
புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை, இந்தியா – பர்மா – இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான் உணர முடியும். அப்போது தான் இந்தியாவில் புத்த கயாவில் வெடித்த குண்டுகளால் “யாருக்கு” லாபம் என்பது விளங்கும்.
இந்தியா: நல்லிணக்க இந்தியாவில் நிகழும் எந்த ஒரு பயங்கரவாதச் செயலும் தனி மனிதனின் உணர்ச்சிப் பிரவாகத்தினால் நடந்து விடுவதில்லை. இதன் பின்னால் ஃபாசிஸத்தின் ஆழமான அரசியல் சதி பின்னப்பட்டுள்ளதை உணர்தல் அவசியம்.
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியின் மீதுள்ள மக்களின் கவனத்தை வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டும் எனில் நாட்டின் ஏதாவது ஒரு மாநிலத்தில மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியாக வேண்டும் என்ற அமெரிக்க ஃபார்முலா இந்திய அரசியல்வாதிகளைப் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது.
எவரையும் உலுக்கும் அந்தப் பயங்கரவாதத் “தாக்குதல்”, மதத்தை வைத்துப் பிழைக்கும் அரசியல்வாதிகளுக்குக் கை மேல் பலன் கொடுக்கிறது. முந்தைய நிகழ்வுகளை மறக்கடிக்க வைக்கிறது.
கிட்டத்தட்ட அனைவருமே மறந்து போன ஒரு நிகழ்வைச் சற்றுப் பார்க்கலாமா?
கடந்த 2007 பிப்ரவரியில், சம்ஜோதா எக்ஸ்பிரஸில் வெடித்த குண்டினால் 67 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களுள் பாதுகாப்பு வீரர்கள் ஒருசிலர் தவிர அனைவருமே முஸ்லிம்கள். ஆனால் அதே சமயம், இந்தப் பயங்கரவாதச் செயலுக்குக் காரணகர்த்தாவாக முதலில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும் முஸ்லிம்களே! தொடர் விசாரணையில் முஸ்லிம்கள் பேரில் மறைந்திருந்த ஹிந்துத்துவா பயங்கரவாத பூதம் வெளியே வந்து தொபீர் எனக் குதித்தது.
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியின் மீதுள்ள மக்களின் கவனத்தை வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டும் எனில் நாட்டின் ஏதாவது ஒரு மாநிலத்தில மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியாக வேண்டும் என்ற அமெரிக்க ஃபார்முலா இந்திய அரசியல்வாதிகளைப் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வெடிப்பதற்கு மறுநாள் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை முன்னமே நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு முக்கியமான அமைதி ஒப்பந்தம் (Peace process between India and Pakistan) கையெழுத்தாக இருந்தது. திட்டமிட்டபடி ஒப்பந்தம் கையெழுத்தாகும் முதல் நாளில் குண்டு வெடித்தது. பழியை இந்திய முஸ்லிம்கள் மீதும் ஆயுதங்கள் பாகிஸ்தான் சப்ளை செய்தது என்றும் “எழுதிக் கொடுத்தவாறே” ஊடகங்கள் திரித்தன. அமைதியே இல்லை… பின்னே எப்படி ஒப்பந்தம் கையெழுத்தாகும்? மத அரசியல் மீண்டும் ஒருமுறை அங்கே வென்றது.
தற்கால நிகழ்வுக்கு வருவோம்.
உத்தர்கண்டில் 15,000 பேரைக் காப்பாற்றியதாகக் காசு கொடுத்துச் செய்தி (Paid news) வெளியிட்டு, சாதாரண மக்களாலேயே அழுகிய முட்டைகளால் அடிவாங்கிய ரேம்போ மோடி ஒருபுறம் இருக்கட்டும்.
கட்சியின் கவுரவத்தைச் செருப்புக்குச் சமானமாக எண்ணித் தூக்கி எறிந்து விட்டுப் பதவிக்காக பாஜக பெருந்தலைவர்கள் நடத்திய குழாயடிச் சண்டையை உலகமே கண்டு கைகொட்டிச் சிரித்ததும் இன்னொரு புறம் இருக்கட்டும்.
19 வயதான கல்லூரி மாணவி இஸ்ரத் ஜஹானைப் போலி என்கவுண்டர் செய்த வழக்கில் குஜராத் அரசுக்கும் பல IPS அதிகாரிகளுக்கும் செருப்படியைக் கொடுத்திருக்கும் குஜராத் உயர்நீதிமன்றம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
சொஹ்ராப்புத்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி 2007 முதல் ஜெயிலில் காலங்கழிக்கும் டி.ஐ.ஜி வன்சாரா, முஸ்லிம்கள் மீதான தன்னுடைய படுகொலை ஆபரேஷன்களுக்கு இரண்டு பேரிடம் அனுமதி வாங்கியதாக விசாரணையில் பதிவாகியிருக்கிறது. ஒருவர் வெள்ளைத் தாடி (Safed Dhadi மோடி), இன்னொருவர் கறுப்புத் தாடி (black Dhadi அமித் ஷா).
இஸ்ரத் ஜஹான் படுகொலைக்குப் பிறகு அசிங்கப்பட்டுப் பல் இளிக்கும் I.B, இதுவரை வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள் ஒட்டு மொத்தமும் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன, புத்த கயா சம்பவத்தில் I.B-யின் எச்சரிக்கையையும் சேர்த்து. [வாசிக்க: ஐபியால் உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்!]
ஏற்கனவே இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் தொடர்புடைய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் எவ்விதத் தடையுமின்றி உலா வருகின்றனர். பழியைத் தூக்கி முஸ்லிம்கள் மேல் போடவும், ஏற்கனவே நிகழ்த்தப்பட்டவற்றில் நடந்த “தவறு”களைச் சரி செய்து கொள்ளவும் இவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்படுகிறது. சாயம் வெளுத்துப் போன முந்தைய “கசப்பான” அனுபவங்களை முன்வைத்துக் கொண்டு புதிய திட்டங்களை மேலும் கூர் செய்கின்றனர்.
சந்தர்ப்பங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் சங்பரிவாரத்துக்கு இணை எவருமில்லை என்றுதான் கூறவேண்டும். பர்மாவிலும் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த பிட்சுகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியாவிலிருந்து தம்மால் துடைத்து வீசப்பட்ட புத்தமதத்தினருக்கு எதிராக ஏதாவது தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை முஸ்லிம்கள்மீது திருப்பி விடுவது எளிது என்று திட்டமிட்டே புத்த கயா தாக்குதல் நடந்திருப்பது புலனாகிறது. அங்கு குண்டுவெடிப்பு நடந்த நிமிட நேரத்துக்குள்ளேயே எப்போதும்போல் ஃபாஸிசத்துக்குத் துணை போகும் ஊடகங்கள் சொல்லிக் கொடுத்தது போன்று ஒரு சேர “இந்தியன் முஜாஹிதீன்” என ஓலமிட்டன. ஆனால், முஜாஹிதீன் போர்வையில் ஒளிந்துள்ள ஹிந்துத்துவவாதிகளே இதன் பின்னணியில் உள்ளனர் என்பதை சமீபத்தில் வெளிவரும் செய்திகள் பல உறுதிபடுத்தி விட்டன.
[இந்தியன் முஜாஹித்தீன் என்ற அமைப்பின் தலைவர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டிருக்கும் யாஸின் பட்கல் என்பவர் பற்றி “த ஹிந்து” நாளிதழின் பிரவீன் சுவாமி கூற்றுகளை அறிந்து கொள்வது இங்கே அவசியம். வாசிக்க: இந்தியன் முஜாஹிதீனுக்குப் பெயர் சூட்டியவர் யார்? மற்றும் ஹிந்து நாளிதழ் மீது யாசின் பட்கலின் தந்தை தொடர்ந்த வழக்கு!]
கடந்த 13 ஆம் தேதி அரூப் பிரம்மச்சாரி என்ற ஹிந்து மதச் சாமியார் ஒருவன் கைது செய்யப்பட்டான். புத்த கயாவில் தங்கியிருந்த இவன், குண்டுவெடிப்புக்குப் பின்னர் தலைமறைவானான். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவனைத் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகின. பல முன்னணி ஊடகங்களி்ல் வெளியான இச்செய்தி, அடுத்த ஒரு சில நாட்களிலேயே மூடி மறைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
குண்டுவெடிப்பு நடந்த மறுநாளே தேசிய புலனாய்வுப் பிரிவினர் (NIA) கையில், போதுமான ஆதாரங்களுடன் வினோத் குமார் மிஸ்ட்ரி எனும் ஒருவன் சிக்கியிருந்தான்.
புத்த பிட்சுகள் அணியும் உடையை அவன் மறைத்து எடுத்துச் சென்ற காட்சியும் சந்தேகத்திற்கு இடமாகக் கோயிலினுள் அவன் நடமாடும் காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. மாலேகான் குண்டுவெடிப்பில் முஸ்லிம்கள் மீது பழிபோட ஒட்டுத் தாடிகளுடன் சிக்கிய ஹிந்துத்துவாவினரின் செயல் இவ்விடத்தில் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கதாகும்.
தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் புத்த கயாவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் இதற்கு முன்னரே வெளிவந்திருக்க வேண்டும் (NIA questions man for Bodh Gaya blasts, Patna, 8 July 2013). ஆனால் இதுவரை வேறு எந்த முன்னேற்றமும் விசாரணையில் வெளிவராததோடு, ஊடகங்களின் பிரதான செய்தியிலிருந்து புத்த கயா குண்டுவெடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.
குண்டுவெடித்ததும் இந்தியன் முஜாஹிதீன் எனக் கூக்குரலிட்டன ஊடகங்கள். பீகாரில் அடுத்த ஓரிரு தினங்களிலேயே மதிய உணவில் விஷம் கலக்கப்பட்டுப் பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவத்தினைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் “இது பாஜகவின் சதிச் செயல்” எனக் கூறிய பின்னர் மொத்தமாக ஊடகங்களின் கூக்குரலும் ஓய்ந்துவிட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
புத்தகயா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் குஜராத்தில் தயாரிக்கப்பட்டவை என வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் வெளியானதையும், குஜராத்துக்கு கடத்திச் செல்லப்படும்போது பிடிபட்ட 2500 கோடி ரூபாய்களையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
2014 இல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மோடியினை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ் தீர்மானித்துவிட்ட நிலையில், பா ஜ க தேர்தல் குழுவின் தலைவராக மோடி நியமிக்கப்பட்ட உடனேயே பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. “இதற்கான பலனை நிதீஷ்குமார் விரைவிலேயே சந்திப்பார்!” என மோடி எச்சரித்த அடுத்த வாரத்திலேயே புத்த கயாவில் குண்டுவெடித்ததும் அதற்கடுத்த ஓரிரு நாட்களில் பள்ளிக்குழந்தைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதும் சொல்லி வைத்தார் போல், உடனேயே பாஜக நாடு தழுவிய பந்த் அறிவித்ததும் யதேச்சையாக நிகழ்ந்தவை என எடுத்துக் கொள்வதற்கு வழியில்லை. தொடர்ந்து, இவற்றின் பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது என வெளிப்படையாக அறிவித்த பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் அறிக்கை மீது காவல்துறை என்ன விசாரணை மேற்கொண்டது? நிதீஷ்குமாரின் அறிக்கை பொய்ப்பழி எனில், பாஜக நிதீஷ்குமார் மீது வழக்கு தொடராதது ஏன்? போன்ற நடுநிலையாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடையில்லை.
எனவே, நடந்துள்ள அனைத்தையும் சேர்த்துக் கூர்ந்து கவனித்தால், புத்த கயா குண்டுவெடிப்பின் பின்னணியிலும் சங்பரிவாரத்தின் பயங்கர கைகளே உள்ளன என்பதைப் பாமரனும் தெளிவாக விளங்கிக் கொள்வான். எனினும் தென்காசி குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு போன்றவற்றின் விசாரணைகள் மக்கள் மத்தியிலிருந்து மறக்கடிக்கப்பட்டுச் செல்வது போல் புத்த கயா குண்டுவெடிப்பும் அநேகமாக பெட்டிக்குள் வைக்கப்பட்டுவிட்டது போன்றே தெரிகிறது.
இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் ஐபியின் தலைவர் ரஜீந்தர் குமாரை நோக்கி சிபிஐ திரும்பிவிட்ட நிலையில், இதுவரை இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் என இந்திய உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து நடந்துள்ள புத்த கயா முதலான அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களையும் சுதந்திரமான புலனாய்வு அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.
ப்ரக்யா சிங் தாகூர், அசிமானந்தா, சுனில் ஜோஷி, I.B யின் தலைவர் ரஜீந்தர் குமார் என அம்புகளை மட்டுமே குறிவைத்துக் கொண்டு செல்லும் விசாரணைகள், அவற்றை மறைவான இடத்தில் அமர்ந்து கொண்டு எய்து கொண்டிருக்கும் வில்லையும் வில்லனையும் கண்டு பிடிக்கும் விதத்தில் முனை திரும்பினால் மட்டுமே இந்தியாவில் மக்கள் அமைதியுடன் வாழ முடியும் என்பதை உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டு இவ்விசயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே இந்திய மக்களின் ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
– அபூ ஸாலிஹா
முந்தைய பகுதிகள்:
< பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | இறுதிப்பகுதி >