தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 3)

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கருதப்படும் ஹதீஸ்களில் நபித்தோழர் அபூ ராஃபிவு(ரலி) மற்றும் பிரபல நபித்தோழரான அனஸ்(ரலி) போன்றவர்கள் அறிவிப்பதாக வரும் ஹதீஸ்களின் தரத்தினைக் குறித்து கண்டோம். அடுத்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியின் தரத்தினைக் குறித்து காணலாம்.


நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: “நீ என்னிடம் நாளை வா! நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன் , உனக்கு நன்மையைத் தருகிறேன். உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன்” என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன்.

“(அப்போது) பகல் சாயும்போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு! (என்று கூறி முன்னர் அபூ ராஃபிவு (ரலி) அறிவித்ததைப் போன்று கூறினார்கள்.) பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 10 தடவை, அல்லாஹு அக்பர் 10 தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் 10 தடவை கூறாமல் எழாதே! பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்! இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப்பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் இவ்வாறு செய்ததால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும்” என்றார்கள். அப்போது நான் அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்? என்று கேட்டதற்கு “பகலில் இரவில் ஏதாவது ஒருநேரத்தில் தொழுது கொள்!” என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: அபூதாவூத் (1105).

தஸ்பீஹ் தொழுகை உண்டு என கருதும் சில அறிஞர்கள் இந்த ஹதீஸினையும் அதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரங்களில் அமைந்த ஹதீஸ் அன்று.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை, நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபுல் ஜவ்ஸாயி, அம்ர் பின் மாலிக்…… என்றவாறு அமைந்துள்ளது.

இந்த அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவதாக வரும் அம்ர் பின் மாலிக் என்பவரை நம்பகமனவர் இல்லை என ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஆட்சேபிக்கின்றனர்.

அம்ர் பின் மாலிக் அந்நுக்ரீ என்பவர் நம்பகமானவர்களிடமிருந்து மறுக்கப்படவேண்டிய செய்திகளை அறிவிப்பவர் . மேலும் ஹதீஸ்களைத் திருடுபவர்.  அமர் பின் மாலிக் அந்நுக்ரீ என்பவரை அபூயஃலா அவர்கள் பலவீனமானவர் என்று கூற நான் கேட்டுள்ளேன் என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல் காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால் பாகம் 5 பக்கம் 150)

இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் என்ற நூலில் (பாகம் 2, பக்கம் 231) எடுத்தெழுதியுள்ளார்கள்.

இதை வாசித்தீர்களா? :   அமாவாசை நிலாக்கள்! - புதிய தொடர் அறிமுகம்

எனவே நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் மேற்கண்ட ஹதீஸ் தஸ்பீஹ் தொழுகை உண்டு என்பதற்கான ஆதாரப்பூர்வ ஹதீஸ் அல்ல.

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.

< பகுதி-2 | பகுதி-4 >