சுவனத்தில் பெண்கள் (தொடர்-2)

சத்தியமார்க்கம்.காம் : சுவனத்தில் பெண்கள் தொடரின் முதல் பகுதியை வாசித்துக் கொள்ளுங்கள்: https://www.satyamargam.com/0015


3- சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. மாறாக அது ”பயபக்தி உடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” என ஆண் பெண் இரு பாலரையும் சேர்த்தே குர்ஆன் கூறுகின்றது. மற்றோரிடத்தில் ”ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.” (4:124) எனவும் அல்லாஹ் கூறுகிறான்.

4- பெண்கள் சுவனத்தில் நுழைந்தால் எங்கிருப்பார்கள்? என்ன செய்வார்கள்? இப்படியாக சுவர்க்கத்தில் அவர்களின் நிலை பற்றி அதிகமான கேள்விகளைக் கேட்டு இதிலேயே தங்கள் சிந்தனையை எப்போதும் மூழ்கடித்து விடக்கூடாது.

உலகில் நாம் காணும் இழிவு, கஷ்டம், துன்பங்கள் அனைத்தும் சுவர்க்கத்தில் நுழைவதன் மூலமே இல்லாது போய்விடும். அந்த சுவர்க்க வாழ்க்கை முடிவே இல்லாத முழு இன்பம் நிறைந்த ஒரு வாழ்க்கையாகும். இதனையே அல்லாஹ் இப்படிக் கூறுகிறான் ”அவற்றில் (சுவர்க்கங்களில்) அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.” (15:48.)

மற்றுமோர் இடத்தில் ”இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கணகளுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும் ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்” (என அவர்களிடம் சொல்லப்படும்.)” (43:71.) இவை அத்தனைக்கும் மேலாக அல்லாஹ்வின் பின்வரும் கூற்றே போதுமானதாகும். ”அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான், அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும்.” (5:119)

5- சுவர்க்கத்தில் உள்ளம் ஆசை கொள்ளும் அம்சங்களாக அல்லாஹ் குறிப்பிடும் உணவு வகைகள், கண் கவர் காட்சிகள், அழகான படுக்கையறைகள், பலவிதமான உடைகள் இவை அனைத்தும் ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதே. எல்லோரும் இவ்வின்பங்களை அனுபவிப்பார்கள்.

அதிகமாக பெண்கள் தரப்பிலிருந்து வினவப்படும் ஓர் அம்சம்தான் அல்லாஹ் சுவர்க்கத்தை மக்களுக்கு ஆசையூட்டும்போது அங்கு ஆண்களுக்கு ‘ஹூருல் ஈன்’ பெண்கள் சுவர்க்கத்தமிலிருப்பதாகவும் இன்னும் அழகான பெண்கள் இருப்பதாகவும் கூறுகிறான் ஆனால் இது போல் பெண்கள் சம்மந்தமாக ஏதும் கூறவில்லையே, பெண்களுக்கு என்ன கிடைக்கும்? என்பதாகும்.

இதற்குரிய விடையை இப்படி நாம் பார்க்கலாம்.

(1) அல்லாஹ் ”அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது, ஆனால் அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.” ஆனால் ஏன் அல்லாஹ் இந்த வியத்தை இப்படி வைத்திருக்கிறான் என்பதை இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களுக்குள்ளே இருந்து விளங்கிக் கொள்ள முயற்சிப்பதில் குற்றம் ஏதும் இருக்காது.

இதை வாசித்தீர்களா? :   அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) புதிய தொடர் அறிமுகம்

(2) எல்லோரும் ஏற்றுக் கொள்வது போல் பெண்களிடம் காணப்படும் இயற்கையான ஒரு அம்சம்தான் வெட்கம். இதனால் இறைவன், பெண்கள் வெட்கப்படும் ஒரு விஷயத்தைக் கொண்டு அவர்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டவில்லை.

(3) பெண்கள் மீது ஆண்கள் ஆசை கொள்ளும் அளவுக்கு ஆண்கள் மீது பெண்கள் ஆசை கொள்வதில்லை. எனவே அல்லாஹ் ஆண்கள் மிக ஆசை கொள்ளும் இவ்வம்சத்தின் மூலம் ஆண்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டுகின்றான். நபி (ஸல்) அவர்கள் ”எனக்குப் பின் நான் உங்களில் அதிகம் பயப்படும் விஷயம் பெண்களால் ஏற்படும் பித்னாக்களைத்தான்” என்று கூறியிருக்கின்றார்கள். பெண்கள் ஆண்கள் மீது ஆசை கொள்வதை விட அழகு, ஆபரணங்கள், அலங்காரம் போன்றவற்றில் மிக மிக ஆசை கொண்டவர்களாகவே இருப்பார்கள். இது அவர்களின் சுபாவமாகும்.

(4) இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அல்லாஹுதஆலா ஆண்களுக்கு மனைவிமார்கள் (சுவர்க்கத்தில்) உண்டு எனக்கூறியது, எப்போதும் ஆண்களே பெண்களைத் தேடுவார்கள் (ஆசையோடு அழைப்பார்கள்) எனவே சுவர்க்கத்தில் மனைவிமார்கள் உண்டு எனக்கூறி பெண்களுக்கு கணவன்மார்கள் பற்றி கூறவில்லை. ஆனால் இதனால் சுவர்க்கத்தில் பெண்களுக்கு கணவர்மார்கள் இல்லை என்பது அர்த்தமல்ல. அவர்களுக்கும்(பெண்களுக்கு) மனிதர்களிலிருந்தும் கணவன்மார்கள் அங்கிருப்பார்கள்.

6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். அது என்ன? தொடர்ந்து வாசியுங்கள்.

<< தொடர்-1 | தொடர்-3 >>