சுவனத்தில் பெண்கள் (இறுதிப்பகுதி)

Share this:

சத்தியமார்க்கம்.காம் : சுவனத்தில் பெண்கள் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது பகுதியை வாசித்துக் கொள்ளுங்கள்:


6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

(1) திருமணம் முடிப்பதற்கு முன் ஒரு பெண் இறந்து விடலாம்.

(2) திருமணம் முடித்து விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொருவரை திருமணம் முடிக்க முன்பு இறந்து விடுபவள்.

(3) திருமணம் முடித்தவள். ஆனால் அவளுடைய கணவனோடு சுவனம் நுழையாதவள். (இந்நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக).

(4) திருமணம் முடித்த நிலையில் மரணித்தவள்.

(5) ஒரு பெண் கணவன் மரணித்த பிறகு, அவள் மரணிக்கும் வரை திருமணம் முடிக்காது இருந்தவள். (6) தன் கணவன் இறந்த பின் இன்னுமொருவரை மணமுடித்தவள். உலகில் பெண்கள் சந்திக்கும் இந்நிலைமைகளுக்கு பொருத்தமானதை மறுமையில் சந்திப்பார்கள்.

1-   திருமணம் முடிக்கும்முன் இறந்து போன இவளுக்கு மனிதர்களில் ஒருவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் திருமணம் முடித்து வைப்பான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”சுவர்க்கத்தில் திருமணம் முடிக்காது யாரும் இருக்க மாட்டார்கள்” அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”உலகத்தில் திருமணம் முடிக்காது மரணித்து விட்ட பெண்ணுக்கு சுவர்க்கத்தில் அவளுக்கு விருப்பமானவரை அல்லாஹ் திருமணம் முடித்துக் கொடுப்பான். சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. இரு பாலாருக்கும் பொதுவானதே. சுவர்க்க இன்பத்தில் ஒன்றுதான் திருமணம்.”

2-   இது போன்றே விவாகரத்துச் செய்யப்பட்டவளாக மரணித்த பெண்ணுக்கும் கிடைக்கும்.

3-   இது போன்றுதான் கணவன் சுவர்க்கம் நுழையாத பெண்ணுக்குமாகும். அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் சுவனம் நுழைந்து அவள் உலகில் திருமணம் முடிக்காதவளாக இருந்தால், அல்லது அவளின் கணவர் சுவனம் நுழையாது இருந்தால் அங்கு சுவனத்திலும் திருமணம் முடிக்காத ஆண்கள் இருப்பார்கள்.” (அதாவது இந்த ஆண்கள் அந்தப் பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்வார்கள்).

4-   திருமணம் முடித்த நிலையில் இறந்து போனவள் சுவனம் நுழைந்தால் அவள் உலகத்தில் அவளுடைய கணவரை அங்கு பெற்றுக் கொள்வாள். (அவரும் சுவனபதியாக இருந்தால்)

5-   கணவன் மரணித்த நிலையில் அவள் மரணமாகும் வரையில் வேறு திருமணம் முடிக்காது இருந்தவள் இவள் அந்தக் கணவனுக்கே மனைவியாக இருப்பாள்.

6-   கணவன் மரணித்த பின் வேறொருவரை திருமணம் முடித்தவள் சுவனத்தில் தனது கடைசிக் கனவனையே அடைவாள். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் தனது கடைசிக் கணவனுக்கே உரியவள்.” ஹுதைபா (ரழி) தன் மனைவிக்கு ”நான் சுவர்க்கத்தில் உனக்கு கணவனாக இருக்க வேண்டுமென நீ விரும்பினால், எனக்குப் பின் வேறொருவரை மணமுடிக்காதே. ஏனெனில் சுவர்க்கத்துப் பெண்களுக்கு உலகில் அவர்களின் கடைசிக் கணவன்தான் கிடைப்பார். எனவேதான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களை நபியவர்களின் மரணத்தின் பின்  மணமுடிப்பதை அல்லாஹ் ஹராமாக்கினான். சுவனத்திலும் இவர்களே நபிக்கு மனைவிமார்களாவார்கள்.”

7 -ஒரு பெண் சுவனம் நுழைந்தால் அல்லாஹ் அவளை குமரிப் பெண்ணாக ஆக்கி விடுகிறான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”எந்த ஒரு பெண்ணும் வயோதிக நிலையில் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள். அல்லாஹ் அவர்களை சுவர்க்கத்தில் நுழைய வைத்து அங்கு அவர்களை குமரிகளாக ஆக்கி விடுவான்.”

8- சில ஸஹாபாக்கள் ”உலகத்துப் பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களைவிட பன்மடங்கு அழகாக இருப்பார்கள். காரணம் உலகில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிப்பட்டதாகும்.” எனவும் கூறியிருக்கின்றார்கள்.

9- இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அங்கு சுவர்க்கத்தில் யாரும் மற்றவர்களின் மனைவிமார்களை நெருங்க முடியாது தடுக்கப்பட்டிருப்பார்கள்.”

இறுதியாக அன்பின் சகோதரிகளே! சுவர்க்கம் ஆண்களுக்குப் போன்றே உங்களுக்காகவும் (பெண்களுக்காகவும்) அலங்கரிக்கப்பட்டிருக்கும். ”நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.” என அல்குர்ஆன் கூறுகின்றது (54:54,55.)

அழிவே இல்லாத சுவர்க்க வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அவசரமாக முடிந்து விடும். அன்புச் சகோதரிகளே அந்த சுவனத்தை அடைய வழி உறுதியான ஈமானும் ஸாலிஹான அமல்களுமாகும். போலியான வெறும் சுவன ஆசை மட்டும் நமக்கு அதைப் பெற்றுத்தராது. நபியுடைய இந்த பொன்மொழியை யோசித்துப்பாருங்கள். ”ஒரு பெண் ஐவேளை தொழுதும், வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றும், தனது கற்பைப் பாதுகாத்தும், கனவனுக்கு வழிப்பட்டும் நடந்து கொண்டால் ‘மறுமையில் நீ விரும்பும் வாயிலினூடாக சுவர்க்கத்தில் நுழைவாயாக’ என அவளுக்கு கூறப்படும்.” என நபி (ஸல்) கூறினார்கள்.

தான்தோன்றித்தனமாக, கட்டவிழ்த்த காளைக்கன்று போல் ஒழுக்கம் எனும் பாதுகாப்பு வளையத்திற்குள்ளிருந்து வெளியேறுவதுதான் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம், என்றெல்லாம் இன்று அழைப்பு விடுக்கின்ற அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள்(?), எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் இணைய, ஒலி, ஒளி அலைவரிசைகளிலிருந்தும் மிக எச்சரிக்கையோடு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவர்கள் உங்களை இந்த சுவன இன்பத்தை அடையவிடாது தடுப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். இவர்களைத்தான் அல்லாஹ் இப்படி எச்சரிக்கின்றான் ”(முஃமின்களே) அவர்கள் (நயவஞ்சகர்கள், காபிர்கள்) நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி (இவ்வகையில்) நீங்களும் அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். ” (4:89.)

எனவே அல்லாஹ் நமது பெண்களுக்கு சுவனம் நுழையும் பெரும் பாக்கியத்தை கொடுப்பானாக. மனித, ஜின், ஷைத்தான்களின் மாய வலைகளிலிருந்து அல்லாஹ் நம்மையும் நம் பெண்களையும் காப்பானாக. ஆமீன்.

<< தொடர்-2 (தொடர் நிறைவு பெற்றது)

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.