பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 6

Share this:

டந்த 15-07-2006 முதல் தொடரும் இஸ்ரேலின் பாலஸ்தீன் மற்றும் லெபனான் மீதான சமீபத்தியத் தாக்குதல்கள் உலகில் தன்னை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற அகம்பாவத்தின் பிரதிபலிப்பாகும். இச்செயல் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு உலக சமாதானத்துக்கும் மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது. உலக சமாதானத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஜெனீவா உடன்படிக்கையை மீறிக்கொண்டு எவ்வித உலக சட்டங்களுக்கும் கட்டுப்படாமல் அந்நிய நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் அக்கிரமச் செயலுக்கு எதிராக களமிறங்கவோ அல்லது குறைந்தபட்சம் அதனை கண்டிக்கவோ தங்களை நடுநிலை நாடுகள் எனக் கூறிக் கொள்ளும் நாடுகள் கூட முன் வராததற்குரிய காரணங்கள் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

இஸ்ரேல் அத்துமீறும் நாடுகள் முஸ்லிம் நாடுகள் என்பதும், முஸ்லிம்கள் எனில் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் சமீபகாலங்களில் உலக மக்களின் மனதில் ஆணித்தரமாக பதியும் விதத்தில் உலக ஊடகங்கள் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பியதும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.

மேற்குலக நாடுகள், முஸ்லிம் நாடுகள் தாக்கப்படும்போது மட்டும் ஏன் இந்த இரட்டை நிலைபாடு எடுக்கிறது என்பதற்குக் காரணம், மத்திய கிழக்குப் பகுதிகளில் அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முஸ்லிம் நாடுகள் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன இருக்க இயலும்? இதற்கு மேற்குலக நாடுகள் தங்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதமே பயங்கரவாத, தீவிரவாத ஒழிப்பு. இவ்வார்த்தையைக் கூறும்பொழுது அதன் தாக்கத்தால் உலக நாடுகள் அவர்களின் செயல்களை கேள்வி கேட்காது என்பது அவர்களின் கணிப்பாகும்.

இதனை தற்போது நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் சகிப்புத்தன்மை அற்றவர்கள் யார்? பயங்கரவாதிகள் யார்? இதனை தெரிந்து கொள்ள சற்று பின்னோக்கி நகர வேண்டும். முஸ்லிம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்ற அபாண்டத்தை சுமத்தி அதனை நிரூபிக்க சகல சக்திகளையும் உபயோகித்துக் கொண்டிருக்கும் மேற்கத்தியர்களின் முன்னோர் பாலஸ்தீனில் உள்ள ஜெரூசலம் நகரை கைவசப்படுத்தியபோது என்ன செய்தனர் என்பதை இப்போது பார்ப்போம்.

சிலுவைப்போர் காலத்தில் ஜெரூசலத்தைக் கைப்பற்றிய இவர்கள் முஸ்லிம்களையும், யூதர்களையும் நகரத்தில் இருந்து விரட்டி அடித்தனர். 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுல்தான் ஸலாஹூத்தீன் அய்யூபி ஜெரூசலத்தைக் கைப்பற்றிய பிறகு தான் யூதர்களுக்கு மீண்டும் அங்கு குடியிருக்க முடிந்தது.

தொடர்ந்து ஓட்டோமன் ஆட்சி காலம் முழுவதும் யூத, கிறிஸ்தவ தேவாலயங்கள் அங்கு பாதுகாப்புடன் இருந்தன. சகிப்புத்தன்மைக்கு மகத்தான முன்னுதாரணமாக விளங்கும் இந்த வரலாற்றுச் சம்பவத்திற்கு இணையான ஒரு நிகழ்வைக் கூட மேற்கத்திய சிலுவைப் போர் நாயகர்களின் வரலாற்றில் காண முடியாது.

அதே போல் 1976 -ல் சியோனிஸ இஸ்ரேல் அரசு ஜெரூசலத்தைக் ஆக்கிரமத்தபோது இதனைவிட கொடுமையான சம்பவங்கள் அங்கு அரங்கேறின. ஜெரூசலம் நகரில் உள் நுழைந்த சில மணித் துளிகளிலேயே மேற்கு ஜெரூசலேமில் குடியிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அடுத்த 3 மணி நேர காலத்திற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய சியோனிஸ பயங்கரவாதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் புல்டோஸர்கள் கொண்டு அவ்விடங்களை இடித்து தரைமட்டமாக்கினர்.

இச்சம்பவத்தைக் குறித்து கரன் ஆம்ஸ்ட்ராங் தனது நூலில் விவரிக்கிறார். (Karen Amstrong, Jerusalem: One city, Three Faiths – Knopf:NY, 1996, Page. 403) பிற்காலத்தில் ஜெரூசலத்திற்கு மேயராக நியமிக்கப்பட்ட டெடி கொலெக் என்பவர்தான் இம்மாபாதக செயலுக்கு பின்புலமாக செயல்பட்டவர். அவரது எண்ணம் அங்குள்ள ஆயிரக்கணக்கான யூதர்களை குடியிருத்துவதாக இருந்தது.

யுத்தத்தின் மூலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் தன் நாட்டு மக்களை குடியிருத்தக்கூடாது என்ற ஜெனீவா உடன்படிக்கையின் சர்வதேச விதிகளை மதிக்காமல் காலில் போட்டு மிதித்து இந்த அக்கிரமச் செயலைச் செய்த இவர்கள் தான் இன்று சமாதானத்தின் தூதர்களாக வலம்வருகின்றனர். சகிப்புத்தனமையற்ற பரம்பரையினர் உருவாக்கிய சிலுவைக் காவலர்களின் வழிவந்தவர்கள் தான் இன்று தங்களது ஊடகங்கள் வழி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் அக்கிரமக்காரர்களாகவும் சித்தரிக்கின்றனர்.

ஜெரூசலேமில் பாலஸ்தீனியர்களை மிருகத்தனமாக நடத்திய இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை விலாவாரியாக கூறும் நூல் “Separate and Unequal: The inside Story of Israeli Rule in East Jerusalem – Harward University Press :Harward – 1999”. இதனை எழுதியவர்கள் Amir Cheshin, Bill Hutman, Avi Melamed என்ற மூன்று இஸ்ரேலியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜெரூசலேமில் உள்ள முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களில் ஒன்றான அல் அக்ஸா பள்ளிவாசலைத் தரிசிப்பதை விட்டும் காஸாவில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனியர்களையும், மேற்குக் கரையில் உள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.

ஒரு சில கிலோமீட்டர் அருகிலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை தரிசிப்பதை விட இவர்களுக்கு மிக எளிதானது ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள மக்கா பள்ளிவாசல் தரிசிப்பதாகும். இம்மாபாதக செயல்கள் 1967 க்கு முன் முதன்முதலாக இஸ்ரேல் உருவான வேளையிலிருந்தே இது போன்றுதான் நடந்து வருகிறது. “1948 ல் யுத்தத்திற்குப் பிறகு ஜெரூசலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜெரூசலேமின் மேற்குப் பாகத்தில் இருந்து 30,000 பாலஸ்தீனியர்கள் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டு அடித்து விரட்டப்பட்டனர். அங்கு இருந்த 400 க்கும் அதிகமான கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

கிராமங்கள் அழித்து முடிந்த வேளையில் அங்கிருந்த அனைத்து பள்ளிவாசல்களும் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது”. ஜெரூசலேமின் முன்னாள் துணை மேயர் மெரோன் பென்வெனிஸ்டி, தான் எழுதிய புத்தகத்தில் மேற்குறிப்பிட்ட இந்த சம்பவத்தை “வம்ச ஒழிப்பு”(Ethnic Cleaning) என விரிவாகக் குறிப்பிடுகிறார்.(Sacred Landscape – Meron Benvenisti:U.C.P 2000).

ஜெரூசலம் நகரை முஸ்லிம்களாகிய உமர் மற்றும் சலாஹுத்தீன் அய்யூபி கைவசப்படுத்தியபோது காட்டிய விசாலமான மதசகிப்புத்தன்மை மற்றும் விசாலமான மனப்பான்மையோடு, சிலுவைப்போர் நாயகர்களான மேற்கத்தியர்கள் மற்றும் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை ஒப்பிட்டு பார்த்தாலே சமாதானத்தின் தூதர்கள் யார் என்பது தெளிவாக புரியும்.

–அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.