
முந்தைய பகுதியில் ஜின்னா பிறப்பு மற்றும் அவர் குடும்பம் குறித்து பார்த்தோம்… அடுத்த கட்டம் என்ன? பள்ளிபடிப்பு! படிப்பு என்றதும், ”அவ்வளவு பெரிய அறிவாளி; பார் போற்றும் மாமேதை; பென்சில், பேனா, பென்ச், டேபிள் முதற்கொண்டு பள்ளியின் தூணும் துரும்பும் அவர் திறனாற்றலைக் கண்டு மெச்சோ மெச்சென்று மெச்சியது” என்ற வழக்கமான எதிர்பார்ப்புடன் நீங்கள் படிக்க துவங்கினால்… ஏமாந்துபோவீர்கள்!
ஜின்னாவிற்கு 6 வயதாகும் போதே தாய்மொழியான குஜராத்தி கற்றுகொடுக்க பெற்றோர்கள் விரும்பினர். அதன்படி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் வீட்டுக்கே வந்து பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிக்குச் செல்லும் பக்குவம் இல்லாத வயது அது என்பதும் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் தொலைவானதும் முக்கிய காரணம்.
குழந்தை பருவத்திலேயே மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் ஜின்னா, வீட்டிலேயே தன் நேரங்களைச் செலவழித்தார். குட்டிஜின்னாவின் அக்கம் பக்கம் இருக்கும் குட்டிநண்பர்களுக்கும் ஜின்னாவின் வீடு தான் விளையாட்டுக்கான இடம். மற்ற குழந்தைகள் ஜின்னாவை டீம் லீடராகவே பார்க்க, ஜின்னாவுக்கோ ”நான் ஸ்பெஷல்” என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது! பசுமரத்தாணியாய் மனத்தில் பதிந்துவிட்ட அந்த எண்ணம் ஜின்னாவை உண்மையில் ஸ்பெஷலாகவே வார்த்தெடுத்தது…
9ம் வயதில் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். புது உலகம்… எப்போதும் நண்பர்கள் புடை சூழ, லீடராக மற்றவர்களைவிட ஸ்பெஷலாக தம்மை நினைத்து வலம் வந்தவருக்கு, இங்கே தம்மைவிட பல மாணவர்கள் படிப்பில் கம்பீரமாக நடைபோடுவது ஆச்சரியத்தையும் பொறாமையையும் ஏற்படுத்தியது. போட்டியைச் சமாளிக்க நன்றாகப் படிக்க முயன்றாலும்…ம்ஹூம்…. முடியவில்லை.. திணறினார்!!!!
ஒருபக்கம் விளையாட்டுக்கான நேரத்தை பள்ளிக்கூடம் விழுங்கிக்கொண்டிருந்ததும், இன்னொரு பக்கம் எல்லோருக்கும் முதன்மையாக, நன்கறிந்த பிரபலமாக தம்மால் ஆக முடியாததும் பள்ளி மற்றும் புத்தகங்கள்மீது ஜின்னாவுக்கு வெறுப்பை உருவாக்கியது. அந்த வயதின் நியாயமான எரிச்சல்!! ஆனால் தீப்பற்றி எரிந்தது ஜின்னா தந்தையின் வயிற்றில்தான். தமது வியாபாரத்தைத் தம் மகனால் பின்னாளில் நிர்வகிக்க முடியாமல் போய்விடுமோ என்று கவலையுறும் சொத்துசேர்த்த தந்தைகளின் வழக்கமான கவலை! ஜின்னாவின் படிப்புகுறித்து பாடசாலையிலிருந்து எத்தனை கம்ப்ளெயிண்ட் வந்தாலும் தம் மகனின்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார் அவரின் தாய். “ஊரே மெச்சும் பிள்ளையாக வருவான் பாருங்கள்” என்ற டயலாக்கிற்குப் பஞ்சமில்லை! எத்தனை அம்மா செண்டிமென்ட் பார்த்திருப்போம்…
ஆனால் ஜின்னாவுக்கோ, பள்ளி மீது ஏற்பட்ட வெறுப்பு அவரை அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. மற்ற பிள்ளைகளைப் போலவே பள்ளிக்கூடம் போக அடம் பிடிக்க ஆரம்பித்தார். ஒருமுறை தந்தையை நோக்கி, “அப்பா, உங்க கம்பெனிக்கு நானும் வரவா?” என்று ஆரம்பிக்க, உரையாடலின் முடிவில் வேறு வழியில்லாமல் தனது கம்பெனியில் வேலை கற்றுகொடுக்க அவரை அழைத்து செல்லவேண்டியதாகிவிட்டது தந்தைக்கு. சில வாரங்கள் கடந்தன… தொழில் நிமித்தமாக கடலில் செலவழிக்கும் வாழ்க்கை ஜின்னாவுக்குக் கசக்க ஆரம்பித்தது. அதனைவிட பள்ளிக்கூட சிறையே தேவலாம் என்ற முடிவுக்கு வந்த ஜின்னா, மீண்டும் பள்ளிக்கே போவதாக தந்தையிடம் உறுதி அளித்தார்!
பள்ளியில் புது பிரவேசம்! இழந்த தன் நேரங்களையெல்லாம் மீட்டெடுக்கும் முயற்சியில் கடினமாக படிக்க ஆரம்பித்தார்! தந்தைக்கோ சந்தோஷம்.. தாய்க்கோ பூரிப்பு…! இந்தச் சந்தோஷத்துடன் நிறுத்தியிருக்கலாம். நலம் விசாரிப்பதற்காகவோ அல்லது கல்வியில் தம் மகன் நன்கு கவனம் வைப்பதை ஆசிரியரின் வாயாலேயே கேட்டு மேலும் பூரிப்படையலாம் என்பதற்காகவோ என்னமோ, வழியில் சென்றுகொண்டிருந்த ஜின்னாவின் ஆசிரியரை வலிய போய் வலியை இழுத்து போட்டுக்கொண்டார் தந்தை..
“என் மகன் எப்படி படிக்கிறான்?”
ஆஹா.. ஓஹோ என்ற பதில் வரும் என எதிர்பார்க்க, “நல்லாத்தான் படிக்கிறான். மேக்ஸ் மட்டும் படுமோசம்” என வகுப்பாசிரியர் சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்? போதாதா? தந்தைக்குத் தலையில் இடி இறங்கியது! எது முக்கியமோ அதிலேயே கோட்டை விட்டால்?
கராச்சியில் Khan Bahadur Hassanali Affendi அவர்களால் உருவாக்கப்பட்டு முஸ்லிம்களிடையே பிரபலமாக விளங்கிய சிந்த் மதரஸா உல் இஸ்லாம் பள்ளி தம் மகனுக்குக் கை கொடுக்கும் என நம்பினார். ஆகவே, 10 ஆவது வயதில் நான்காம் வகுப்பில் அப்பள்ளியில் ஜின்னா சேர்க்கப்பட்டார். பள்ளிமாற்றம் படிப்பில் எந்த மாற்றமும் ஏற்படுத்திவிடவில்லை… அதென்ன ஜீபூம்பாவா?? விதி! அதே விளையாட்டுத்தனம் நீங்காமல், அகலாமல் ஒட்டிக்கொண்டிருந்தது ஜின்னாவிடம்!
அந்த நேரத்தில்தான் மும்பைவாசியான மான்பாய் பூஃபி கராச்சிக்கு வந்திருந்தார் – ஜின்னாவின் மாமியார்!
ஜின்னாபாய் பூன்ஜா உடன் பிறந்தவர்கள் மூவர்; வால்ஜிபாய், நாதுபாய் என்ற இரு சகோதரர்கள் மற்றும் மான்பாய் என்ற ஒருசகோதரி! கலகலப்பான பெண்மணி; அதிக நினைவாற்றல் மிக்கவர்; அவராகவே கதை உருவாக்கி அதனைக் குழந்தைகளுக்குச் சொல்ல… எப்போதும் அவரைச் சுற்றி மழலைகள் பட்டாளம் மொய்த்துக்கொண்டேயிருக்கும். இத்தனைக்கும் அவர் கல்வி கற்றவர் அல்லர்… படிக்காத மேதை என்போமே.. அதுபோன்று அறிவாளி!
ஜின்னாவின் தந்தைக்குத் தம் தங்கை மீது அதிக பாசம்! இருவருக்குள்ளும் உள்ள பாசப்பிணைப்புக்குப் பாசமலரை நினைவுபடுத்திக் கொள்ளலாம்! பின்னாளில் முஹம்மத் அலி ஜின்னாவின் கடைசி தங்கையான பாத்திமாபாய், தாமும் தம் அண்ணன் ஜின்னாவுடன் பாசமான தோழியாக, தங்கையாக, அன்னையாக இருக்க இன்ஸ்பரேஷனாக இருந்தது இந்த மான்பாய் தான்!
தம் மகன் 10 வயதான நிலையில் நான்காம் வகுப்பைப் பூர்த்தி செய்யாதது குறித்தும், படிப்பில் கவனம் செலுத்தாதது குறித்தும் அதிகக் கவலையுடன் தங்கையிடம் கொட்டித் தீர்த்தார் ஜின்னாவின் தந்தை! சகோதரனின் கவலையைத் துடைக்கும் வகையில், மருமகனை பாம்பேக்கு அழைத்துச்சென்று சிறந்த கல்வியைக் கொடுப்பதாக வாக்களித்தார் மான்பாய். ஜின்னாவின் தந்தைக்குத் தலைகால் புரியா சந்தோசம்! ஆனால், தம் மகனைவிட்டுப் பிரிய மனமில்லாமல் அம்முடிவைக் கடுமையாக எதிர்த்தார் ஜின்னாவின் தாய்! தொடர் வற்புறுத்தலுக்குப் பின் அரை மனதாக ஒப்புக்கொண்டார். அதன்படி கராச்சிக்கு டாட்டா சொல்லி, மாமியுடன் கப்பலில் புறப்பட்ட ஜின்னா பாம்பேயில் காலடி எடுத்து வைத்தார்.
மான்பாய், ஜின்னாவை மும்பையில் உள்ள அஞ்சுமான்-ஈ-இஸ்லாம் எனும் பள்ளியில் சேர்த்தார். ஜின்னா கடுமையாக படித்து 4ம் வகுப்பில் தேறினார். பின் கோகுலதாஸ்தேஜ் ஆரம்ப பள்ளியில் (Gokul Das Tej Primary School)சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் தம் அன்பு மகனைக் காணாமல் தாய் மிதிபாய்க்கு உடல்நலம் குன்றியது. “மகன் வந்தே ஆகவேண்டும்” என தாய் பிடிவாதம் பிடிக்க… ஜின்னா மீண்டும் கராச்சிக்குத் திரும்பினார்.
23-12-1887 ல் சிந்த் மதரஸா உல் இஸ்லாம் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்த நேரத்தில் ஜின்னாவிற்குக் குதிரை ஏற்றத்தில் அதிக ஆர்வம் உருவானது. தந்தை வைத்திருந்த குதிரை மூலம் குதிரை ஏற்றம் கற்றுக்கொண்டார். நண்பர்களுடன் குதிரையில் வெகுதூரம் செல்வதும் இயற்கையை ரசிப்பதும் பொழுதுபோக்காக மாறியது. மீதி நேரங்களில் கவிதை விரும்பி வாசிப்பதுமாக அவர் பொழுதுகள் கழிந்தன. எனில் படிப்பு?! மேலே கூறிய பொழுதுபோக்கு விஷயங்கள் எல்லாம் ஸ்கூல் கட் அடித்து நிகழ்த்தப்பட்டவை! ஒருவாறு தட்டுத்தடுமாறி வகுப்பில் தேறினார். என்றாலும் அடிக்கடி மட்டம் போட்டதால் படிப்பு பெரும் மட்டமாகியது! இதே ரீதியில் தொடர்ந்தால் படிப்பை மீண்டும் மூட்டை கட்டவேண்டியதுதான் என்பதை உணர்ந்த ஜின்னா, தாமாகவே தம்மை வேறு பள்ளியில் சேர்க்கும்படி தந்தையிடம் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.
5-1-1891 ல் சிந்த் மதரஸாவிலிருந்து விலகி சி.எம்.எஸ் (Christian Missionary Society High School) பள்ளியில் சேர்ந்தார். அங்கே பள்ளி நிர்வாகம் சேர்க்கை வசதிக்காக ஜின்னாவின் 20/10/1875 என்ற பிறந்த தேதியை 25-12-1876 ஆக மாற்றிக்கொண்டது. பின்னாளில் தம் பிறந்தநாளை குறிப்பிடும் போதெல்லாம் “கிறிஸ்துமஸ் அன்றுதான் பிறந்தேன்” என ஜின்னாவும் சொல்லிக்கொள்வார். இன்னொரு மாற்றமும் இங்கே நிகழ்ந்தது. அவரின் முழுப்பெயரான முஹம்மத் அலி ஜின்னா பாய் என்பதிலிருந்த ’பாய்’ வெட்டபட்டது!. இந்த இரு மாற்றங்களுக்காகத்தான் போனாரோ என்னவோ, மீண்டும் பள்ளி பிடிக்கவில்லை என 9-2-1891 அன்று அப்பள்ளியிலிருந்து விலகி சுவற்றில் அடித்த ரப்பர் பந்தாக மீண்டும் சிந்த் மதர்ஸாவுக்கே திரும்பினார்!
மகனின் இத்தகைய போக்கைக் கண்டு தந்தை திகைத்தார். விரக்தியில் துடித்தார். தம் மகனின் எதிர்காலம் குறித்து கடும் கவலைகொண்டார்.
இந்நிலையில், 1892 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் தந்தையின் வியாபார வழக்கு நிமித்தம் தந்தையுடன் ஜின்னா நீதிமன்றம் சென்றார். நீதிமன்ற வளாகம், கோட் சூட் போட்ட நீதிபதிகள், கருப்பு கவுன் போட்ட வழக்கறிஞர்கள் எல்லாம் அவரை வெகுவாக ஈர்த்தன. தாம் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை முதன்முதலாக அவருக்கு அங்கே உதயமானது. அன்றைய இளைஞர்களின் கனவென்பது இங்கிலாந்து செல்வதாகவேதான் இருந்தது. வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்துவிடுமா என்ன? ஆனால் ஜின்னாவிற்குக் கிடைத்தது.
ஜின்னாவின் எதிர்காலம் குறித்து ஜின்னாபாய் பூன்ஜா தனது கம்பெனியின் பார்ட்னரும், ஜெனரல் மேனஜருமான ’சர் ஃப்ரடெரிக் லே கிராஃப்ட் (Sir Frederick Leigh Croft)’யிடம் கவலை தெரிவிக்க அவர், லண்டனில் இருக்கும் கிரஹாம் ட்ரேடிங் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பவும் தொழிற்பயிற்சி கொடுக்கவும் ஆலோசனை கூறினார். தந்தைக்கும் இது நல்ல ஆலோசனையாகப்பட்டது; சம்மதித்தார். பாசக்கார அம்மா வழக்கம் போல் அன்பு மகனைப் பிரிய மனம் இல்லாமல் துடித்தார். ஒருவழியாக அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தார். ஆனால் தாயின் ஒரு கண்டிஷன் நிறைவேற்றினால் தான் இங்கிலாந்து செல்ல முடியும்! அது என்ன?
ஜின்னா இங்கிலாந்து சென்றுவிட்டால் அங்குள்ள பெண்ணை மணந்துகொள்வார் என்ற பயம் தாய்க்குத் தொற்றிக்கொண்டது. ஆகையால் தம் உறவுக்கார பெண்ணை மணந்துகொண்டால் மட்டுமே இங்கிலாந்துக்கு அனுமதி என கறாராக சொல்லிவிட்டார். லண்டன் செல்லும் ஆசையில் தாயின் நிபந்தனை ஜின்னாவுக்குப் பெரிதாக தெரியவில்லை! கல்யாணம் தானே…பண்ணிக்கிட்டா போச்சு!
எம்மிபாய். தூரத்து உறவுப்பெண்! கத்தியவார் ஏரியா.. கோஜா பிரிவைச் சேர்ந்தவர்!! தாய் ஆசைப்படி திருமணம் இனிதே நிறைவுற்றது. 1892ல் லண்டன் பயணம்!
உலகையே திரும்பிப் பார்க்கவைத்த ஒரு அரசியல் ஆளுமை, அவர்தம் கல்விப்பருவம் கேட்போருக்குத் தலைசுற்ற வைக்கும்! இதுவரையிலான அவர்தம் கல்விப் பருவத்தைச் சுருக்கமாக இப்படி குறிப்பிடலாம்:
1879: 6 வயதில் வீட்டில் தாய்மொழி கல்வி.
1885: 9 ஆம் வயதில் சாதாரண பள்ளிக்கூடம்; அங்கிருந்து சிந்த் பாடசாலை!
1886: 10 ஆம் வயதில் மும்பை Gokul Das Tej Primary School
23-12-1887: 11 ஆம் வயதில் கராச்சிக்குத் திரும்பல்; சிந்த் பாடசாலையில் மறுபிரவேசம்!
5-1-1891 : 15 ஆவது வயதில் Christian Missionary Society High School. 2 மாதத்தில் மீண்டும் சிந்த் பாடசாலை!
1892: 16 ஆம் வயதில் திருமணம் மற்றும் லண்டன் பயணம்.
அவ்வளவுதான்! அடுத்த பகுதியில் ஜின்னாவின் லண்டன் வாழ்வைப் பார்ப்போம்!
தொடரும்..
– ஆமினா முஹம்மது.