கஸர் தொழுகை – (முன்னுரை)

தொழுகை என்பது முஸ்லிமான ஒருவர் அல்லாஹ் மீது தான் கொண்ட நம்பிக்கையை உலகுக்குப் பறைசாற்றும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டுவிட்ட ஒருவர் அடுத்து செய்ய வேண்டிய முதல் செயலும் இது தான். அவ்வாறு அவர் நம்பிக்கை கொண்டு விட்ட தருணத்திலிருந்து அவரின் வாழ்நாள் முழுக்க தினமும் ஐவேளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவும் அது மாறிவிடுகிறது. அதன்பின்னர் நம்பிக்கை கொண்டோருக்குத் தொழுகையை எந்த சூழ்நிலையிலும் விடுவதற்கு அனுமதியில்லை என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

……நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.(அல்குர்ஆன் 4:103)

எளிமையான மார்க்கமாக இறைவனால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட இஸ்லாத்தில் தொழுகை என்பது கட்டாயக்கடமை ஆகும். அதனை நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமும் முனைப்புடன் செய்ய வேண்டிய செயலாகும். இதனாலேயே போர் வேளைகளில் கூட, படையினர் இரண்டு பிரிவாக பிரிந்துக் கொண்டு தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற அல்லாஹ் கட்டளையிடுகின்றான். (பார்க்க அல்குர்ஆன் 4:102)

முஸ்லிமையும் முஸ்லிமல்லாதவாரையும் வேறுபடுத்திக் காட்டுவதே தொழுகைதான் எனவும்(முஸ்லிம்), யார் ஒருவர் தொழகையை விட்டுவிடுகிறாரோ அவர் நம்பிக்கையற்றவராகவே (இறைமறுப்பாளராக) மரணிக்கிறார்(திர்மிதி) எனவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுப்பதன் மூலம் தொழுகையின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம்.

தொழுகையின் சிறப்பாக அல்லாஹ் கூறுகிறான்

.….இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக. நிச்சயமாகத் தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்(அல்குர்ஆன் 29:45)

இவ்வளவு சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த தொழுகையை விட்டு புத்திசுவாதீனமில்லாதவர்கள் மற்றும் மாதவிலக்கு கால பெண்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர தொழும் வயது வந்து விட்ட அனைவரும் தொழுகையைக் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும். யாருக்காவது நோயினால் ஏதாவது சிரமம் ஏற்பட்டிருந்தால் கூட, அவ்வேளைகளில் “உங்களில் நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்து கொண்டும், உட்கார்ந்து தொழ முடியாதவர் படுத்துக் கொண்டும் அதற்கும் முடியாதவர் கண்ணசைவின் மூலமாகவும் தொழ வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

இதனைத் தவிர சில சிரமமான வேளைகளில் கடமையான தொழுகைகளைச் சுருக்கித் தொழுவதற்கு அல்லாஹ்வால்இவ்வாறு அனுமதிவழங்கப்படுகிறது.

நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது,(மற்றும்) காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது….(அல்குர்ஆன்4:101)

தொழுகை கட்டாயமாக்கப்பட்ட பின்னர் அச்சமான சூழ்நிலைகளிலும், பயணத்தின் போதும் இந்த அனுமதி சிறப்பு அனுமதியாக அல்லாஹ்வின் கொடையாக கூறி நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளார்கள்.

ஒருவர் பயணம் செய்யும் போது பயணத்தின் சிரமம் காரணமாகத் தொழுகையை விட நேர்ந்து இறைக்கட்டளைக்கு மாறு செய்ய நேராமல் இருக்க இஸ்லாம் காட்டித் தரும் ஓர் எளிய வழி தான் கஸர் எனப்படும் சுருக்கித் தொழப்படும் தொழுகை ஆகும். ஒருவர் பயணத்தின் போது அவரால் ஐவேளைத் தொழுகைகளை நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் தொழமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதனால் ஏற்படும் குற்றத்திலிருந்து அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இறைவன் வழங்கிய மிகப்பெரும் கொடையே கஸர் தொழுகை ஆகும்.

இதை வாசித்தீர்களா? :   பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 5

இந்த சுருக்கித் தொழுதல் எனக் கூறப்படும் கஸ்ர் தொழுகையைக் குறித்தும் அதனை எப்படி எப்பொழுது எதற்காக நிறைவேற்றுவது என்பதனைக் குறித்தும் இன்று முஸ்லிம் சமூகத்திடையே பரவலாக கேள்விகள் இருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பயண வேளைகளில் இது போன்று சுருக்கித் தொழுததை ஹதீஸ்களில் காணமுடிகிறது.

“அல்லாஹ் தனக்கு மாறு செய்வதை எவ்வாறு வெறுக்கிறானோ அவ்வாறே தான் அளித்த சலுகையை ஏற்றுக்கொள்வதை விரும்புகிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (அஹ்மத்)

கஸர் தொழுகையானது பயணத்தின் போது உங்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வரும் கொடை; அதனை மறுக்காதீர் (நபிமொழி ஆதாரம் முஸ்லிம்)

இவ்வாறு பயணத்தின் பொழுது கொடுக்கப்பட்ட அனுமதியாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் கொடையாகவும் இருப்பதால் அதனைப் பயன்படுத்துவதும் நம்பிக்கையின் பாற்பட்டதாகிறது. எனவே இவ்வனுமதியைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்வதும் நம்பிக்கையாளர்களுக்கு அவசியமாகிறது.

* ஒருவர் பயணம் மேற்கொள்ளும் பொழுது எவ்வளவு தூரம் வரை சென்றால் அது பயணம் ஆகும்?

* சொந்த இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பணி நிமித்தமாகவோ, வியாபார நிமித்தமாகவோ பயணம் செய்பவர் எத்தனை நாட்கள் வரை புதிய இடத்தில் தங்கியிருந்தால் அவருக்கு கஸ்ர் செய்ய அனுமதி உள்ளது?

* சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து வருடக்கணக்கில் மற்றோர் இடத்தில் நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட கால அளவிலோ தங்கியிருப்பவர் கஸ்ர் தொழலாமா?

போன்ற விஷயங்களைக் குறித்து விரிவாக வரும் தொடர்களில் இன்ஷா அல்லாஹ் காணலாம்.

பகுதி 1 >