ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு சாத்தியமா?

Share this:

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-5)

ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு சாத்தியமா?

தமிழக முஸ்லிம்களிடையே செயல்பட்டுவரும் இயக்கங்கள், சங்கங்கள், கட்சிகள், கழகங்கள், ஜமாஅத்கள், ஜகாத் நிதியை முக்கிய ஆதாமாகக் கொண்டு செயல்படும் இதர அமைப்புகள், மதரஸாக்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்தால் மலைத்துப் போய்விடுவோம்.  இந்தச் சூழ்நிலையில் ஜகாத்தை முறையாகச் சேகரித்து வினியோகம் செய்ய ஓர் ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். அதற்கான பதில், மனமிருந்தால் மார்க்கமுண்டு!

ஜகாத்தை முறைப்படி செயல்படுத்துவதன் மூலம் மார்க்கத்தின் தூணாகிய கடமையை நிலைநிறுத்துவது, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படச் செய்வது என்ற உயரிய நோக்கம் கொண்ட யாருக்கும் ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் பெரிதாக ஆட்சேபனை இருக்கப் போவதில்லை.  

ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பை நிறுவுவதற்கான சில ஆலோசனைகள்:


நிறுவன அமைப்பு:
இந்த ஜகாத் அமைப்பு, வக்ஃப் வாரியம் போன்றல்லாது அரசு சாராத நிறுவனமாக, முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களால், முஸ்லிம்களின் நிதியைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாக இருக்க வேண்டும்.  தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த ஓர் இஸ்லாமிய அமைப்பையோ இயக்கத்தையோ சார்ந்திராமல் அதே சமயத்தில் எல்லாத் தரப்பினருக்கும் பொதுவானதாகவும் இந்த அமைப்பு செயல்பட வேண்டும்.  தலைமை, நிர்வாகக்குழு நியமனங்கள், நிதி மேலாண்மை, செலவினங்கள் ஆகியவற்றில் வெளியாரின் தலையீடு இன்றி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகக்குழுவிற்கு மட்டும் இருக்க வேண்டும்.

தலைமை மற்றும் நிர்வாகக்குழு:
மார்க்கப் பற்றுடைய, சமுதாய நலனில் அக்கறையும் சமுதாயச் சேவையில் ஆர்வமும் அனுபவமும் உடைய 10 அல்லது 12 நபர்களைக் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும்.  இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் இயக்கங்களைச் சேர்ந்த தகுதியானவர்களை நிர்வாகக்குழு உறுப்பினர்களாகப் பரிந்துரை செய்யலாம்.  இவ்வாறு அமைக்கப்பட்ட நிர்வாகக்குழு, தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்தெடுத்துக் கொள்ள வேண்டும்.  அமைப்பின் செயல்பாட்டிற்குத் தேவையான எல்லா முடிவுகளையும் நிர்வாகக்குழுவும் தலைவரும் ‘ஷூரா’ எனும் கலந்தாலோசனை அடிப்படையில் எடுக்க வேண்டும்.

வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் களப்பணியாளர்கள்: முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஜகாத் அமைப்பிற்கான பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.  இந்தப் பிரதிநிதிகள் அவ்வட்டாரத்து முஸ்லிம்களின் வாழ்க்கைநிலை பற்றிய தகவல்கள் சேகரித்தல், ஜகாத் பெறத் தகுதியுடைய குடும்பத்தினரை அடையாளம் காணல், அவர்களின் பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு பரிந்துரை செய்தல், ஜகாத் வசூல், வினியோகத்தில் உதவி போன்ற பணிகளுடன், சுருக்கமாக ஜகாத் அமைப்பிற்கும் அந்த வட்டார முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு பாலமாக செயல்பட வேண்டும். 

இந்தப் பணிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் அந்தந்த வட்டார மஸ்ஜிதுகளின் இமாம்கள், முஅத்தின்கள், மதரஸா ஆசிரியர்கள் ஆகியோர்.  இவர்களுள் பெரும்பாலானோரே ஜகாத் பெறத் தகுதியுடையோராகவும் இருக்கின்றனர். அடுத்ததாக, இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் தங்கள் இயக்கத் தொண்டர்களை ஜகாத் அமைப்பின் பிரதிநிதிகளாகவும் களப்பணியாளர்களாகவும் சேவையாற்ற ஊக்குவிக்க வேண்டும்.

ஜகாத் அமைப்பின் செயல்பாடுகள்:

துணைக்குழுக்கள்: நிர்வாகக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்ட துணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அமைப்பின் பணிகள் அந்தத் துணைக்குழுக்களிடம் பகிர்ந்தளிக்கப்படலாம்.  துணைக்குழுக்களில் நிர்வாகக்குழுவின் பிரதிநிதிகளோடு தகுதியான உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்படலாம்.

  • மக்கள் தொடர்பு, தகவல் சேகரிப்பு, ஆய்வு: ஜகாத் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளவர்களிடமும் ஜகாத் பெறத் தகுதியுடையோரிடமும் ஜகாத் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல், வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை ஆராய்ந்து  சரியான புள்ளிவிவரங்களையும் ஆய்வறிக்கைகளையும் தயாரித்து நிர்வாகக்குழுவிடம் சமர்ப்பித்தல், ஜகாத் நிதியுதவிக்கான விண்ணப்பங்களையும் பிரதிநிதிகளின் பரிந்துரைகளையும் பரிசீலித்து அவற்றைத் தொகுத்தல் ஆகிய பணிகள் இந்தத் துணைக்குழு மேற்கொள்ளும்.
  • மனிதவளம்: அமைப்பிற்கான முழுநேரப் பணியாளர்கள், வட்டாரப் பிரதிநிதிகள் ஆகியோரை நியமித்தல், அவர்களுக்கான ஊதியங்களை நிர்ணயித்தல், முறையான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவை மனிதவள மேம்பாட்டுக் குழுவின் பொறுப்பாக இருக்கும்.
  • திட்டக்குழு: அரசாங்கப் புள்ளி விவரங்கள், ஆய்வுக்குழுவினரின் புள்ளிவிவரங்கள், ஆய்வறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த ஓராண்டிற்கான ஜகாத் வினியோகத் திட்ட வரையறையை தயாரித்தல், அதன்படி வினியோகம் செய்யப்படுகிறதா என மேற்பார்வையிடல் போன்ற பணிகள் திட்டக்குழுவிடம் ஓப்படைக்கப்படலாம்
  • நிதி நிர்வாகம்: ஜகாத் வசூல் மற்றும் வினியோகத்திற்கான சட்டதிட்டங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்துதல், வங்கிக் கணக்குகளை நிர்வகித்தல் போன்ற பணிகள் நிதி நிர்வாகக் குழுவின் பொறுப்பில் விடப்படலாம்.  இக்குழுவின் இன்னொரு மிக முக்கியமான பணி ஆண்டறிக்கைகளை தயாரித்து வெளியிடல்.  அமைப்பின் செயல்பாடுகள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி தகுந்த நேரத்தில் வெளியிடப்பட்டால் மட்டுமே அது சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெற்று அமைப்பு தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட வழிவகுக்கும்.
  • தணிக்கை: அமைப்பின் வரவு செலவுகளைத் தணிக்கை செய்யத் தணிக்கையாளர்களை நியமிப்பது மட்டுமல்லாமல், வட்டாரப் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்யவும் தன்னார்வல தணிக்கையாளர்களை நியமிப்பது இக்குழுவின் பணி.  சுமார் 10 வட்டாரப் பிரதிநிதிகளுக்கு ஒரு தணிக்கையாளர் எனும் எண்ணிக்கையில் நியமனங்கள் செய்யப்படலாம்.  அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் கணக்காளர்கள், தணிக்கையாளர்கள், பள்ளி / கல்லூரி ஆசிரியர்கள், பட்டதாரிகள் போன்றோர் கௌரவ தணிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் கணக்கு வழக்குகளைத் தணிக்கைச் செய்து தலைமைக்கு அறிக்கை அளிக்கும்படிச் செய்யலாம்.

இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை எவ்வாறு ஏற்படுத்த முடியும்?

தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்…
<<<தொடர் 4

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.