உண்மையைத் தேடி… (மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் – MLM தொடர்ச்சி)

Share this:

ல்டி லெவல் மார்க்கெட்டிங் என கவர்ச்சிகரமான பெயரில் அறியப்படும் இந்த ஏமாற்று வேலையைப் பற்றிய விரிவான அறிமுகத்தையும் அதனைக் கண்டறியும் முறைகளையும் சென்ற பகுதியில் கண்டோம். இந்தத் தீமைக்கு அதிகம் இளைஞர்களே பலியாகின்றனர். இதற்கு ஒரு காரணம் எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆவல் என்பது ஒரு புறமிருந்தாலும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒரு காரணம் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பல வழிகளில் இன்று சமூகத்திடையே நுழைந்து விட்ட இந்த ஏமாற்று வித்தை மற்றவர்களை வஞ்சிக்கும் செயல் என்பதை நீதமான மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர். ஒரு தொழில் எனில் அதற்கு நிச்சயம் ஒரு முதலீடு இருக்கும். இங்கு முதலீடு என்பது மனிதர்களுக்கு சாதாரணமாகவே பணத்தின் மீதுள்ள பற்று மட்டுமே ஆகும்.

இதனை மட்டும் அடித்தளமாக கொண்டு ஏவப்படும் அம்பிற்கு சாதாரணமான சாமானியர்கள் வீழ்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் இத்தகைய சூழ்ச்சி வலைகளில் படித்த, பெரிய பதவிகள், அந்தஸ்துகளில் இருப்பவர்களும் விழுந்து விடுவதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். பெரிய மனிதர்களது பெயர்களையும் புகழையும் பயன்படுத்தி அதன் மூலம் சாதாரண அப்பாவி மக்களைச் சிக்க வைக்க, சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களுக்குத் தூண்டில் போடப்படுகிறது.

இத்தகைய பல ஏமாற்றுத் திட்டங்கள் மக்களின் இடையில் பலவாறு குழப்பங்களையும் பிரச்சனைகளையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்துகிறது. அதனைச் சற்று பட்டியலிட்டு காணலாம்.

சீரழியும் சமூகக் கட்டமைப்பு:

1. இவ்வுலகில் ஒருவருக்கு பணம் ஒன்றே அவசியத் தேவை என்று வைத்துக்கொண்டால் அவர் பல்வேறு அனுமதிக்கப்பட்ட நேர்வழிகளில் அதனை ஈட்ட இயலும். தம்மை நம்பி இச்சங்கிலியில் உறுப்பினராக இணைத்துக்கொண்ட தம் சகோதரர், ஒரு சமயத்தில் தன் கீழ் சேர்க்க (ஏமாற!!) ஆள் கிடைக்காமல் நிலையில்லாமல் திண்டாடுவதைக் காணச் சகிக்காமல் இது “தன்னால் தானே” என்ற உறுத்தல் நல்ல மனிதராய் இருக்கும் பட்சத்தில் இதில் உறுப்பினர் ஆகும் நபருக்கு வருவதைத் தடுக்க இயலாது.

2. எப்போது நீங்களும் ஒரு பொய்யராக மாறுவீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. ஏனெனில் இத்தகைய வியாபாரத்தின் மூலதனமே பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையிலே கட்டமைக்கப்பட்டுள்ளது. தன் கீழ் ஆள் சேர்த்தால் மட்டுமே குறைந்த பட்சம் தான் இழந்த காசாவது திரும்ப கிடைக்கும் என்ற நிலையிருப்பதால் புதிதாக என்ன வகையிலாவது தன் கீழ் ஆள் சேர்க்க துரத்தல் நடைபெறுகிறது. இத்துரத்தலில் ஆள் சேர்க்கப் பல ஆசை வார்த்தைகளை அளவுக்கதிகமாகக் கூறவேண்டிய நிலை ஏற்படுகிறது.

3. குடும்பத்திலும் சமூக சூழலிலும் நெருக்கமாக உள்ளவர்களை இத்தூண்டிலில் மாட்டி விட்டு ஆள் சேர்க்கத் துரத்தப் போக மேற்படியான திண்டாட்டச் சுழலில் நெருக்கமானவர்கள் சிக்கும் போது அவர்களுக்கிடையே உடையும் அன்புப்பிணைப்புகள் தவிர்க்க முடியாத ஒன்று. (கடன் மட்டுமா அன்பை முறிக்கும்?)

4. பொதுவாக இத்தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் நபர்கள்  அடிப்படையில் சந்தைப்படுத்தல் விற்பன்னர் (Marketing Expert) அல்லர். அதாவது ஒரு வியாபாரிக்கான எவ்விதத் தகுதியும் இல்லாமலேயே பொருளை வாங்கும் அந்நேரத்திலேயே விற்பனையாளராக மாறியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனாலேயே சரியான முறையில் வியாபாரம் ஆகாமல் அல்லது வியாபாரம் செய்யத் தெரியாமல் கெடும் மன நிம்மதியும் புதிதாக நுழையும் மன உளைச்சலும் தவிர்க்க முடியாதவை.

5. இஸ்லாம் பெரிதும் விரும்பும் நற்பண்புகளில் ஒன்றான போதுமென்ற மனமில்லாமை தானாகவே குடிகொண்டு விடும். அதேவேளை தனக்கு நிர்ணயிக்கப்பட்ட செல்வத்தை ஆகுமான வழிகளில் தேடிக்கொள்ள இஸ்லாம் எவ்விதத்திலும் தடை விதிக்கவில்லை.

6. எப்படியாவது தன் கீழ் ஆள் சேர்ந்தால் போதும் என்ற மோசமான எண்ண ஓட்டம் மனதில் குடி கொள்வதால் இதில் இணைபவர்களை சுயநலப்பேர்வழியாக்கி சமூகத்தில் தனிமைப்பட்டு நிற்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

7. சிந்தனையும் அதனை ஒட்டிய செயல்களும் இவ்வியாபாரத்தையே 24 மணி நேரமும் சுற்றி வருவதால் மார்க்கப்பற்றை நீக்கிவிடும். மார்க்கக் கூட்டங்கள் போன்ற ஒரு பொது இடத்திற்கு சென்றாலும் ‘இவர்கள் எல்லோரும் என் கீழ் உறுப்பினர்களானால் போட்டதை விட பெருமடங்கு அள்ளிவிடலாமே’ என்ற சிந்தனை எழுவதை அவர்களால் நிச்சயம் தவிர்க்க இயலாது.

8. காலையில் எழுந்தது முதற்கொண்டு இரவு தூங்கச் செல்லும் வரை நீங்கள் எதிர் கொள்ளும் நபர்கள் எல்லாமே உங்கள் வாடிக்கையாளர் தான் (அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்). காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல் எதிரில் வருபவர்களை எல்லாம் உறுப்பினராக்குவதற்காகத் துரத்துவது வாடிக்கையாகிவிட்டால் சொந்த பந்தம், நண்பர்கள் வட்டம் உங்களை விட்டு ஓடும். ஒருவேளை அவர்களில் ஒருவர் உங்களுக்கு வாடிக்கையாளராகிவிட்டு வேறு நபர் அவருக்குக் கிடைக்காவிட்டால் உங்களைக் காணும்போதெல்லாம் (மனதிற்குள்ளாவது) ஏசத்தான் செய்வார்.

நவீன சந்தைப்படுத்துதலா அல்லது கட்டமைக்கப்பட்ட குற்றமா?

சமூகத்தின் சுமூகமான சூழ்நிலையை சீர்குலைக்கும் இத்தகைய மோசமான இந்நவீன மோசடியை நியாயப்படுத்த இதனையே முழுநேரத் தொழிலாக கொண்டு நடக்கும் சில டிப்டாப் ஆசாமிகள் ஒரு புதிய வார்த்தையை சாதாரணமானவர்களின் முன்னிலையில் விளம்பரப்படுத்துகின்றனர். நவீன சந்தைப்படுத்துதல் என அவர்களால் கவுரவமாக உச்சரிக்கப்படும் இது அவர்களால் மக்களை ஏமாற்ற வடிவமைக்கப்பட்ட கவர்ச்சிகரமான சொல் என்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டுள்ளனர்?

ஒரு மனிதனிடமிருந்து பணத்தைக் கையாடிவிட்டாலோ அல்லது ஏமாற்றிப் பறித்து விட்டாலோ சட்டத்தில் அக்குற்றத்திற்கான தண்டனை உண்டு. ஆனால் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதையே அறியாதவண்ணம் அப்பாவிகளின் கனவை முதலீடாகக் கொண்டு ஏமாற்றும் இது போன்ற நிறுவனங்களை தடை செய்வதற்கான கடுமையானச் சட்டத்திருத்தங்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?

“ஹராமாவது அப்படி ஒண்ணாவது!” என்று நீங்களும் வார்த்தைகளில் ஜாலம் காட்டி அப்பாவிகளுக்கு ஆசையூட்டி அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பாகத்தை அவர்களை ஏமாற்றிப் பறிக்கும் ஒரு விற்பன்னராக இருக்கும் பட்சத்தில் ஒருவேளை உங்களுக்கு இவ்வியாபாரம் கைகொடுக்கக்கூடும். பொய் சொல்வதையோ, சக சகோதரன் நஷ்டவாளியாவதை விரும்பாத ஆசாமியாகவோ அல்லது மற்றவர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க நெருக்கமானவர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்குவதை விரும்பாத நபராகவோ நீங்கள் இருக்கும் நிலையில் இதற்காக உங்களிடம் அணுகுபவரிடம் ஆரம்பத்திலேயே அவசரமாக தலையாட்டி மறுத்துவிடுவது தான் நல்லது.

இது ஒரு பங்கு சந்தை வியாபாரம் போன்றது தானே? வரும் லாபத்தை பங்கு போட்டுக் கொள்கிறோம் அவ்வளவுதான் என்பவர்கள் இதை சிந்தியுங்கள். நுகர்வோர் அங்காடியில் ஒரு பொருளைக் கொள்முதல் செய்கிறீர்கள். அதற்கான விலையை அல்லது இலாபத்தை, உங்களுடன் வியாபாரத்தில் சம்பந்தப்படாத 5 அல்லது 10 பேருக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அந்த பொருளை விற்கும் நிறுவனம் உங்களைக் கட்டாயப்படுத்துகிறது என்றால் என்ன செய்வீர்கள்? சம்பந்தமில்லா நபர்களுக்கு நான் ஏன் பணம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியுடன் இது சரியான வியாபாரமாகுமா? இத்தகைய வியாபாரம் செய்யும் நிறுவனம் சந்தையில் நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா? என்ற பல கேள்விகளை மனதில் எழுப்பிப் பாருங்கள். இது ஏமாற்று வேலையா? இல்லையா? என்பதற்கான விடை தானாகவே கிடைக்கும்.

உலகம் இன்று வட்டியினை அடிப்படையாக வைத்து இயங்கும் பொழுதும் முடிந்த அளவு அதிலிருந்து விலகி தங்களை ஒரு கட்டுக்கோப்பாக வைத்து இறைவனுக்கு பயந்து வாழும் முஸ்லிம் சமூகம் தான் இன்று பல வகையிலும் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக உள்ளது. இஸ்லாத்தின் நிலைநிற்பு இந்த இறையச்சத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டுக்கோப்பில் தான் உள்ளது என தெளிவாக அறிந்ததாலோ என்னவோ எவ்வகையிலாவது இக்கட்டுக் கோப்பைச் சீர்குலைக்க எல்லா வழிகளிலும் இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள் கவனம் செலுத்துகின்றன.

இவ்வியாபாரம் சம்பந்தமாக புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வளைகுடா நாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள முஸ்லிம்களை அணுகும்போது, ஷரீயத் சட்டம் பற்றி சந்தேகம் எழுப்புவோரையும் வளைத்துப் போடும் உத்தியும் இதில் நடக்கிறது. அதற்காக சில இடங்களில் மார்க்க அறிஞர்களையும் இதில் வளைத்துப் போட்டுள்ளனர். (ஓரிரு நாள்கள் முன் காசுக்கு விலைபோன ஃபத்வா வியாபாரி ஒருவர் சிக்கியது நினைவிருக்கலாம்)

சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடமிருந்து இதனைக் குறித்து ஃபத்வா வாங்கி அதனை ஆதாரமாகக் காட்டி கொஞ்ச நஞ்சம் பாக்கி இருக்கும் தவறிலிருந்து விலகி வாழ ஆசைப்படுபவர்களையும் வளைத்துப் போடுகின்றனர். இது குறித்து விரிவான ஆய்வை வரும் பகுதிகளில் காணுவோம் இன்ஷா அல்லாஹ்

கட்டுரை ஆக்கம் : அபூஷைமா

முதல் பகுதியை வாசிக்க: http://www.satyamargam.com/articles/serial/research-articles/mlm-1/


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.