
(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை)
குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது தன்னியக்கமின்றி, யகர வருமொழியைச் சார்ந்து திரியும் ஓசை என்பதாலும் தமிழில் யகர வரிசையில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவு என்பதாலும் அஃது அரிதாகிப் போனது.
கவிதை புனையும் கவிஞர்கள் ஓசையழகுக்காகக் குற்றியலிகரத்தைப் பயன் படுத்துவர். முன்மொழியின் இறுதி எழுத்து வல்லின உகரக் குறிலாக (கு,சு,டு,து,பு,று) அமைந்து, வருமொழியானது ‘ய‘கரத்தில் தொடங்கும்போது முன்மொழியின் இறுதி எழுத்தான வல்லின உகரக் குறில், இகரமாகத் திரியும். அவ்வாறு திரியும்போது அதன் ஓசை குன்றி ஒலிக்கும். திரிந்தும் குன்றியும் ஒலிக்கும் இகரமே குற்றியலிகரமாகும்.
காட்டுகள் :
வீடு+யாது = வீடியாது;
காட்டு+யானை = காட்டியானை;
எழுத்து+யகரம் = எழுத்தியகரம்.
“குழலினிதி யாழினி தென்பதர்தம் மக்கள்
மழலைச் சொற் கேளாதவர்”
எனும் குறளில், “குழல் இனிது” எனும் உகர ஈற்றை, “குழல் இனிதி” என்று குற்றியல் இகரமாக மாற்றிது, வருமொழிச் சொல்லான “யாழினிது”வில் உள்ள யா ஆகும்.
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.
<முன்னுரை | பகுதி - 1 | பகுதி - 2 | பகுதி - 3 | பகுதி - 4 | பகுதி – 5 >