பழகு மொழி (பகுதி 3 )

(1):1:2 மெய்யெழுத்துகள்

‘புள்ளி எழுத்து’ என்று வழக்கிலும் ‘ஒற்று’ என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்:

(1):1:2:1 வல்லினம்

 

க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வன்மையுடன் ஒலிப்பதால் வல்லினம் என்றானது.

(1):1:2:2 மெல்லினம்

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம் என்றானது.

(1):1:2:3 இடையினம்

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிப்பதால் இடையினம் என்றானது.

குறிப்பு: என்று நாம் எழுதும் துணையெழுத்து/துணைக்கால், ஓர் ஒற்றை(புள்ளியை)த் தாங்காது. ர் என்று எழுதுவது பிழையாகும்; உயிர் மெய்யெழுத்துக்கு மட்டுமே ஒற்றை/புள்ளியைத் தாங்கும் வலுவுண்டு. எனவே, ‘ர’வுக்கு மேல் புள்ளியிட்டு ர் என்று எழுத வேண்டும்.

தற்போது நம் பயன்பாட்டில் உள்ள யுனிகோடு எழுத்துருவில் இவ்வசதி இல்லையென்பதால் நாம் அதன் வழியிலே தொடர்ந்து செல்வோம். யுனிகோடில் திருத்தம் வரக்கூடும்.

வாசகர்களுக்காகக் கடந்த வாரம் வினவப் பட்ட வினா:

“மழை நீர் உயிர் நீர்; மழை நீரை சேமிப்போம்” என்ற விளம்பரத்தில் உள்ள பிழை என்ன? காரணத்துடன் விளக்குக!

கடந்த வார வினாவுக்கான விடை:

‘நீரை’ எனும் சொல், ‘நீர்’ எனும் சொல்லோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை இணந்த சொல்லாகும் (நீர்+ஐ=நீரை).

இரண்டாம் வேற்றுமைச் சொல் இணைந்த (முன்மொழிச்) சொல்லை அடுத்து வரும் தமிழ்ச்சொல் (வருமொழி), (க்+உயிர், ச்+உயிர், த்+உயிர், ப்+உயிர் ஆகிய வல்லினத்தில் தொடங்கினால் முன்மொழியில், வருமொழியின் முதல் எழுத்தின் உயிர் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்து ஒன்று புதிதாக உருவாகி, முன்மொழியின் இறுதியில் இணைந்து கொள்ளும். இதை வலி மிகுதல் எனக் கூறுவர். பிற்பாடு வரவிருக்கின்ற வேற்றுமைப் பாடத்தில் அவற்றை விரிவாகப் பழகவிருக்கிறோம்.

எனவே, “நீரை சேமிப்போம்” என்று பிழையாக எழுதாமல் நீரைச் சேமிப்போம் என எழுதப் பழகுவோம்.

வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி:

சென்னை ப்ராட்வேயில் மாநகராட்சி நிர்வகிக்கும் ஒரு பூங்கா “ஸ்ரீ ராமுலு பூங்கா” ஆகும். அதில் ஓர் அறிவிப்பு:
“எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப் படுகிறது”

மேற்காணும் அறிவிப்பில் உள்ள பிழை யாது?

– தொடரும், இன்ஷா அல்லாஹ்.

அதி. அழகு.

< பழகு மொழி (முன்னுரை) | பகுதி – 1 | பகுதி – 2 | அடுத்த பகுதி இன்ஷா அல்லாஹ் விரைவில் >

இதை வாசித்தீர்களா? :   பழகு மொழி (பகுதி-16)