பழகு மொழி! – புதிய தொடர்

பழகு மொழி – முன்னுரை

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே – வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னர் மனிதன் தோன்றியிருப்பானா என்பதைச் சிந்திக்க மறந்தோம். ஏனெனில் தாய்மொழிப் பாசம் நமது அவ்வாறான சிந்தனையைத் தடுத்து விட்டது”

மேற்காண்பது, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் “கல்வெட்டு முதல் கம்ப்யூட்டர்வரை – தமிழ் எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி” என்ற தலைப்பில் ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழுக்கு அடியேன் எழுதிய கட்டுரையின் தொடக்கம்.

மனிதனின் முதல் ஆயுதமான கல் தோன்றுவதற்கு முன்னரே வாள் தாங்கிய தமிழனைக் கற்பனை செய்து பார்ப்பதை மறந்து, கம்ப்யூட்டரில் – இணையத்தில் தமிழ் மொழியின் பரவலைப் பார்க்கும்போது பூரித்துப் போகிறோம்.

யுனிகோடு எனும் ஒருங்குறி அற்புதம் இணையத்தில் புரட்சியாகப் புகுந்தபின் தமிழும் கணினி அறிவும் தெரிந்த பலரும் எழுத வந்தனர் – இரண்டுமே கொஞ்சம் தெரிந்திருந்தால் போதும் என்ற துணிச்சலோடு.

ப்ளாகர் எனும் இலவச வலைப்பூ இணையத்தில் அறிமுகமான பின்னர் அறிவியல், ஆன்மீகம், அரசியல், விளையாட்டு, உலக நடப்புகள், போன்ற எல்லாத் துறைகளிலும் தத்தமக்கு உள்ள சொந்தக் கருத்துகளை, புலமையை இணையத்தில் வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஓரளவு பலனடைந்து வருகிறோம்.

ஆனால், நாம் எழுதும் தமிழ் தரமானதா என்பதைக் குறித்துப் பெரும்பாலோர் கவலை கொள்வதே இல்லை. இணையத்தில் எழுதுபவர்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஏனெனில் பெரும்பாலான தமிழ் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் தம் மொழித் திறன் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை.

“இரண்டு வாகனம் நேருக்கு நேர் மோதல்” என்று நாளிதழ்களில் படிக்கும்போதும் “இத்துடன் செய்திகள் முடிவடைந்தது” என்று தொலைக்காட்சியில் கேட்கும்போதும் பலவேளை மனதுக்குள் வருத்தமும் சிலவேளை முள் குத்தும் வலியும் தோன்றுகிறது.

அவற்றைத் திருத்தி முடிப்பது நம்மால் ஆகாது என்றாலும் இணையத்தில் எழுதுபவர்கள் பிழையின்றித் தமிழ் எழுத நாம் உதவலாம் என்ற எண்ணம் நீண்ட காலமாக எனக்கு இருந்து வந்தது. இங்கு எழுதத் தொடங்கியதற்கு அதுவே தலையாய காரணமன்று.

“அன்புள்ள ஆசிரியருக்கு,” எழுதி அலுத்துப்போய் நீண்ட காலம் எழுத்தில் தொடர்பு இல்லாமல், இப்போது எழுதத் தொடங்கியதில் இலக்கண/எழுத்துப் பிழைகள் எனக்குக் கூடுதலாக வருகின்றன. தீட்டப் படாமல் உறையினுள் உறங்கும் வாள், கூர் மழுங்கிப் போய்விடுவது இயல்பன்றோ? அதுவும் ஒரு தமிழ்க்குடியின் வாள் …!

இந்தத் தொடரின் உண்மையான நோக்கம் புரிந்திருக்குமே! ஆம்; தூர் வாரப்படாமல் கிடக்கும் எனது ‘கிணற்றை’த் தூர்வாரும் முயற்சியில் ஒரு தொடர். அதற்குத் துணைபுரிந்து இடமளிக்கும் சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். ‘பழகு மொழி’ எனும் தலைப்பில் தமிழைப் பிழையறக் கற்று எழுதுவதற்கான இக்கட்டுரையை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் தொடர்ந்து வெளியிட அத்தளத்தினர் அன்புடன் இசைந்துள்ளனர்.

கற்றுக் கொடுப்பதற்காகவே கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள. சுருங்கக் கூறின், ‘தொட்டனைத்தூறும் மணற்கேணி …’ முயற்சியே இத்தொடர்.

அந்தக் குறளின் முழுமையையும் ஓர் அன்பர், “தொட்டனைத்தூறும் ம‌ண‌ற் கேணீ மாந்த‌ற்க்கு க‌ற்ற‌னைத் தூறும் அறிவு” என்று இணையத்தில் எழுதி வைத்திருக்கிறார். படிக்கும் நமக்கே வலிக்கிறது! எழுதியவன் படித்தால் என்னாகும்?

“யோவ்! எழுதுறப் படிச்சிட்டுப் போவியா, அத விட்டுட்டு எலக்கணம் எழுத்துப்பிழை எல்லாம் பார்க்கணுமாக்கும்?” என்று எரிச்சல் படும் தமிழ்க்குடி, ஆங்கிலத்தில் எவராவது பேசும்போதோ எழுதும்போதோ சிறுபிழை செய்தாலும் அறச்சீற்றம் கொண்டு விடுவார்; குறைந்தது எள்ளி நகையாடத் தவற மாட்டார்.

ஆங்கில எழுத்துகள் மொத்தம் எத்தனை? என்று கேட்டால் அடுத்த நொடியில் விடை சொல்லிவிடக் கூடிய நம்மில் எத்தனை பேர் “தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?” என்ற கேள்விக்குச் சட்டென விடை சொல்வோம்?

– அதி. அழகு

பழகு மொழி (பகுதி-1)

இதை வாசித்தீர்களா? :   பழகு மொழி் (பகுதி-11)