிகள் இந்தியரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் அதில் உட்படுவர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்றனர். புது டெல்லியிலிருந்து வடக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் பானிபட்டிலுள்ள திவானா ரயில்வே நிலையத்தைக் கடக்கும் வேளையில் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

குண்டுவெடிப்பு நடந்த நாளிலேயே பெரும்பாலான ஊடகங்கள், குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு(சிமி) லஷ்கரே தொய்பாவுடன் இணைந்து செயல்பட்டதாக செய்திகள் வெளியிட்டன. தொடர்ந்து பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 2011 வரை பெரிய முன்னேற்றங்களேதும் இருக்கவில்லை.

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் லஷ்கரே தொய்பா தலைவர்களில் ஒருவரான ஆரிஃப் கஸ்மானி என்பவரே தலைமைதாங்கி செயல்பட்டதாக அறிவித்த அமெரிக்கா, இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் இத்தகவலை அளித்து, அவருக்குப் பிரயாண தடையினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மூலம் விதித்தது. சிஐஏ-வின் முன்னாள் உளவாளியும் லஷ்கரே தொய்பாவில் பணியாற்றவனுமான டேவிட் ஹெட்லி கொடுத்த விவரத்தின் அடிப்படையில் அமெரிக்கா தெரிவித்த இத்தகவலின் அடிப்படையிலேயே இந்திய விசாரணை சென்றது குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டு முதன் முதலாக, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளே செயல்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், மும்பை தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவரான கார்கரே கண்டுபிடித்த ஆதாரங்கள் இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஈடுபட்ட இந்துத்துவ பயங்கரவாதச் சதியினையும் வெளிக்கொண்டு வந்தது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திரைமறைவு பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரதின் தலைவர் பெண் சாமியார் சுவாமிஜி ப்ரக்யா சிங் தாகூரும் குஜராத்தில் வனவாசிகளிடையே இயங்கும் வனவாசி ஆசிரமத் தலைவரான சுவாமிஜி அசிமானந்தாவும் ஆர்.எஸ்.எஸ் முக்கியப் பிரமுகர்களான சுனில் ஜோஷி, இந்திரேஷ் குமார் ஆகியோரின் உதவியுடன் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.

இதனைத் தொடர்ந்து சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உண்மையான குற்றவாளிகளையும் தேசிய புலனாய்வு ஏஜன்ஸி கண்டறிந்தது. இவ்வழக்கு கடந்து வந்த பாதை:

18 பிப்ரவரி 2007: பானிப்பட் அருகே திவானா கிராமத்திலுள்ள ரயில்வே நிலையம் அருகே இரவு 11.52 மணிக்கு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் முதலில் இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்கள், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சு வார்த்தையினை விரும்பாத பாகிஸ்தானிலுள்ள லஷ்கரே தொய்பா மற்றும் ஜெய்ஷே முஹம்மது போன்ற பயங்கரவாத இயக்கங்களே இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாகவும் அதற்கு இந்தியாவிலுள்ள முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் உதவி புரிந்ததாகவும் குற்றம்சாட்டின.

அப்போதைய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஒரு படிமேலாகச் சென்று, “அமைதியினை விரும்பாத பாகிஸ்தானே இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது!” என்றும் “இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதைப் பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென பாகிஸ்தானிடம் இந்திய அரசு எச்சரிக்கை விடுக்கவேண்டும்!” என்றும் காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை மனு அளித்தது.

தொடர்ந்து, தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் உட்பட பல முஸ்லிம் இளைஞர்கள் சரமாரியாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். எனினும் நீண்ட விசாரணை முடிவில், இக்குண்டு வெடிப்பில் ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களே சதிச்செயலில் ஈடுப்பட்டதும் இதில் எந்த ஒரு வெளிநாட்டு சக்திகளோ முஸ்லிம்களோ சம்பந்தப்படவில்லை என்பதையும் தேசிய புலனாய்வு ஏஜன்ஸி கண்டறிந்தது.

22 அக்டோபர் 2007: தீவிரவாத எதிர்ப்பு பிரிவைச் சேர்ந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் உறுப்பினர்கள் சந்தித்து, அதுவரையிலான விசாரணை நிலை குறித்து ஆலோசனை நடத்தினர்.

நவம்பர் 2008: இந்திய இராணுவ அதிகாரியும் இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரதின் உறுப்பினருமான ப்ரசாத் ஸ்ரீகாந்த் புரோகித், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் தமக்குரிய பங்கை ஒத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சூட்கேசுகள் இந்தியாவிலுள்ள இந்தோரில் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் இதுவரையிலான விசாரணை விவரங்கள் பாகிஸ்தானிடம் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் இந்திய அதிகாரிகள் அறிவித்தனர்.

1 ஜூலை 2009: லஷ்கரே தொய்பாவினைச் சேர்ந்த ஆரிஃப் கஸ்மானி சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையும் கஸ்மானிக்குப் பயணத்தடை விதித்தது.

ஜனவரி 2010: சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையினை இந்தியா சரியானமுறையில் நடத்தவில்லை எனவும் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி புரோஹித்-க்குரிய பங்கினைக் குறித்து தொடர்விசாரணையினை இந்தியா சரிவர தொடரவில்லை எனவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்தியா மீது குற்றம்சாட்டினார்.

அக்டோபர் 2010: ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை சமர்ப்பித்த 806 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையில், பிப்ரவரி 2006 ஆம் ஆண்டு ஹிந்துத்துவா வெடிகுண்டு தயாரிப்பாளர்கள் ஒன்றுகூடி நடத்திய கலந்தாலோசனையில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிவித்தது. இக்குழு, இதற்காக பலமுறை இந்தோருக்கு வந்து சென்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

30 டிசம்பர் 2010: இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் குஜராத்தைச் சேர்ந்த சுவாமி அசிமானந்தாவுக்கு இருக்கும் தொடர்பு குறித்து தெளிவான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த பொறியியலாளரான சந்தீப் டாங்கே மற்றும் எலக்ட்ரீசியனான ராம்ஜி கல்சங்க்ரா ஆகியோரே தேவையான குண்டுகளைத் தயாரித்தவர்கள் எனவும் தேசிய புலனாய்வு ஏஜன்ஸி அறிவித்தது.

8 ஜனவரி 2011: சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் உதவுடன் இந்துத்துவ பயங்கரவாதிகளே செயல்பட்டனர் என்பதை சுவாமி அசீமானந்தா, பூட்டப்பட்ட அறையினுள் நீதிபதி முன்னர் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். இந்த வாக்குமூலம் யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் தம் முழு மனதுடன் தெளிவான சுய நினைவுடன் நீதிபதி முன்னர் பதிவு செய்யப்படுவதாகும்.

சுவாமி அசீமானந்தாவின் வாக்குமூலத்தை ஊடகங்களுக்குக் கசிய விட்டதாகக்கூறி சிபிஐ-க்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பியது.

11 ஜனவரி 2011: சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் இந்துத்துவ அமைப்பினைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டுள்ளனர் என்று முதன் முறையாக தேசிய புலனாய்வு ஏஜன்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், தலைமறைவாக உள்ள சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கல்சங்க்ரா என்ற ராம்ஜி என்ற விஷ்ணு பட்டேல் குறித்த தகவல் தருபவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானமும் அஷோக் என்ற அஷ்வினி சவுகான் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானமும் அளிக்கப்படும் என அறிவித்தது.

11 ஜனவரி 2011: வழக்கு விசாரணை ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளதால், விசாரணை தகவல்களைத் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது என பாகிஸ்தானிடம் இந்தியா தெரிவித்தது.

மார்ச் 2011: தேசிய புலனாய்வு ஏஜன்ஸி தம்மை மன மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாலேயே அவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக சுவாமி அசீமானந்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

20 ஜூன் 2011: தேசிய புலனாய்வு ஏஜன்ஸி(NIA) ஹரியானா மாநிலம் பஞ்சுலாவிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நபா குமார் சர்கார் என்ற சுவாமி அசிமானந்த், சுனில் ஜோஷி (மர்மமான முறையில் கொல்லப்பட்டார்), லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கலாசங்க்ரா என்ற ராம்ஜி ஆகிய ஐவருக்கு எதிரான முதல் குற்றப்பத்திரிகையினைத் தாக்கல் செய்தது.

13 பிப்ரவரி 2012: ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான கமால் சவுகான் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸில் குண்டுவைத்த இரண்டாவது முக்கிய குற்றவாளி என தேசிய புலனாய்வு ஏஜன்ஸி அறிவித்தது.
   
18 பிப்ரவரி 2012: கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கமால் சவுகான், 11 பேரடங்கிய குழு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்ட விவரத்தையும் ரயிலில் எவ்வாறு குண்டுவைக்கப்பட்டது என்ற விவரத்தையும் வாக்குமூலமாக பதிவு செய்தான்.
   
9 ஆகஸ்ட் 2012: தேசிய புலனாய்வு ஏஜன்ஸி இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான கமல் சவுகான், அமித் சவுகான் என்ற அமித் டோட்லா ஆகியோருடன் இணைந்து லோகேஷ் சர்மாவும் சமுந்தர் என்ற ராஜேந்தர் சவுத்ரியும் ரயிலில் குண்டுவைத்தவர்கள் என அதில் குற்றம்சாட்டப்பட்டது. முதலில் டெல்லி ஜும்மா மசூதியில் குண்டுவைக்க தீர்மானித்திருந்தாலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமானவையாக இருந்ததால், குண்டுகளுடன் எளிதில் செல்வதற்கு ஏற்ற வகையிலிருந்த பழைய டெல்லி ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டதாகவும் முஸ்லிம்கள் அதிகம் பயணிக்கும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவைப்புக்குத் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

15 டிசம்பர் 2012: மத்தியப் பிரதேசத்திலுள்ள நாக்டாவில் தலைமறைவாக இருந்த தஸ்ரத் என்ற இந்துத்துவவாதியைத் தேசிய புலனாய்வு ஏஜன்ஸி கைது செய்தது.

டிசம்பர் 18 2012: தான்சிங் மற்றும் ராஜேஷ் சவுதாரி ஆகிய இந்துத்துவ பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

29 டிசம்பர் 2012: இந்தியாவில், சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் உட்பட 16 குண்டுவெடிப்புகளை இந்துத்துவ பயங்கரவாதம் திட்டமிட்டு அரங்கேற்றியதாக  ராஜேஷ் சவுதாரி வாக்குமூலம் அளித்தான்.

30 டிசம்பர் 2012: மற்றொரு ஹிந்துத்துவா பயங்கரவாதி மோகன் என்பவன் கைது செய்யப்பட்டான்.

துணை நின்றவை:
  
1. http://www.thehindu.com/news/national/former-rss-activist-held-for-samjhauta-bombing/article2886511.ece

2. http://www.indianexpress.com/news/4-men-planted-4-bombs-on-samjhauta-express/913657/0

3. http://articles.timesofindia.indiatimes.com/2012-08-10/india/33136272_1_supplementary-chargesheet-kamal-chauhan-fresh-chargesheet

4. https://en.wikipedia.org/wiki/2007_Samjhauta_Express_bombings

5. http://wikileakstamil.blogspot.com/2011/01/blog-post_9153.html

6. http://archive.inneram.com/2011011112958/ajmeer-blast-done-to-threat-hindus

7. http://www.web-archive.inneram.com/news/india-news/one-more-terrorist-arrested-related-to-samjotha-express-bomb-attack-7344.html :

8. http://www.web-archive.inneram.com/news/india-news/samjotha-express-bomb-blast-terrorist-arrested-7277.html

9. http://www.web-archive.inneram.com/news/india-news/hindutuva-terrorists-behind-16-bomb-blasts-in-india-7624.html

10. http://archive.inneram.com/2010111911980/malegaon-blasts-mastermind-held

11. http://archive.inneram.com/2011012113143/swamy-aseemanand-arrested-in-ajmere-dargha-blast-case

12. http://archive.inneram.com/2011011112968/samjotha-express-blast-10-lakh-reward

13. http://archive.inneram.com/2011062017364/samjhauta-case-aseemanand-four-others-charged

14. http://archive.inneram.com/2011051616561/nia-files-supplementary-chargesheet-against-aseemanand

15. http://www.web-archive.inneram.com/news/india-news/samjavta-train-terrorists-arrest-3015.html

16. http://www.web-archive.inneram.com/news/india-news/rss-extremist-arrested-for-malegon-blast-7662.html


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.