
“உண்மையைத் தேடி” தொடரின் இதற்கு முந்தைய பகுதிகளில் மின்மடல் மூலம் பொய்ச்செய்தி பரப்பப்படுவதையும், பணம் சம்பாதிக்கும் ஆவலுடன் வீணாக மடல் பரிமாற்றம் செய்யப்படுவதன் தன்மையையும் அலசினோம். இவ்வகையான மடல்கள் எவ்வாறு பெரும் சங்கடங்களையும் வளங்களில் (resources) வீண் விரயத்தையும் ஏற்படுத்துகின்றன என்றும் கண்டோம். இவ்வகையான வீண் விரயங்களை பெரும்பாலும் பல நிறுவனங்களும், இணைய சேவை வழங்கிகளும் எதிர்கொள்கின்றன. இப்பகுதியில் ஒவ்வொரு தனிமனிதனையும் பெருமளவு பாதிக்கவல்ல மிகப்பெரும் தீமையான Multi Level Marketing எனப்படும் பல்லடுக்குச் சந்தைப்படுத்தலைக் குறித்து காண்போம்.
மல்ட்டி-லெவல் மார்க்கெட்டிங், நெட்வொர்க் மார்க்கெட்டிங், செயின் மார்க்கெட்டிங், பிரமிட் திட்டம் என்ற கவர்ச்சிகரமான பெயர்களைக் கொண்டு உங்களைத் தேடி உங்கள் நண்பரோ, அல்லது அவருக்கு அறிமுகமானவரோ உங்களைத் தொடர்பு கொள்கிறார்களா? ஆம் எனில் இந்த ஆக்கம் உங்களுக்குப் பயனளிக்கும்.
பிரச்சாரக் கூட்டங்கள், பயிலரங்குகள் (Presentation & Seminars), நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி தாம் ஏற்கனவே பெற்ற பணத்திற்கான காசோலை நகல்களையும், கண்களில் ஆசைகளையும், வார்த்தைகளில் ஜாலங்களையும் காட்டி மயக்கும், டை கட்டிய வினியோகிப்பாளர்கள் அறிமுகப்படுத்தும் இது போன்ற திட்டங்கள் கிட்டத்தட்ட ஒரு பரிசுக்குலுக்கல் லாட்டரியைப் போன்று பல சகோதரர்களை ஆட்டுவிக்கிறது. இந்தத் திட்டத்தில் பணத்தைத் தொலைத்து விட்டு பேதையாக கையறு நிலையுடன் நிற்பவர்கள் பலர்.
பிரமிட் அல்லது பல்லடுக்கு சந்தைப்படுத்தல் என்னும் இந்தத் தீய அமைப்பு இயற்கையிலேயே நிற்கவியலா ஒரு கட்டமைப்பைக் கொண்டது (Impossible or unsustainable structure). குழப்பமான ஆனால் கவர்ச்சிகரமான சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வாக்குறுதிகள் கொண்டிருப்பதே இவற்றின் அடையாளம். மிகக்கவனமாகப் பரிசோதித்தால் பணம் ஒருவழியாக அதாவது தொடங்கியவரை நோக்கி மட்டுமே செல்லுவதை அறியலாம். கடைசியாகச் சேர்ந்தவர்கள் நஷ்டத்தைத் தவிர வேறெதையும் அடையார்.
இதில் கொடுமை என்னவென்றால், தாம் பலியாடாகிவிட்டதை உணர்ந்த கொஞ்சம் விவரமானவர், நம் பணம் மட்டுமாவது திரும்பக் கிடைத்தால் போதும் எனத் தனக்கு வேறு ஏதேனும் பலியாடு சிக்காதா? எனத் தனக்குத் தெரிந்தவர்களை இதில் இழுத்துவிட முயலுவதுதான். இவ்வகையான பணம் பண்ணும் வழிமுறைகள் நியாயமானவை அல்ல என்பதற்கும் இது மற்றவர்களை ஏமாற்றும் நவீன பணம் பறிக்கும் கண்கட்டு வித்தை என்பதற்கும் ஆதாரம் இது ஒன்றே போதும்.
25 வருடங்களாகத் தோல்வியைத் தழுவி வரும் MLM (Multi Level Marketing) நிறுவனங்கள் விற்பனைத் தந்திரங்களை புதுப்புது பெயர்களிலும் நவீன முறைகளிலும் தருவது புதியது ஒன்றுமில்லை என்றாலும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முறைகளைக் குறித்து தெளிவான கண்ணோட்டமும் ஆழ்ந்த அறிவும் அவசியமாக இருப்பதால் MLM என்பதைக் குறித்தும் அது எவ்விதம் தவறான அணுகுமுறையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அதற்கான காரணங்களையும் இங்கே பட்டியலிட்டுக் காணலாம்.
முதலில் நாம் MLM நிறுவனங்களின் இயங்குதளம் (driving mechanism) அதாவது பண உருவாக்க வழிமுறை எதுவென்று காண்போம்.
இத்தகைய நிறுவனங்களின் இலாபம் அதன் தயாரிப்பினாலோ அல்லது வழங்கும் சேவையினாலோ அன்று. இதில் உறுப்பினராக இணைபவர் அவர்களின் சந்தை விலைக்கு பல மடங்கு அதிகமான விலை நிர்ணயிப்புடன் கொடுக்கும் பொருளை வாங்குபவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே இதன் இலாபம் நிர்ணயிக்கப்படுகிறது. தெளிவாகக் கூறினால் கடைசியில் இதில் சேர்பவருக்கு மேற்கொண்டு சேர்க்க வேறு நபர் கிடைக்கவில்லையெனில் அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியதற்குப் பெருத்த ஏமாற்றம் (பொதுச் சொல்வழக்கில் “ஆப்பு”) தான் மிஞ்சும். அவ்வாறெனில் இறுதியாக உறுப்பினராகச் சேர்ந்த அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்கள் அனைவரும் கடுமையான நஷ்டத்திற்குள்ளாவர். இதனாலேயே சாதாரணமாக ஒரு நிறுவனம் ஈட்டும் வெற்றியை இந்த MLM நிறுவனங்கள் ஏட்டளவில் கூட ஈட்ட இயல முடிவதில்லை.
ஆனால் பயனடைபவர் இல்லாமல் இல்லை. MLM நிறுவனருக்கு அல்லது துவக்கியவருக்குக் கிடைக்கும் வெற்றியோ அமோகமானது. ஏனெனில் இந்த விளையாட்டில் விற்பன்னர்கள் எத்தனை பேர் என்பதில் கட்டுப்பாடு என்பதே கிடையாது. ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் மேலதிகாரி நாம் இவ்வருட விற்பனையை எட்டவுள்ளோம். அதனால் புதிய விற்பன்னர்களை வேலைக்கு நியமிப்பது அவசியமில்லை என்று கூறுவதெல்லாம் இங்கே சாத்தியமில்லை. விற்பன்னர்களுக்குச் சம்பளம் இல்லாத, புதிதாக இணையும் உறுப்பினர்களை ஓட்டாண்டி ஆக்கக்கூடிய MLM நிறுவனத்தை ஒரு நடத்துனரற்ற, வேகத்தடைவசதியில்லாமல் பயணிக்கக்கூடிய முழுவேகத்தில் செல்லும் ஒரு ரயிலுக்கு ஒப்பிடலாம்.
இத்தகைய நிறுவனங்களை அல்லது அதையொத்த பொறிகளைக் கண்டறிவது எப்படி? இதனை இப்போது பார்ப்போம். இத்தகையத் திட்டங்களில் பொதுவான சில அம்சங்கள் உள்ளன. அவை:
1. வானளாவிய நம்ப இயலாத வாக்குறுதிகள்
இங்கே பாருங்கள்… நீங்கள் 4 பேரை (சந்தையில் பாதி அல்லது அதற்குக் குறைவான விலைக்குக் கிடைக்கும்) இப்பொருளை வாங்க வைத்து உறுப்பினராக்கி (இங்கே பொருளை விற்பது நோக்கமா? அல்லது புதிய வியாபாரியை சேர்ப்பது நோக்கமா? எந்த வியாபாரத்தில் பொருளை வாங்கியவர் அந்நேரமே அப்பொருளை சந்தைப்படுத்த நிர்பந்தத்துக்குள்ளாக்கப்படுகிறார்?) விட்டால் போதும் மற்றதெல்லாம் தானாகவே(?) நடக்கும்! உங்களுக்குக் கீழே வலது பக்கத்தில் உறுப்பினராகும் அந்த நான்கு நபர்களும் தலா நான்கு நபர்களை சேர்க்கும் பட்சத்தில் உங்கள் வீட்டின் கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் என்பார்.
2. நிறுவன அமைப்பு தொழில் பற்றிய சரியான விளக்கமின்மை
அடிப்படையான ஒரு கேள்வி என்னவென்றால், இந்த MLM நிறுவனங்கள் அளிக்கும் பொருள்களோ, அல்லது சேவையோ சிறப்பானதாக உள்ளது எனில் ஏன் இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயனளிக்கும் நுகர்வோர் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை? எங்கிருந்து உங்களுக்கு பணம் வருகிறது? ஏன் இது நான்கு சுவர்களுக்குள் ஒரு தனித்துவமிக்க வியாபார நோக்குடனேயே செயல்படுத்தப்படுகிறது என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.
கணினியைப் பயன்படுத்தி MLM நிறுவங்கள் எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ந்தால் பிரமிப்புடன் கூடிய அதிர்ச்சியே மிஞ்சும். ஏனெனில் MLM விளையாட்டில் வெற்றி என்பது தாளில் எழுதிப்பார்த்தால் கூட கிட்டாது.
3. வருமானம் வருவதற்கான ஒரே வழி மேன்மேலும் ஆள்பிடிப்பது தான்
ஒரு வியாபாரத்தின் இலாப வரவு அவ்வியாபாரம் சந்தைப்படுத்தும் பொருளின் தரத்தினைச் சார்ந்து அமையும். பொருள் தரமானதில்லை எனில் சந்தையில் வெகுநாள் தாக்கு பிடித்து நிற்காது. அதாவது தொடர்ந்து வெகுநாள் நுகர்வோரை ஏமாற்ற முடியாது. அது போல் வியாபாரத்தைப் பொறுத்தவரை அதன் உரிமையாளர் அப்பொருளை ஒருவருக்கு விற்பதோடு அந்த நுகர்வோருடன் உள்ள உறவு முடிந்து விடுகிறது. திரும்பவும் அந்த நுகர்வோர் விருப்பப்பட்டால் அவ்வியாபாரியுடன் மீண்டும் அப்பொருளுக்காக தொடர்பு கொள்ளலாம். ஆனால் இங்கே ஒரு பொருளை அடுத்தவருக்கு விற்பதுடன் வியாபாரம் முடிந்து விடுவதில்லை. வாங்கிய பொருளுக்கான மதிப்பை நுகர்வோர் பெற வேண்டுமெனில் தன் முதுகில் மாட்டப்பட்ட தூண்டிலில் வேறு சிலரை இணைக்க தூண்டிலைக் கொண்டு அலைய வேண்டும். நிச்சயித்த அந்த ஒரு சிலர் தூண்டிலில் மாட்டவில்லை எனில் வாங்கிய பொருளுக்கு செலுத்திய காசு தண்டம் தான். எனவே இங்கு தான் நஷ்டம் அடையாமல் தப்பிக்க தான் ஏமாந்தது போல் வேறு ஒருவரை ஏமாற்ற அலைய வேண்டியுள்ளது. ஆகவே வருமானம் வருவதற்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் ஆள்பிடிப்பது மட்டுமே.
4. முதலில் சேருபவர்களுக்கு மட்டுமே பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும்
அப்படி என்றால் MLM மூலம் பணம் சம்பாதிக்க இயலாது என்கிறீர்களா என்றால் இல்லை! சம்பாதிக்கலாம். ஆனால் உங்களுக்குக் கிடைக்கும் பணம் ஆகுமாக்கப்பட்ட நேர்வழியில் ஆனது(ஹலாலானது) அன்று! உங்கள் தலைவிதியைப் பரிசோதிப்பதற்காக தயாரிக்கப்பட்ட திட்டத்தில் நீங்கள் கை கோர்க்கிறீர்கள் என்று அர்த்தம். விதி கை கொடுத்தால் சரி! இல்லை என்றால் துண்டுதான். அதாவது பொருளை வாங்குபவரின் கீழ் குறிப்பிட்ட நபர்கள் சேர்ந்தால் (ஏமாந்தால்) பிழைத்தீர்கள். இல்லையேல்…?
MLM என்பது கணித விரிவாக்கத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. நான்கு பேரில் ஒருவரை இழுக்க அடுத்த நான்கு பேர் வேண்டும். அவர்களில் ஒருவரை இழுத்துச் செல்ல அடுத்த நான்கு பேர். இதில் வலதிலோ இடதிலோ ஒரு பக்கச் சங்கிலியை ஒருவர் கழற்றிக்கொண்டு போனாலும் அதோ கதிதான். இதற்கு விரியும் அணிக்கோவை (Expanding Matrix) என்று பெயர்.
சும்மா ஒரு கணக்கிற்கு வலதில் 5 பேரும் இடதில் 5 பேரும் என்று வைத்துக்கொண்டாலும் மூன்றடுக்கில் ஆயிரம் பேர். ஆறடுக்கில் ஒரு இலட்சம் பேர் பணம் பண்ணும் நப்பாசையில் சேர்ந்து கொண்டே செல்கின்றனர். யாருக்குப் பணம் சேருகிறதோ இல்லையோ, MLM நிறுவனர் காட்டில் மழைதான்.
5. பணம் ஒருவழியாக மட்டுமே நகரும்
பல்லடுக்கு சந்தைப்படுத்துதலில் (ஒரு பேச்சுக்கு உலக மக்கள் அனைவருமே பங்கு பெறுவதாக வைத்துக் கொண்டோமெனில்) 13 அடுக்குகளுக்குள் அனைத்து உலகின் மக்கள் தொகையும் அடங்கிவிடும். எனவே இந்த முறையில் ஒருவர் இழக்கும் பணமே இன்னொருவருக்குக் கிடைக்கிறது. பணம் உண்மையில் உருவாக்கப் படுவதில்லை (No real generation of money) இதில் கண்டிப்பாக 84 விழுக்காட்டினர் பணம் இழக்க மட்டுமே செய்கின்றனர். எனவே இது ஒரு மோசடி அல்லாமல் வேறென்ன? மோசடி எதையும் இஸ்லாம் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை.
அடுத்த பாகத்தில் இந்த வகை ஏமாற்று வித்தையால் சமூகத்தில் என்னென்ன பின் விளைவுகள் நிகழ்கின்றன என்பதையும் தந்திரமாக சில முஸ்லிம் அறிஞர்களிடமிருந்து இது ஹலாலான வியாபாரமே என தீர்ப்புகளைப் பெற்று முஸ்லிம்களை பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் அற்பப் பிழைப்பிற்கு குறிவைக்கின்றனர் என்பதையும் குறித்து இன்ஷா அல்லாஹ் காண்போம்.
– அபூஷைமா
இரண்டாம் பகுதி வாசிக்க: https://www.satyamargam.com/articles/serial/research-articles/mlm-2/
பின்குறிப்பு: இத்தொடர் தொடர்பான கருத்துக்கள் & விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டப்பட்டால் அது எங்களை திருத்திக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும். – நிர்வாகி (சத்தியமார்க்கம்.காம்)