தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 2)

சென்ற பகுதியில் தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக வைக்கப்படும் ஹதீஸ்களில் நபித்தோழர் அபூ ராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் செய்தியின் தரத்தினைக் குறித்து கண்டோம். இப்பகுதியில் பிரபல நபித்தோழரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் ஹதீஸினைக் குறித்து விரிவாக காண்போம்.


உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ”தொழுகையில் நான் ஓதுவதற்குச் சில வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”பத்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! பின்னர் நீ விரும்பியதைக் கேள்!” என்றார்கள். நான் ”சரி! சரி!” என்றேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி (443)

இதே செய்தி ஹாகிம்(எண் 1191), நஸயீ(எண் 1282), அஹ்மத்(எண் 11762) போன்ற ஹதீஸ் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனஸ் (ரலி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கும் இந்த செய்தி திர்மிதி, நஸயீ, அஹ்மத், ஹாகிம் ஆகிய நான்கு நூல்களில் இடம் பெற்றுள்ளது. அந்த நான்கு நூல்களிலும்,

நபி (ஸல்) அவர்கள் “பத்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! பின்னர் நீ விரும்பியதைக் கேள்! ” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

ஆனால் எந்த நூலிலும் இது தஸ்பீஹ் தொழுகைக்குரியது என்ற வாசகம் இடம்பெறவில்லை. எனவே இச்செய்தி தஸ்பீஹ் தொழுகை தொடர்புடையது என்ற வாதம் ஏற்கத்தக்கதன்று.

மேலும் அனஸ் (ரலி) அவர்கள், உம்முஸுலைம் (ரலி) மூலம் அறிவிக்கும் இதே செய்தி முஸ்னத் அபீயஃலா என்ற நூலில் (ஹதீஸ் எண் 4292) இடம் பெற்றுள்ளது. அதில் “கடமையான தொழுகையை தொழுதபின் ஸுப்ஹானல்லாஹ் பத்து தடவைச் சொல்….” என்றவாறு இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற தலைப்பில் இமாம் திர்மிதி கொண்டு வந்துள்ளதை இமாம் இராக்கீ அவர்கள் ஆட்சேபணை செய்துள்ளார்கள்.

இமாம் இராக்கீ அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற பாடத்தில் கொண்டு வந்திருப்பது ஆட்சேபணைக்குரியதாகும். ஏனெனில் இது ஐவேளைத் தொழுகைக்கு பிறகு தஸ்பீஹ் சொல்லுவது தொடர்பாக வந்த செய்தியாகும்.”

இந்த ஹதீஸ் தொடர்பாக முஸ்னத் அபீயஃலா மட்டுமின்றி, தப்ரானியின் துஆ என்ற நூலிலும் வேறு பல வழிகளில் வந்துள்ள செய்திகள் இமாம் இராக்கீயின் கருத்தை தெளிவுபடுத்துகின்றன. அதில், “உம்மு ஸுலைமே! நீ கடமையான தொழுகையைத் தொழுது விட்டால் ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை கூறு!….என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” இவ்வாறாக இடம் பெற்றுள்ளது.

மேலும், “இந்த ஹதீஸின் அடிப்படையில் தஸ்பீஹ் தொழுகையின் இந்த முறையின் பக்கம் (இந்த ஹதீஸில் கூறப்பட்டவாறு) எந்த அறிஞர்களும் செல்லவில்லை.” (நூல்: துஹ்பத்துல் அஹ்வதீ)

என்ற கருத்தும் கவனத்திற்கு எடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

மேலும் இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டால் இந்த ஹதீஸில் வரும் முறைபடியே தஸ்பீஹ்களைக் கூறவேண்டும். அதாவது ஒவ்வொரு தஸ்பீஹும் 10 தடவைக்கு மிகாமல் கூற வேண்டும். ஆனால் தஸ்பீஹ் தொழுகை உண்டு எனக் கூறி அதனை கடைபிடிப்பவர்கள் யாரும் இந்த முறையினை கடைபிடிப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இந்த ஹதீஸைப் பொறுத்தவரை இது கடமையான தொழுகைக்குப் பின் கூற வேண்டிய தஸ்பீஹ் என அறிஞர்கள் கருத்து கூறியிருப்பதாலும், இந்த ஹதீஸில் வரும் முறைப்படி தஸ்பீஹ் தொழுகையை சரி காண்பவர்கள் தஸ்பீஹ் கூறாததாலும் இந்த ஹதீஸினை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கொள்ள முடியாது.

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

< பகுதி-1 | பகுதி-3 >

இதை வாசித்தீர்களா? :   பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 8